2010-05-17 10:17:16

குடும்பம், ஒரு கூட்டு முயற்சி


மே17,2010 தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள இந்த நாட்களில் செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் மாநில அளவில், மாவட்ட அளவில் முதல், இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்ற மாணவ மாணவியரையும் பாடங்கள் வாரியாக முதலிடங்களைத் தக்கவைத்துள்ள மாணவ மாணவியரையும் பேட்டி எடுத்து வருகின்றன. மாவட்ட கலெக்டர்களும், பள்ளி நிர்வாகமும் தங்களுக்குப் பெருமை தேடித்தந்த மாணவ மாணவியருக்குப் பாராட்டு விழாக்களை நடத்தி வருகின்றனர். இந்த மாணவ மாணவியர் தங்களது வெற்றிக்குக் காரணமாகச் சில காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு மாநில அளவில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவர் பாண்டியன், ''சினிமா, 'டிவி' நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகாமல் படித்ததால்தான் தேர்வில் சாதிக்க முடிந்தது என்று தெரிவித்திருக்கிறார். இந்தியில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த பாயல், மனதை சந்தோஷமாக வைத்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த மாணவ மாணவியர் இந்தப் பேட்டிகளில் மறக்காமல் சுட்டிக்காட்டியது அவர்களது குடும்பங்களை. ஆனால் இந்தப் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும் அவர்களை ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக வளர்ப்பதற்கும் இவர்களின் குடும்பத்தினர் கொடுக்கும் விலை கணக்கிட முடியாதது. இந்திப் பாடத்தில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாவதாக வந்த மாணவி மாதவியின் தந்தை, ''பிச்சை எடுத்தாவது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதை பெற்றோர் இலட்சியமாக்க் கொள்ள வேண்டும்,'' எனக் கூறியிருப்பதிலிருந்தே பிள்ளைகளுக்காகக் குடும்பத்தினர் செய்யும் தியாகங்களை உணர்ந்து கொள்ளலாம்.



இந்தப் பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி, பத்திரிகைகளும் பரபரப்பாகப் பேட்டிகளை வெளியிட்ட சனிக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் நிறுவனமும் உலகக் குடும்ப நாளைக் கடைபிடித்தது. இக்காலத்தில் குடும்பங்கள் எதிர்நோக்கும் எண்ணற்ற பிரச்சனைகளைப் பல்வேறு நாடுகளின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கத்தில் ஐ.நா. பொது அவை, 1993ம் ஆண்டில் உலகக் குடும்ப நாளை உருவாக்கியது. ஜாஹோன் என்பவர் இவ்வாறு சொல்கிறார் : “குடும்பம், சமுதாயத்தின் அடிப்படைக் கூறாகவும், மனித மதிப்பீடுகளையும் கலாச்சாரத்தையும் தலைமுறைகளின் வரலாற்று மரபுகளையும் தொடர்ந்து காக்க வேண்டிய இடமாகவும் அமைந்திருக்கிறது. குடும்பங்களின் நிலையை வைத்தும் சமூகத்தில் அதற்குக் கிடைத்துள்ள இடத்தையும் பொறுத்தே, ஒரு நாட்டின் வளர்ச்சி எல்லாக் காலங்களிலும் கணிக்கப்படுகின்றது. ஏனெனில், ஒன்றிணைந்த மகிழ்வான குடும்பமும், அதன் தரமும் குடிமக்களின் வளமான நல்வாழ்வுக்கு இன்றியமையாதவை. மனித வாழ்வு குடும்பத்தோடு ஆரம்பிக்கிறது. இங்குதான் குடிமகனுக்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. எனவே நாட்டின் கொள்கைகள், குடும்ப மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவையாக, குடும்பத்திற்கு ஆதரவு அளிப்பவையாக அமைய வேண்டும்”.



ராஹி என்பவர் சொல்கிறார் : “நாம் குடும்பத்தைப் புறக்கணித்தால் நாம் இயற்கையால் புறக்கணிக்கப்படுவோம். எனவே உலகக் குடும்ப நாள், நமது வளத்தின் கருவூலத்தைக் கண்டுபிடிப்பதற்குக் கருவியாக அமைந்துள்ளது. அதேசமயம், சமுதாயத்தை அழிக்கும் கூறுகளைத் தடுத்து நிறுத்தவும் நம்மைத் தூண்டுகின்றது” என்று. இந்த நவீனக் கலாச்சாரக் காலத்தில் பல குடும்பங்களின் நிலை பரிதாபமாகவே இருக்கின்றது. நிலையான குடும்பங்கள் குறைந்து வருகின்றன. மேலை நாடுகளில் கணவனும் மனைவியும் மிக எளிதாகப் பிரிந்து விடுகின்றனர். இதன் தாக்கத்தைப் பிள்ளைகளின் குணநலன்களில் தெளிவாகவே காண முடிகின்றது. ஒருநாள் வகுப்பில் அந்த மாணவன் சோகமாக இருப்பதை ஆசிரியர் கவனித்தார். அவர் அந்த மாணவனிடம், நீ ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன், “என் உணவுக்காக, எனது ஆடைகளுக்காக, என்னை நல்ல பள்ளியில் படிக்க வைப்பதற்காக என் அப்பா நாள் முழுவதும் உழைக்கிறார். என்னைக் கல்லூரியில் படிக்க வைப்பதற்காகக் வேலை நேரம் முடிந்தும் கூடுதல் வேலை செய்து பணம் சேர்க்கிறார். என் அம்மா, எனக்காகச் சமைப்பது, துணி துவைப்பது, நான் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுப்பது - இப்படி எல்லா வேலைகளையும் செய்கிறார். அதனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” என்றான். “பின் ஏன் வருத்தமாக இருக்கிறாய்” என்று ஆசிரியர் கேட்டதும், அவன், “என் பெற்றோர்கள் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது” எனறான்.



2007ம் ஆண்டில் வெளியான புள்ளிவிபரக் கணக்கெடுப்பின்படி, இத்தாலியின் ஏறத்தாழ ஐந்து கோடியே 90 இலட்சம் மக்கள்தொகையில், 81 ஆயிரத்துக்கு மேற்பட்ட தம்பதியரின் பிரிவுகளும், 50 ஆயிரம் திருமண முறிவுகளும் இடம் பெற்றன. இந்த உலகக் குடும்ப நாளை முன்னிட்டு இத்தாலியின் மிலானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, இரண்டு மனைவிகளிடமிருந்து பிரிந்துவிட்ட Lorenza Lucianer என்ற ஓர் அலுவலகப் பணியாளர், “வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கும் திருமணம் மற்றும் நெருங்கிய பிணைப்பைக் கொண்ட குடும்ப மதிப்பீடுகள் மகத்தானவை. ஆனால் பெண்கள் வேறுபட்ட தன்மையில் வாழத் தொடங்குகின்றனர். இங்கு ஏறத்தாழ எல்லாருமே இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்ற அமெரிக்கா போல் மாறி வருகிறோம்” என்று கூறினார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் 2008ம் ஆண்டில், 46 விழுக்காட்டுத் திருமணங்கள் முறிந்து, தம்பதியரில் யாராவது ஒருவர் அல்லது இருவருமே மறுதிருமணம் செய்துள்ளனர் என்று ஊடகம் ஒன்றில் வாசித்தோம். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் உறுதியான குடும்ப மரபுகள் படிப்படியாக நலிவடைந்து வருகின்றன. வாடிய முகத்துடன் விவாகரத்துக்கு குடும்பநல நீதிமன்றப்படிகளை ஏறுவோரின் எண்ணிக்கையும் ஏறுமுகமாகத்தான் இருக்கின்றது. இந்தப் பாரம்பரிய குடும்ப அமைப்பு சிதைந்து போனால் உறவுகள் அற்றுப் போய்விடும். தன்னலமும் வன்செயல்களுமே அதிகரிக்கும்.



“காலத்தின் ஓட்டத்தில், நாகரீகத்தின் வளர்ச்சியில் பண்பாட்டு மலர்ச்சியில் மனித குலத்துக்குப் பரிசாக அமைந்ததுதான் குடும்பம். இது உறவுகளின் சங்கிலியால் உருவெடுத்தது. இந்தச் சங்கிலியில் ஒரு வளையம் பலவீனமடைந்தால் சங்கிலி முழுவதும் பலவீனமடையும். குடும்பத்தில் ஒரு நபர் நலிவடைந்தால் குடும்பம் முழுவதுமே நலிவடையும்” என்று மணியன் சொல்கிறார். உறுதியானக் குடும்பக் கட்டமைப்புகள் தளர்வதற்கு சுயநலமும் விட்டுக் கொடுக்காத தன்மையும் புரிந்து கொள்ளாமையும் உண்மையான அன்பும் மன்னிப்பும் சகிப்புத்தன்மையும் இல்லாமையே காரணங்கள் என்பது எல்லாருக்குமே தெரிந்தவையே. இந்த உரோம் மாநகரில் தெருக்களிலே அவ்வப்போது பிணக்குகளை, சண்டைகளைப் பார்க்க முடிகின்றது. தடிப்பு வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. இறுதியில் ஆண் அல்லது பெண் கண்ணீரோடு பிரிந்து செல்கின்றனர். நாம் வரலாற்றைப் புரட்டினோமானால் அமைதியானக் குடும்ப வாழ்க்கை உயர்ந்த மனிதர்களுக்குக்கூட அமைந்துவிடவில்லை.



உலகமே போற்றும் கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸை அவரது மனைவி போற்றவில்லை. எப்பொழுதும் நண்பர்களுடனும் இளைஞர்களுடனும் மகிழ்ச்சியோடு கருத்து விவாதங்கள் நடத்திக் கொண்டு வந்த அவரால் அவரது மனைவியை மகிழ்விக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்தால் ஒரே ஏச்சுபேச்சு. சாக்ரடீசின் மனைவி கடுமையான குரலில் திட்டும் பொழுது அவர் இடி இடிக்கிறது என்பாராம். அவரது தலையில் தண்ணீரைக் கோபத்துடன் ஊற்றும் பொழுது, இடி இடித்து முடிந்து மழை பெய்கிறது என்பாராம். இரஷ்யப் பேரறிஞர் டால்ஸ்டாயின் குடும்ப வாழ்க்கையும் இனிதாக அமையவில்லை. “Paradise Lost“ அதாவது இழந்த சுவர்க்கம் என்ற, ஆங்கில இலக்கிய உலகில், அழியாக் காவியம் படைத்த மில்டன், தனது 35வது வயதில் மேரி பாவல் என்ற அரசக் குடும்பத்துப் பெண்ணை மணந்தார். ஆனால் மனைவியின் அலட்சியத்தால் கூனிக்குறுகிப் போனார். மூன்றுமுறை மணமுடித்தும் இறுதியில் கண்பார்வை இழந்து, மனநிம்மதியை இழந்து, அமைதியையத் தேடி அலைந்தார். மில்டன் தனது இறப்புவரை தான் இழந்த சுவர்க்கத்தை மீண்டும் பெறவே இல்லை என்கிறார்கள்.



குடும்பங்களில் பெண்களால் நிம்மதி இழந்த ஆண்களின் கதை நூற்றுக்கு மூன்று எனத்தான் இருக்கும். ஆனால் ஆண்களால் நிம்மதி இழக்கும் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம். இந்தச் சர்வதேச குடும்ப நாளுக்கு செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்கூட, உலகில் ஏறத்தாழ 70 விழுக்காட்டுப் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வன்முறைகளை எதிர்நோக்குகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். அதுவும் அண்மை ஆண்டுகளாக, உள்நாட்டுச் சண்டைகளாலும் தரமான வாழ்க்கையைத் தேடியும், வறுமை பஞ்சம் போன்ற காரணங்களாலும் தாய் ஒருபக்கம். தந்தை ஒருபக்கம். பிள்ளைகள் ஒருபக்கம் எனப் பிரிந்து வாழ்கின்றனர். எனவே சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட குடியேற்றதாரக் குடும்பங்களுக்கான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தையும் திருச்சபை அதிகாரிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கடந்த வாரத்தில் மேற்கொண்ட போர்த்துக்கல் நாட்டுக்கானத் திருப்பயணத்தின் போது பாத்திமா நகரில் சமூகப் பணியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிலையான குடும்ப அமைப்புகளுக்குக் குரல் கொடுத்தார். திருமணமுறிவுகள், கருக்கலைப்பு இவற்றுக்கு எதிராகக் கத்தோலிக்கர் செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.



அன்பு நேயர்களே, அன்புதான் குடும்பத்தைக் கட்டிக்காக்கும் தசைநார். ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையே உயர்வான வாழ்க்கை என்று கலித்தொகை கூறுகிறது. தவறுவது மனித இயல்பு. மன்னித்து ஏற்பது இறைஇயல்பு. “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்பார்கள். இயேசு சொல்லியிருப்பது போன்று, வானகத் தந்தையைத் தவிர நிறைவானவர் எவரும் உலகில் இல்லை. எனவே குடும்பங்களில் கணவனும் மனைவியும் ஒருவர் ஒருவரை உள்ளார்ந்து அன்பு செய்து மன்னித்து மகிழ்வுடன் வாழ்ந்தால்தான் பிள்ளைகளும் அப்பண்புகளில் வளர்வார்கள். இவர்கள்தானே நாளைய உலகின் நம்பிக்கைகள். ஆம். உலகம் ஒழுங்காய் இருப்பதற்கு நாடுகள் ஒழுங்காய் இருக்க வேண்டும். நாடுகள் ஒழுங்காய் இருப்பதற்கு குடும்பங்கள் ஒழுங்காய் இருக்க வேண்டும். குடும்பங்கள் ஒழுங்காய் இருக்க தனிமனிதன் ஒழுங்காய் இருக்க வேண்டும். அவன் பண்புள்ளவனாய்த் தூயவாழ்வு வாழ்பவனாய் இருக்க வேண்டும்.



எதிர்பாராத சிக்கல்கள், தோல்விகள், சவால்கள் வரும்போதுதான் வெற்றிப் பாதைக்கு அடித்தளமே நாட்டப்படுகின்றது. குடும்பங்கள் அன்பின் கோவில்களாக மாறட்டும்.







All the contents on this site are copyrighted ©.