2010-05-17 15:37:42

நிறவெறிக் கொள்கைகளிலிருந்து விடுதலையடைந்த தென்னாப்ரிக்கா தற்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதாக தலத்திருச்சபை கவலை.


மே17,2010 நிறவெறிக் கொள்கைகளிலிருந்து விடுதலையடைந்துள்ள தென்னாப்ரிக்கா நாடு தற்போது வன்முறை, எய்ட்ஸ், குடும்பப் பிரிவினைகள் போன்றவைகளால் துன்புறுவதாக அந்நாட்டு Durban துணை ஆயர் பேரி ஊட் கவலையை வெளியிட்டுள்ளார்.

குற்றங்கள், வன்முறைகள், கற்பழிப்பு, பெண்களின் உரிமைகள் மீறப்படுதல் என்பனவும் அதற்கும் மேலாக அநீதியான பொருளாதார சூழல்களும் இடம்பெறுவதாகக் கூறினார் ஆயர் ஊட்.

எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கென கடந்த 20 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்க அரசு மக்களிடையே ஊக்குவித்த கருத்தடை சாதன பயன்பாட்டு முறையால் எவ்வித பயனுமில்லை என உரைத்த ஆயர், மக்களுள் 22 விழுக்காட்டினர் இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

தென் ஆப்ப்ரிக்காவில் தலத்திருச்சபை கல்வி மற்றும் நல ஆதரவுத் திட்டங்கள் மூலம் சிறப்புப் பணியாற்றிவருவதாக உரைத்த ஆயர் ஊட், 33 இலட்சம் கத்தோலிக்கர்களைக் கொண்ட தலத்திருச்சபை, அனாதைக்குழந்தைகள், மரணத்தறுவாயில் இருப்போர், தவறாக நடத்தப்பட்ட பெண்கள், கருத்தாங்கியோர், மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளிடையே பணியாற்றி வருவதையும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.