2010-05-20 15:02:22

இலங்கைப் போரில் இறந்த அப்பாவி பொதுமக்களை கிறிஸ்தவத் தோழமை இயக்கம் செப வழிபாட்டில் நினைவு கூர்ந்தது


மே20, 2010 இலங்கையில் அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற போரில் இறந்த அப்பாவி பொதுமக்களை நினைத்து அந்நாட்டுக் கிறிஸ்தவத் தோழமை இயக்கம் செப வழிபாட்டை நடத்தியது.

இவ்வாரத்தில் கொழும்புவில் நடைபெற்ற இச்செப வழிபாட்டில், கத்தோலிக்க அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் உட்பட கத்தோலிக்க, மெத்தோடிஸ்ட், ஆங்லிக்கன் ஆகிய கிறிஸ்தவ சபைகளின் நூற்றுக்கணக்கான விசுவாசிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் 26 வருட உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது என்று 2009ம் ஆண்டு மே மாதத்தில் அரசு அறிவித்தது. அதன் ஓராண்டு நிறைவை தற்சமயம் அரசு தனது வெற்றியாகக் கொண்டாடி வரும்வேளை, இந்த நீண்டகாலப் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பற்றி அரசு கவலைப்படவில்லை என்று இலங்கை கிறிஸ்தவத் தோழமை இயக்க உறுப்பினர் மகிந்த நமல் அரசை குறை கூறினார்.

எனினும் இந்தச் செப வழிபாடு போரில் இறந்த அப்பாவி மக்களை நினைக்க உதவியிருக்கின்றது என்று நமல் மேலும் தெரிவித்தார்.

இலங்கைப் போரில் வடபகுதியிலிருந்து நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த சுமார் எழுபதாயிரம் பேர் இன்னும் முகாம்களிலே இருக்கின்றனர். எனினும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோர் ஏற்கனவே குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.