2010-05-18 15:54:47

திருப்பாடல் 08 : மனிதர் மாமனிதர் ஆவது எப்போது?


மே18,2010 RealAudioMP3 பெரிக்ளிஸ் என்ற கிரேக்க நாட்டு மாமன்னர் மீது கடுங்கோபம் கொண்ட ஒருவர் அரண்மனைக்குச் சென்று மாமன்னரை மிகவும் கேவலமாகத் திட்டினார். அவர் திட்டியது அரை மணிநேரம், ஒருமணிநேரம் அல்ல, ஒருநாள் முழுவதும் திட்டினார். காலையிலிருந்து இருட்டும் வரை வசைபாடிக் கொண்டிருந்ததால் களைத்துச் சோர்ந்து போனார். தனது வீடு திரும்பவும் தயாரானார். அப்போது பெரிக்ளிஸ் மாமன்னர் தனது அரண்மனை ஊழியரை அழைத்து விளக்கை எடுத்துச் சென்று அவரை அவரது வீட்டில் விட்டுவிட்டு வா என்று சொன்னார். அந்த ஊழியரும் அவ்வாறே செய்தார். மனிதர்கள் எப்படி மகான்களாக, மகாத்மாக்களாக ஆகிறார்கள் என்று புரிந்து கொள்வதற்கு பெரிக்ளிஸ் மாமன்னரின் ஒருசெயலே போதுமானது.

மனிதர்கள் அனைவரும் மாமனிதர்களாக வாழவேண்டும். ஏனெனில் அவர்களை இறைவன் எல்லா உயிர்களுக்கும் மேலான உயிர்களாகப் படைத்திருக்கிறார். விவிலியப் புத்தகத்தின் தொடக்க நூலில் இறைவனின் படைப்பு பற்றி வாசிக்கும் பொழுது இதனை அறிகிறோம். தொடக்கநூல் 1,27 சொல்கிறது : “கடவுள் மனிதனைத் தம் சாயலாகப் படைத்தார். தமது உருவிலேயே படைத்தார்” என்று. அவர் தாம் படைத்த எல்லாப் படைப்புக்களிலும் மனிதனை உயர்ந்தவனாகக் கண்டு படைப்பனைத்தையும் ஆள்வதற்கு அவனுக்கு அதிகாரம் கொடுத்தார். மாமனிதனின் இந்த மாண்பை திருப்பாடல் எட்டில் வாசிக்கிறோம். இந்தப் பாடல், “ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது” என்று தொடங்குகிறது.

இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளைப் படைப்பின் தலைவராகவும் மீட்பின் ஆண்டவராகவும் ஏத்திப்பாடிச் செபித்தனர். அம்மக்கள் செப புத்தகமாகிய திருப்பாடல்களில் இருக்கின்ற 150 பாடல்களிலும் இறைபுகழ் பாடல்கள் வரிசையில் இந்தத் திருப்பாடல் எட்டு முதலில் வருகிறது. இதில், அம்மக்களின் கடவுளின் மாட்சியைப் புகழ்ந்தேத்துகிறார்கள். அதே சமயம் மனிதனை அவர் உயர்த்தியிருப்பதையும் நினைத்து வியந்து அவரைப் போற்றுகிறார்கள். இஸ்ரயேல் மக்களின் புவியியல் கருத்துப்படி, வான்வெளி, வானமண்டலம், விண்ணகம் என்ற இரண்டு அமைப்புக்களைக் கொண்டதாகவும், இரண்டிற்குமிடையே மேற்கடல் இருப்பதாகவும் இவ்விரண்டிற்கும் மேலே இறைவனின் உறைவிடம் இருப்பதாகவும் உள்ளது. எனவே இறைவன் அவர்களுக்குச் செய்த நன்மைகளை, அவர்களின் மூதாதையருக்குக் குறிப்பாக, எகிப்தில் பாரவோன் அடிமைத்தனத்தினின்று அவர்களின் முன்னோர்களை மீட்டு புதிய புண்ணிய பூமியில் அவர்களை வாழ வைத்ததை நினைத்து எப்பொழுதும் தங்கள் செபங்களில் புகழ்ந்து பாடிய போது, இறைவன் வானங்களுக்கு எல்லாம் மேலானவர் என்று போற்றினர்.

இரண்டு சேசு சபை பேராசிரியர் அருட்தந்தையருடன் நேற்று முன்தினம் புனித பிரான்சிஸ் அசிசியார் வாழ்ந்த இடம், இறந்த இடங்களைப் பார்வையிட்டு தொடருந்தில் வந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்களில் ஒருவர் தான் அருட்பணியாளராக ஆகிய விதம், குருவாகும் அவரது எண்ணத்தைப் பெற்றோரிடம் கூறியபோது அவர் எதிர் கொண்ட எதிர்ப்புகள் இப்படி பலவாறு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் சொன்னார் – சும்மா சொல்லக் கூடாதுங்க, கடவுள் என்னை, எனது குடும்பத்தை எப்படியெல்லாம் வழிநடத்தியிருக்கிறார். எனது குடும்பத்தை இறைவன் நிறைவாகவே ஆசீர்வதித்திருக்கிறார். அன்று எனது தாய் என்னைக் குருவாகப் போகவே வேண்டாம். நான் படித்திருந்ததால் வீட்டில் இருந்து தம்பி தங்கையைப் படிக்க வைக்க உதவி செய் என்று பிடிவாதமாகக் கூறினார். ஆனால் இன்று கடவுள் எவ்வளவு அற்புதமாக அவர்களையெல்லாம் தூக்கிப் பிடித்து நிறுத்தியிருக்கிறார் என்று வியந்து கடவுளுக்கு நன்றி சொன்னார். அன்பு நேயர்களே, அந்த அருட்தந்தைக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் மகத்தானவராக இருக்கிறார். அவரது கருணையை நினைக்கும் பொழுது இறைவன் உயர்ந்தவர், வானங்களுக்கு மேலாக உயர்ந்தவர் என்று இஸ்ரயேல் மக்கள் போல நாமும் பாடிச் செபிப்போம்.

இறைவன் இவ்வளவு உயர்ந்தவர் என்று நெஞ்சுருக நினைந்து மகிழ்ந்து பாடிப் பரவசமான அந்த இஸ்ரயேல் மக்கள் அவரது படைப்பு அனைத்தையும் நோக்குகின்றனர். அந்தப் படைப்பு அனைத்தின் மீதும் மனிதருக்கு அவர் கொடுத்திருக்கும் உரிமையையும் நோக்குகின்றனர். சிலவேளைகளில் நம்மைப் பொறுப்பில் இருப்போர் பாராட்டும் பொழுது, “ஐயோ பெரிய பெரிய வார்த்தையெல்லமா சொல்லாதீங்க, நான் யாருங்க, நான் என்னத்தை அவ்வளவு பெரிசா செஞ்சிட்டேன்” என்று சொல்லி அந்தப் புகழை ஏற்க மறுக்கிறோம் அல்லவா? அதேபோல்தான் அன்று இஸ்ரயேல் மக்கள் இறைவனின் பெருமையையும் அவர் செய்த மாபெரும் நன்மைகளையும் நினைத்த பொழுது மனிதர்களாகிய தங்களது சிறுமையை நினைத்தனர். மனிதர்களாகிய நாங்கள் அப்படி என்ன செய்துவிட்டோம் நீர் எம்மை உயர்த்துவதற்கு என்று செபத்தில் கேட்டனர். எவ்வாறெனில்,

ஆண்டவரே, மனிதன் யார்? உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர். மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். அவனை இவ்வளவு மேலானவனாக நீர் படைத்திருக்கிறீர்! ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்

என்று வியந்து செபித்தனர். தொடக்கநூல் அதிகாரம் ஒன்று, 28,29,30 ஆகிய திருச்சொற்றொடர்களில், “கடவுள் மனிதனைத் தம் உருவில் படைத்து கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்று சொன்னதாக வாசிக்கிறோம். ஆக, திருப்பாடல் எட்டின்படி கடவுள், மனிதரை தமக்குச் சற்றே சிறியவராக்கினார். மாட்சியையும் மேன்மையையும் முடியாகச் சூட்டினார், படைப்பு அனைத்தையும் ஆளும் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தார், எல்லாவற்றையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தினார். அவ்வாறெனில் கடவுளின் தனிச்சிறந்த வேலைப்பாடாகிய மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? என்று சிந்திப்பதற்கு இந்தத் திருப்பாடல் எட்டு அழைப்பு விடுக்கிறது.

மனிதர் கடவுளின் உருவில் படைக்கப்பட்டவர்கள். கடவுளின் சாயலைத் தாங்கியவர்கள். எனவே மனிதன் தன்னிலிருக்கின்ற தெய்வீகத்தை முதலில் உணர வேண்டும். ஔவை மூதாட்டி கூறியிருப்பது போல, “ஈசனெனக் கருதி எல்லா உயிர்களையும் நேசத்தால் நினைத்தல் வேண்டும்”. அவன் தன்னிலும் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு அவரைப் போற்ற வேண்டும். இத்தாலியின் அசிசி நகரில் புனித பிரான்சிஸ் வாழ்ந்த இடத்தில் உள்ள அந்தப் புனிதரது திருவுருவம் ஒன்றில் அவரது கையில் சிறிய கூடை இருக்கின்றது. அதில் எப்பொழுதும் ஓர் உயிருள்ள புறா அமைதியாக அமர்ந்திருக்கிறது. அசிசி செல்லும் எல்லாருமே இதைப் பார்த்து வியக்காமல் வரமாட்டார்கள். இதற்கு அவரது வாழ்க்கையிலிருந்து விளக்கம் கொடுக்கிறார்கள். புனித பிரான்சிஸ் அசிசி தனது உடைமைகள் அனைத்தையும், ஏன் உடுத்தியிருந்த ஆடையை முதலாய்த் துறந்து வானகத் தந்தையைத் தமது தந்தையாக ஏற்ற அந்த நேரத்திலிருந்தே அவர் படைப்புகள் அனைத்தையும் தமது உடன் பிறப்புக்களாகப் பாவித்தார். சூரியனையும் சந்திரனையும் சகோதர சகோதரியே என்று அழைத்து இறைவனின் படைப்பு எல்லாவற்றுடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தார்.

இன்று மனிதரின் சுயநலத்தால் இயற்கை காலம் மாறி இயங்குகிறது. இந்த மே மாதத்தில் இந்தியாவில் மலைப்பகுதியில்கூட கடும் வெப்பம். இங்கு இத்தாலியில் மழை, குளிர். காலச்சக்கரம் மாறி இயங்குகிறது. குளிர்காலம், இளவேனிற்காலம் கோடைகாலம் என்ற பிரிவுகள் இன்று மாறிவிட்டன. இயந்தரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் மனிதரில் பலருக்குத், தான், தனது என்று சிந்திக்கவே போதுமான நேரம் இருக்காத போது சகமனிதர் பற்றி, இயற்கை பற்றி, சுற்றுச்சூழல் பற்றிச் சிந்திக்க நேரம் ஏது என்று சொல்லத் தோன்றுகிறது. ஒரு சின்ன உதாரணம். தினமும் பயணம் செய்து அலுவலகம் செல்லும் நகரப் பேரருந்துகளில் எத்தனை பேர் ஏமாற்றப்படுகின்றனர். சில்லறைக் காசு இல்லை, டிக்கெட் எடுக்க அடுத்தவரிடம் சில்லறையைக் கொடுக்கும் போது அந்தப் பயணச் சீட்டு கைமாறும் நிலை, அதனால் சில்லறை கொடுத்தவரிடம் பயணச் சீட்டு இல்லாததால் அபராதம் கட்டி அவமானப்படுதல் – இப்படி எத்தனை நிகழ்வுகளைச் சொல்ல.....

ஆப்ரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் அவலநிலை கண்டு தென்னாப்ரிக்காவில் வெள்ளையரைத் தரக்குறைவாக விமர்சித்ததால் காந்திஜியும் அவரது குடும்பமும் 23 நாட்கள் டர்பனில் கப்பலிலேயே சிறை வைக்கப்பட்டனர். தானுண்டு, தனது வழக்கறிஞர் தொழில் உண்டு என்று காந்திஜி இருந்திருந்தால் கத்தியின்றி இரத்தமின்றி சாத்வீகத்தில் இந்தியா சுதந்திரம் வாங்கியது என்ற பெருமை கிடைத்திருக்குமா?. கறுப்பர்களின் உரிமை காக்க மார்ட்டின் லூத்தர் கிங் இரத்தம் சிந்தியபடி மண்ணில் சாய்ந்தது எதற்காக? அல்பேனிய அருட்சகோதரி தெரேசா, கல்கத்தா அன்னை தெரேசாவாக உருவானது எவ்வாறு? இப்படி மனிதர்கள் மாமனிதர்களானதற்கு ஒரே காரணம் சக மனிதர்களிடம் அவர்களுக்கு இருந்த எல்லையற்ற அன்பு. அந்த அன்பில் விளைந்த மனித நேயம். கைம்மாறு கருதாத உண்மையான அன்பு. அடுத்தவர் துன்பம் துடைக்க அவர்களில் ஊற்றெடுத்த கருணை. பகைவரிடத்தில் காழ்ப்புணர்வு இல்லாத பாசம். எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பாவிக்கும் பண்பு.

இந்தப் பண்புகளின் கூட்டுறவில் பிறப்பதுதான் மனிதநேயம். தோகைவிரித்த மயிலுக்கும் துவண்டு விழுந்த முல்லைக்கும் மனமிரங்கி மனித நேயத்தை உயர்த்தியவன் சங்கத் தமிழன். அந்தப் பரம்பரையில் வந்தத் தமிழர்களாகிய நம்மில் மனித நேயம் மலரட்டும். மாமனிதர்கள் என்ற நிலை உயரட்டும். அப்போதுதான் மனிதன் கடவுள் படைப்பில் தான் உயர்ந்தவன் உன்னதமானவன் என்று பெருமைப்பட முடியும்.

இவ்வாரத்தில் நாம் செபிப்பதற்கு – “ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! மனிதரை ஒரு பொருட்டாக நினைக்க அவன் யார்?”

 








All the contents on this site are copyrighted ©.