2010-05-19 16:09:35

திருத்தந்தையின் புதன் பொது மறை போதகம்.


மே. 19. 2010. தொடர்ந்து பல நாட்களான மழை இருந்த போதிலும், இப்புதனன்று திருத்தந்தையின் பொது மறைபோதகக்கூட்டம் ரோம் நகர் புனித ராயப்பர் பசிலிக்கா பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள் மழை வரும் என்ற அச்சத்தையும் தாண்டி அவ்வளாகத்தில் குழுமியிருக்க, தன் அண்மை போர்த்துக்கல் திருப்பயணம் குறித்து குழுமியிருந்தோருக்கு உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். RealAudioMP3

கடந்த வாரம் இடம்பெற்ற என் போர்த்துக்கல் திருப்பயணம் பாத்திமா அன்னையை கவுரவித்து வழிபடவும், போர்த்துக்கல் மக்களின் நற்செய்தி பரப்புதல் மீதான ஆர்வத்தையும் அவர்கள் விசுவாசத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த வரலாற்றையும் வணங்கி நன்றி சொல்லவும் எனக்கு உதவுவதாக இருந்தது. என் திருப்பயணத்தின் துவக்க நிகழ்வாக இருந்த லிஸ்பனின் Terreiro do Paço வின் திருப்பலியில், போர்த்துக்கல் கிறிஸ்தவர்களின் இவ்வுன்னத நற்செய்தி அறிவுப்புப் பணியானது இந்நாட்களிலும் தொடரவேண்டும் என அழைப்பு விடுத்தேன் .இடையச் சிறார்களான ஜெசிந்தா மற்றும் ஃப்ரான்செஸ்கோ முத்திப்பெற்றவர்களாக திருச்சபையில் அறிவிக்கப்பட்டதன் 10ம் ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி பாத்திமா நகருக்குத் திருப்பயணியாகச் சென்றதே என் திருப்பயணத்தின் இதயப்பகுதியாக இருந்தது.

மாலையில் ஜெபமாலை ஜெபித்ததும் பாத்திமா அன்னை முதன்முறையாக காட்சியளித்ததன் நினைவுத் திருப்பலி நிறைவேற்றியதும் பாத்திமாவின் செய்தியை மையம் கொண்டதாய் இருந்தது. ஜெபம் தபம் மற்றும் மனமாற்றத்திற்கு அன்னை விடுத்துள்ள அழைப்பானது, வரலாற்றின் இடர்கள் மற்றும் அச்சுறுத்தல்களை வெற்றி கொள்ளும் இறைவனின் மீட்புத் திட்டம் மற்றும் கருணை நிறை அன்பில் நம்பிக்கைக் கொள்வதற்கென விடப்பட்ட அழைப்பாகும். என் திருப்பயணத்தின் ஆசீர்களுக்காக நன்றி கூறும் அதேவேளை, வானுலகிற்கான நம் பயணத்தில் தொடர்ந்து நம்மை வழி நடத்தவும், இறைவனின் முடிவற்ற இரக்கத்திற்கு அனைவரின் இதயங்களைத் திறக்கவும், கிறிஸ்துவின் மீட்பு நற்செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கும் மறைப்பணியில் திருச்சபையை உறுதிப்படுத்தவும் பாத்திமா அன்னை மரி தன் ஜெபங்களின் வழி நமக்கு உதவ வேண்டும் என வேண்டுமாறு உங்களனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

RealAudioMP3 இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.