2010-05-22 14:49:59

அரசுகளின் இராணுவப் படைகளும் புரட்சிக் குழுக்களும் சிறாரின் உரிமைகளைத் தொடர்ந்து மீறி வருகின்றனர் - ஐக்கிய நாடுகள் நிறுவனம்


மே22,2010 உலகில் ஆயுதம் தாங்கிய சண்டைகள் நடைபெறும் இடங்களில் சிறாரின் உரிமைகளைத் தொடர்ந்து மீறி வருகிறவர்கள் அரசுகளின் இராணுவப் படைகளும் புரட்சிக் குழுக்களுமே என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் முதன்முறையாக அறிவித்துள்ளது.

ஆசியா, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சிறார் ஆயுதம் தாங்கிய சண்டைக்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சண்டையிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று ஐ.நா.பொதுச் செயலரின் சிறார் மற்றும் ஆயுதம் தாங்கிய சண்டைகளுக்கானச் சிறப்புப் பிரதிநிதியின் ஆண்டறிக்கை கூறுகிறது.

பிலிப்பைன்ஸ், மியான்மார், காங்கோ ஜனநாயகக் குடியரசு, சூடான், கொலம்பியா எனப் பல நாடுகளில் 16, பல்வேறு இராணுவங்களும் புரட்சிக் குழுக்களும் குறைந்தது கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறார் படைவீரர்களைப் பயன்படுத்துகின்றன என்று அவ்வறிக்கை கூறுகிறது.

கொலைகள், ஊனப்படுத்துதல், கற்பழிப்பு மற்றும்பிற பாலியல் பலாத்காரங்கள் போன்ற மிகக் கொடுமையான வன்செயல்களுக்கு சிறார் பயன்படுத்தப்படுகின்றனர் என்று இவ்வறிக்கையை சமர்ப்பித்த இராதிகா குமாரசாமி கூறினார்.

உளவாளிகளாக, படைவீரர்களாக, மனிதக் கேடயங்களாக சிறார் பயன்படுத்தப்படும் உலகில் இன்றும் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று இராதிகா குமாரசாமி எச்சரித்தார்.








All the contents on this site are copyrighted ©.