2010-05-24 16:01:44

ஜாம்பியக் கத்தோலிக்கரின் வாழ்க்கைமுறையாக விசுவாசத்தை மாற்ற வேண்டும்- அந்நாட்டு ஆயர்


மே 24, 2010. ஜாம்பியா, தன்னை ஒரு கிறிஸ்தவ நாடு என அழைக்க முடியும் என்கின்ற போதிலும் அந்நாட்டுக் கத்தோலிக்கர்களின் வாழ்க்கைமுறையாக விசுவாசத்தை மாற்றுவதற்கு மேலும் பணியாற்ற வேண்டியுள்ளது என்றார் பேராயர் Telesphore Mpudu.

1991ம் ஆண்டிலேயே அரசுத்தலைவர் Chiluba, Zambia வை ஒரு கிறிஸ்தவ நாடு என அறிவித்துள்ள போதிலும் அந்நாட்டில் எல்லா மதத்தவரும் சரிசமமாகவே நடத்தப்படுவதாகவும், எவ்வித பாகுபாடும் காட்டப்படுவதில்லை எனவும் கூறினார் அவர்.

அரசியல் காரணங்களுக்காகவே அரசுத்தலைவரால் இத்தகைய அறிவிப்பு விடப்பட்டது என்ற பேராயர், கிறிஸ்தவர்களின் வாக்குகளை குறிவைக்கும் இவ்வரசு, மதச்சார்பற்ற ஒன்றாக செயல்படவேண்டும் என்பதையே தலத்திருச்சபை விரும்புகிறது எனவும் கூறினார்.

ஒரு கோடியே இருபது இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சாம்பியாவில் முப்பது இலட்சம் பேரே கத்தோலிக்கர்கள் எனினும் அவர்களின் கல்விப் பணி குறிப்பிடும்படியானது எனவும் உரைத்தார் பேராயர் Mpundu.

ஆப்ரிக்காவில் பரவி வரும் இஸ்லாம் மதம் குறித்து சாம்பியத் திருச்சபை அச்சம் கொள்ளவில்லையெனவும், கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை ஆழப்படுத்த அது புதிய வாய்ப்பு ஒன்றைத் தந்துள்ளது எனவும் கூறிய பேராயர், இளைஞர்களின் நடவடிக்கைகள் மிகுந்த நம்பிக்கை தருபவைகளாக உள்ளன எனவும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.