2010-05-20 14:57:47

திருப்பீடத்திற்கான அரபு ஐக்கிய நாட்டு புதிய தூதுவர் திருத்தந்தையை சந்தித்தார்.


மே. 02. 2010. அரசியல் தூதுவர் அளவிலான திருச்சபையின் நடவடிக்கைகள், இனம் மதம் நிறம் என்ற வேறுபாடு பார்க்காமல் அமைதியை, மனித உரிமைகளை, ஒன்றிணைந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கானதாகும் என்றார் திருத்தந்தை.

திருப்பீடத்திற்கான அரபு ஐக்கிய கூட்டாட்சியின் தூதுவர் Hissa abdulla Ahmed Al-Otaiba யிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்ற வைபவத்தில் இவ்வாறு உரையாற்றிய திருத்தந்தை, இத்தகைய பணிகள் மூலம் திருப்பீடமும் கத்தோலிக்கத் திருச்சபையும் மனித மாண்பை மேம்படுத்துவதிலும் மனித குலத்திற்கான பணியிலும் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றன என்றார்.

அரபு ஐக்கிய கூட்டமைப்பு நாடு பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது பற்றியும் குறிப்பிட்டு பாராட்டிய திருத்தந்தை, இதன் மூலம் அத்தொழிலாளர்கள் தங்கள் உழைப்பை மட்டும் கொடுக்கவில்லை மாறாக தங்கள் இருப்பின் மூலம் மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மக்களினத்திடையேயான சந்திப்பிற்கும் உதவுகின்றனர் என்றார்.

அம்மண்ணில் கத்தோலிக்க கோவில்கள் கட்டப்படுவதற்கு அரசு வழங்கியுள்ள உதவிகளுக்கும் தன் பாராட்டுதல்களை வெளியிட்டார் பாப்பிறை.

2007ம் ஆண்டே திருப்பீடத்திற்கும் அரபு ஐக்கிய குடியரசிற்கும் இடையே அரசியல் உறவு ஏற்பட்டுள்ள போதிலும் தற்போதுதான் முதன்முறையாக திருப்பீடத்திற்கான அரசியல் தூதுவர் நியமிக்கப்பட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.