2010-05-22 14:44:11

திருத்தந்தை - உலக நிதி அமைப்பில் அறநெறியும் ஒருமைப்பாட்டுணர்வும் அவசியம்


மே22, 2010 இன்னும், "Centesimus Annus-Pro Pontifice" என்ற பாப்பிறை அமைப்பின் 280 உறுப்பினர்களை இச்சனிக்கிழமை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, உலக நிதி அமைப்பில் அறநெறியும் ஒருமைப்பாட்டுணர்வும் அவசியம் என்று கூறினார்.

ஏழைநாடுகளை வாட்டும் சூழலில் அரசுகள் சரியான விதத்தில் செயல்படத் தவறியுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, ஆள்பவர்கள் மத்தியில் மனச்சான்று மற்றும் அறிவின் ஒருங்கிணைந்த அறநெறிச் செயல்பாடு பலவீனமாக இருப்பது போல் தெரிகின்றது என்றும் தெரிவித்தார்.

நிதியமைப்பில் அரசியல் எப்பொழுதும் முன்னிற்க வேண்டும் மற்றும் நன்னெறிகள் அனைத்துச் செயல்பாடுகளையும் வழிநடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மனித வளர்ச்சி குறித்த கருத்தியலானது, நாடு, சமூகம், சந்தை ஆகிய இவற்றுக்கிடையேயான சார்புநிலை, தோழமை, ஒத்துழைப்பு போன்றவற்றைப் பொருத்தது என்று கூறினார்.

உலகத்தாராளமயமாக்குதல், பொதுநலனைக் கண்முன் கொண்டதாய் அமையுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பல மக்களையும் பல மதங்களையும் கொண்ட உலகளாவிய சமுதாயத்தில், பொது நலனும் ஒருங்கிணைந்த முன்னேற்றமும் அனைவரின் பங்கேற்பினால் ஏற்படக்கூடியது என்றும் கூறினார்.

உலகப்போக்கு நிறைந்து வரும் இன்றைய சமுதாயத்தில் கடவுளைப் பற்றியும் உலகில் அவருக்கான இடம் பற்றியும் மதங்கள் போதிப்பதால், இதில் மதங்களுக்குக் குறிப்பாக, அவை சகோதரத்துவத்தையும் அமைதியையும் போதிக்கும் போது முக்கிய அங்கம் வகிக்கின்றன என்று திருத்தந்தை கூறினார்.

திருச்சபையின் சமூகப்போதனைகளை நன்றாக அறியச் செய்வதற்கு உதவும் நோக்கத்தில் 1991ம் ஆண்டு மே ஒன்றாந்தேதி CAPP என அழைக்கப்படும் "Centesimus Annus Pro Pontifice" என்ற அமைப்பை மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உருவாக்கினார். இந்த அமைப்பானது உலகின் பிற சமய அமைப்புக்களோடு சேர்ந்து வேலை செய்கின்றது.








All the contents on this site are copyrighted ©.