2010-05-15 15:32:56

பாத்திமாவில் அன்னைமரி காட்சியில் கூறிய வார்த்தைகள் இன்றைய உலகில் எவ்வளவுதூரம் உண்மையாகியுள்ளன - திருப்பீடப் பேச்சாளர்


மே15,2010 பாத்திமா நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்திய திருப்பலியில் இலட்சக்கணக்கில் விசுவாசிகள் பங்கு கொண்டது ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல என்று திருப்பீடப் பேச்சாளர் சேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி கூறினார்.

திருத்தந்தை இப்புதனன்று பாத்திமா அன்னை திருத்தல வளாகத்தில் நிகழ்த்திய திருப்பலியில் ஐந்து இலட்சத்துக்கு அதிகமாகவும், தூய மூவொரு கடவுள் ஆலயத்தின் முன்பாகவும், இன்னும், திருத்தந்தையின் கார் சென்ற இடமெல்லாம் இலட்சக்கணக்கிலும் மக்கள் நின்று அவரை வாழ்த்தினர்.

இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிறைவு செய்த போர்த்துக்கல் நாட்டுக்கானத் திருப்பயணம் குறித்து கருத்து தெரிவித்த அருள்தந்தை லொம்பார்தி, திருத்தந்தை ஜான் பால் காலத்தில் மக்கள் கூடியதைவிட தற்சமயம் அதிகமாகக் கூடியிருந்தார்கள் என்று தெரிவித்தார்.

அண்மையில் திருச்சபை எதிர்நோக்கிய குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கை குறித்த செயல்பாடுகள், திருத்தந்தையின் மீதான மக்களின் கவனத்தைக் குறைத்திருக்கலாம், ஆனால் இநதத் திருப்பயணத்தில் அது நடக்கவில்லை என்றார்.

93 ஆண்டுகளுக்கு முன்னர் பாத்திமாவில் அன்னைமரி காட்சியில் கூறிய வார்த்தைகள் இன்றைய உலகில் எவ்வளவுதூரம் உண்மையாகியுள்ளன என்றும் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்







All the contents on this site are copyrighted ©.