2010-05-21 15:12:02

திருத்தந்தை - கிறிஸ்தவப் பிறரன்பைக் கடைபிடிப்பதற்கு அரசியல் மிகவும் முக்கியமான சூழலாக இருக்கின்றது


மே21,2010 உண்மையான கிறிஸ்தவ அரசியல்வாதிகள் தேவைப்படும் அதேவேளை, அதற்கு முன்னதாக, அரசியல் மற்றும் பொது வாழ்வில் கிறிஸ்தவ பொதுநிலை விசுவாசிகள் கிறிஸ்துவுக்கும் நற்செய்திக்கும் சாட்சிகளாகத் திகழ வேண்டுமென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.

திருப்பீட பொதுநிலையினர் அவை நடத்தும் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சுமார் நூறு பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவப் பிறரன்பைக் கடைபிடிப்பதற்கு அரசியல் மிகவும் முக்கியமான சூழலாக இருக்கின்றது என்று கூறினார்.

நாடுகளிலும் சர்வதேச அளவிலான அலுவலகங்கள், திட்டங்கள் போன்றவற்றிலும் நல்லதொரு பொதுநல வாழ்வை அமைப்பதற்குக் கிறிஸ்தவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தத் திருத்தந்தை, இத்தகைய வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதற்கு திருச்சபை இயக்கங்களும் பள்ளிகளும் புதிய பக்த இயக்கங்களும் உதவ முடியும் என்றும் கூறினார்.

அண்மைக்காலக் கலாச்சாரப் போக்கும், இன்பமே சிறந்ததென்ற கொள்கையும், நுகர்வுத்தன்மையும் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தியுள்ளன மற்றும் உறுதியான அதிகாரப் போக்கை வளர்த்து வருகின்றன, எனவே உண்மையான அரசியல் ஞானம் இக்காலத்திற்குத் தேவைப்படுகின்றது எனவும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

அரசியல் சமூகத்தில் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்தல் என்ற தலைப்பில் வத்திக்கானில் இவ்வியாழனன்று தொடங்கிய இத்திருப்பீடப் பொதுநிலை அவையின் ஆண்டுக் கூட்டம் இச்சனிக்கிழமை நிறைவடைகின்றது.








All the contents on this site are copyrighted ©.