2010-05-15 15:31:48

வேறு நாடுகளில் அடைக்கலம் தேடுவோர் அந்நாடுகளிலும் கடும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்- பேராயர் மர்க்கெத்தோ


மே15,2010 தங்கள் நாடுகளில் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்களிலிருந்து தப்பிப்பதற்காக வேறு நாடுகளில் அடைக்கலம் தேடுவோர் அந்நாடுகளிலும் கடும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர் என்று திருப்பீட குடியேற்றதாரருக்கான மேய்ப்புப்பணி அவையின் செயலர் பேராயர் அகுஸ்தினோ மர்க்கெத்தோ கூறினார்.

இச்சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்ட உலக குடும்ப தினத்தையொட்டி இத்தாலிய குடும்பக் கழகங்கள் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் மர்க்கெத்தோ, குடியேற்றதாரக் குடும்பங்கள் குறித்து திருத்தந்தை வெளியிட்ட செய்தியின் முக்கிய கருத்துக்களையும் கோடிட்டுக் காட்டினார்.

இன்று உலகில் 90 இலட்சம் பேர் அகதிகள் என்ற உண்மையான நிலையில் வாழ்வதாகவும் மொத்தத்தில் ஏறத்தாழ இரண்டு கோடிப் பேர் அகதிகளாக இருக்கின்றனர் எனவும் கூறிய பேராயர், நாடுகளுக்குள்ளேயே புலம் பெயர்ந்துள்ள 2 கோடியே 40 இலட்சம் பேரின் நிலையும் அகதிகள் நிலை போன்றே இருக்கின்றதெனவும் குறிப்பிட்டார்.

அண்மை கிழக்கு நாடுகளில் வாழும் பாலஸ்தீனிய அகதிகள் பற்றியும் பேசிய அவர், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 60 இலட்சம் அகதிகள் சிறப்பு அகதிகள் முகாம்களில் வாழ்வதையும் சுட்டிக்காட்டினார்.

அகதிக் குடும்பங்கள், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் போன்றோர் எதிர்நோக்கும் கடினமான வாழ்வு மற்றும் சவால்கள் பற்றியும் பேசிய பேராயர் மர்க்கெத்தோ, குடும்பங்கள் ஒன்றிணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்








All the contents on this site are copyrighted ©.