2010-05-13 15:02:32

பாத்திமாவில் திருத்தந்தை நிகழ்த்தும் நிகழ்ச்சிகள்


மே13,2010 அன்பர்களே மே 13 என்றாலே கிறிஸ்தவர்களுக்குப் பாத்திமா அன்னை பற்றிய நினைவு வரும். முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த மூன்றாவது ஆண்டில், அதாவது 1917ம் ஆண்டு மே 13ம் தேதி இரஷ்யாவில் லெனின் மற்றும் ட்ரோட்ஸ்கி தலைமையில் கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிச அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதேநாளில் போர்த்துக்கல் நாட்டு பாத்திமா நகருக்கு அருகில் Cova da Iria என்ற இடத்தில் இறைவனின் தாயாம் மரியா மூன்று சிறார்க்குத் தம்மைக் காண்பிப்பதற்குத் தயாராகி வந்தாள். அன்று, முதல் உலகப் போர் ஏறத்தாழ எண்பது இலட்சம் மனித உயிர்களைக் காவு கொண்டது. இவ்வாறு உலகைப் போர் மேகம் சூழ்ந்திருந்த அந்த வேளையில், ஜசிந்தா, பிரான்சிஸ் லூசியா ஆகிய மூன்று சிறாருக்கும் அன்னைமரி அவ்வாண்டில் ஆறு தடவைகள் காட்சி கொடுத்தாள். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அச்சிறாரிடம், பாவிகள் மனந்திரும்ப எதுவும் செய்யத் தயாரா என்று கேட்டாள். அவர்கள் ஆம் என்று சொன்னதும் ஜெபமாலை செபிக்கச் சொன்னாள். ஜெபமாலையின் ஒவ்வொரு பத்துமணிகள் முடிந்து மூவொரு இறைவனுக்கு வாழ்த்துச் சொல்லியதும், ஓ, இயேசுவே, எம் பாவங்களை மன்னியும், நரக நெருப்பினின்று எம்மைக் காப்பாற்றும். எல்லாரையும், சிறப்பாக உமது உதவி அதிகம் தேவைப்படுபவரை விண்ணகம் சேர்த்தருளும் என்று செபிக்கச் சொன்னாள். அன்னைமரி கடைசியாகக் காட்சி கொடுத்த அவ்வாண்டு அக்டோபர் 13ம் தேதி, நானே தூய ஜெபமாலை மாதா என்றும் தன்னைப் பற்றி அறிவித்தாள்.

இந்த அன்னை காட்சி கொடுத்ததன் 93ம் ஆண்டு நிறைவாகிய இவ்வியாழனன்று பாத்திமாவில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. அதுவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாத்திமாவில் இருப்பதால் இக்கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. பாத்திமா அன்னை விழாவாகிய இந்நாளில். ஜசிந்தாவும் பிரான்சிசும் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 10ம் ஆண்டும் நிறைவடைகிறது. அத்துடன், அருட்சகோதரி லூசியா இறந்ததன் ஐந்தாம் ஆண்டு நிறைவு மற்றும் ஜசிந்தா பிறந்ததன் நூறாம் ஆண்டு நிறைவு. இப்படி ஒன்று சேர்ந்து வந்த இத்தனை நிகழ்வுகளையும் சிறப்பிப்பதற்காக பாத்திமா சென்றுள்ள திருத்தந்தை, இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில், அதாவது இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் பாத்திமா அன்னை திருத்தல வளாகத்தில் திருப்பலியைத் தொடங்கினார். அலங்கரிக்கப்பட்ட பாத்திமா அன்னையின் திருவுருவத்தை போர்த்துக்கல் படைவீரர்கள் தோள்களில் சுமந்து வந்து பீடத்தின் முன்பாக வைத்தனர்.

பாத்திமா-லெய்ரியா ஆயர் அந்தோணியோ அகுஸ்தோ தோஸ் சாந்தோஸ் மார்த்தோ முதலில் வரவேற்புரை வழங்கினார். ஹாங்காங்கின் முன்னாள் கர்தினால் Joseph Zen Ze-Kiun உட்பட கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள் என 1422 பேர் திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தினர். இதில் போர்த்துக்கல் அரசுத்தலைவரும், இன்னும் பல நோயாளிகள் உட்பட சுமார் ஐந்து இலட்சம் விசுவாசிகள் கலந்து கொண்டனர். இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையின் சுருக்கத்துக்குச் செவிமடுப்போம்.

இத்திருப்பலியின் இறுதியில் பல மொழிகளில் விசுவாசிகளை வாழ்த்தினார் திருத்தந்தை. உலகெங்குமிருக்கின்ற திருச்சபையின் தேவைகளுக்காகச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார். எல்லாருக்கும், குறிப்பாக, இளையோர் மற்றும் நோயாளிகளுக்குத் தமது சிறப்பு ஆசிரை அளிப்பதாகவும் கூறினார்.

பின்னர் பாத்திமா திருத்தலத்திற்குள் இருக்கின்ற முத்திப்பேறு பெற்ற ஜசிந்தா, பிரான்சிஸ் ஆகியோரின் கல்லறைகளைத் தரிசித்தார். அதன்பின்னர் கார்மேல் அன்னை இல்லம் சென்று போர்த்துக்கல் ஆயர்கள் மற்றும் சில பிரமுகர்களுடன் மதிய உணவு அருந்தினார். மாலையில் இந்தத் திருப்பயணத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரையும் சந்திப்பதற்காக மூவொரு இறைவன் ஆலயம் சென்றார் திருத்தந்தை. பின்னர் போர்த்துக்கல் ஆயர்களைச் சந்திப்பது இவ்வியாழன் பயணத்திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு ஐரோப்பிய நாடான போர்த்துக்கல் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கில் ஸ்பெயின் நாடு உள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலையும் எல்லையாகக் கொண்டுள்ள இந்நாட்டில் 1926ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டுவரை சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. 1976ல் புதிய ஜனநாயக அரசு உருவானது. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த இந்நாட்டுத் தலைநகர் லிஸ்பனுக்கு இச்செவ்வாயன்று சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அரசுத்தலைவர், பிரதமர், வெளியுறவு அமைச்சர் எனச் சில முக்கிய அதிகாரிகளைச் சந்தித்தார். கலாச்சாரத் துறையினரையும் சந்தித்தார். இப்புதன்மாலை பாத்திமாவுக்குச் சென்றார். மழையும் குளிருமாக இருந்தாலும், பெரும்பாலான நோயாளிகள், மாற்றுத்திறனுடையோர் உட்பட நாற்பதாயிரத்துக்கு அதிகமான பயணிகள் திருத்தந்தையை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். முதலில் அன்னைமரியா காட்சி கொடுத்த இடத்தில் அமைந்துள்ள சிற்றாலயம் சென்று செபித்தார். வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 1981ம் ஆண்டு மே 13ம் தேதி முகமது அலி அக்ஷாவால் சுடப்பட்டதையும் 1982ம் ஆண்டு அதே திருத்தந்தை பாத்திமா சென்று, அவரது உடலை ஊடுருவிய குண்டை பாத்திமா மாதா கிரீடத்தில் வைத்ததையும் நினைவுகூர்ந்தார். இங்கு வருகின்ற எண்ணற்ற பக்தர்களின் இதயங்களில் அன்னைமரி வழியாக இறைவன் செய்துவரும் வியத்தகு செயல்களுக்கு நன்றி கூறும் விதமாக இந்தத் தங்க ரோஜாவை வழங்குவதாகச் சொல்லி அன்னைக்கு அர்ப்பணித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

தங்க ரோஜாவானது பிரபலமான கத்தோலிக்க பிரமுகர்களுக்குத் பாப்பிறை வழங்குவதாகும். தொடக்கத்தில் அரசர்களுக்கும் முக்கியமானவர்களுக்கும், பின்னர் அரசிகளுக்கும் வழங்கப்பட்டு வந்தது. இப்பழக்கத்தை பாப்பிறை 9ம் லியோ, 1049ம் ஆண்டில் ஆரம்பித்தார். அண்மைக் காலங்களில் அன்னைமரியாவுக்கும் இது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பத்து தங்க ரோஜாக்களை அன்னைமரியாவுக்கும் வழங்கியிருக்கிறார். 2006ல் போலந்தின் யஸ்னகோரா, 2007ல் பிரேசிலின் அப்பாரெசிதா, ஆஸ்ட்ரியாவின் மரியசெல், 2008ல் அமெரிக்க ஐக்கிய நாட்டு அமலமரி, இத்தாலியின் போனாரியா, பொம்பை, 2009ல் ஜிப்ரால்ட்டரின் ஐரோப்பா, ஸ்பெயினின் கபேசா, 2010ல் தாதினு ஆகிய அன்னைமரியா திருத்தலங்களுக்குத் தங்க ரோஜாக்களைத் திருத்தந்தை வழங்கியிருக்கிறார்.

புதன் மாலை 6 மணிக்கு மூவொரு இறைவன் ஆலயத்தில் குருக்கள், துறவிகள், குருத்துவ மாணவர்கள் மற்றும் தியோக்கோன்களுடன் சேர்ந்து மாலைத் திருப்புகழ்மாலை செபித்து உரையும் நிகழ்த்தினார் திருத்தந்தை.

உலகிலுள்ள 4 இலட்சத்துக்கு மேற்பட்ட குருக்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார். இரவு 8.30 மணிக்கு எண்ணற்ற பக்தர்களோடு செபமாலை செபித்தார். காட்சி சிற்றாலய ஆலயத்துக்கு முன்னர் கையில் செபமாலையுடன் முழந்தாள்படியிட்டு இப்பக்தி முயற்சியை வழிநடத்தினார் திருத்தந்தை. இதன் இறுதியில் அவர் ஆற்றிய உரையைக் கேட்போம்.

வெள்ளைநிற மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாத்திமா அன்னை திருவுருவம் பவனியாக எடுத்துவரப்பட்டது. பாவிகள் மனந்திரும்ப செபமாலை செபிக்கச் சொன்னாள் அன்னைமரியா. நாமும் வாழ்க்கையில் பாவங்களை விலக்கித் தூய வாழ்வு வாழ அன்னையின் அருளை நாடுவோம். திருத்தந்தையின் இந்த நான்கு நாள் திருப்பயணம் இவ்வெள்ளியன்று நிறைவடைகிறது.










All the contents on this site are copyrighted ©.