2010-05-12 16:24:33

இலங்கையில் மீள்குடியேற்றத்தை விரைவில் செய்ய வேண்டும்- இந்தியா


மே12,2010 இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள தமிழர்களையும் தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திருப்பியனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்ற தலைப்பில், அப்ஸர்வர் ரிசர்ச் ஃபவுண்டேசன் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசும்போது, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இந்தக் கருத்தை வெளியிட்டார்

மேலும், இலங்கையின் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா அளித்துவரும் உதவிகள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், அடுத்து கடன் வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், இலங்கை மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வாழ்வது என்பதை அவர்களே பேசி முடிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிருபமா ராவ் வலியுறுத்தினார்.

அதே கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம், இந்தியாவைப் போன்ற ஆட்சி முறையை இலங்கையில் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவி்ததார்.

இலங்கைக்குப் பொருத்தமான வகையில், அதிகாரத்தைப் பகி்ர்ந்துகொள்ளும் வகையி்ல புதிய முறையை உருவாக்க வேண்டும். அந்த முறை தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என அனைவருக்கும் கெளரவம் அளிக்கும் வகையிலும், சம உரிமை கொடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று இலங்கைத் தூதர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.