2010-05-11 17:07:34

திருப்பாடல் 5 - ஆண்டவரே நாள் முழுவதும் நீதியின பாதையில் என்னை வழிநடத்தும்.


மே10,2010 RealAudioMP3 வர்ணம் அடிப்பது, பனியன் கம்பெனி வேலை, கூலி வேலை என்று அன்றாடம் வயிற்றை நிரப்பி வந்த அந்த ஈரோடு மாவட்டத் தம்பதியினர். இரண்டு குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்த அவர்கள் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பேரிடி. அது அரசு மருத்துவமனை ஒன்றின் தவறான இரத்தப் பரிசோதனை முடிவு வடிவில் வந்து அவர்களது மனநிம்மதியை தவிடுபொடியாக்கியது. ஊரில் தலைகாட்ட முடியாதே, இந்த வியாதியா எனக்கு? என்று அந்தத் தாய் புரண்டு புரண்டு அழுதாள். தற்கொலை செய்யவும் முடிவு எடுத்தாள். ஆனால் தெரிந்த ஒருவர் சொன்ன ஆலோசனையால் சிறிது நம்பிக்கை துளிர்விட, வேறு சில இரத்தப் பரிசோதனை மையங்களுக்குச் சென்றனர். இறுதியில், அந்த அரசு மருத்துவமனையின் ரிப்போர்ட்டுக்கு எதிர்மாறாய் பரிசோதனை முடிவுகள் கிடைத்தன. அந்தக் குடும்பத்தில் சிலநாட்கள் மரித்துப் போயிருந்த மனநிம்மதி இப்பொழுது மீண்டும் திரும்பியுள்ளது. இந்தத் தகவலைக் கடந்த வாரப் பத்திரிகை ஒன்றில் வாசித்தோம். அன்பர்களே, வாழ்க்கையில் தேவையானது, உடல்நலமா? மனநலமா? சமூக நலமா? எது? என்று உங்களைக் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்களோ தெரியாது, ஆனால் நான் சொல்வேன், எனக்கு இவற்றில் எதுவுமே வேண்டாம், மனநிம்மதிதான் வேண்டும் என்று. நமது மனித வாழ்க்கை ஒரு புரியாத புதிர். உலகின் பொருட்கள் அவை வெளியில் தோன்றுவது போல் நிஜத்தில் இருப்பதில்லை. வாழ்க்கையில் நாம் விரும்புவது கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும், அதை வைத்துக் கொள்ள முடிவதில்லை. அப்படிக் கிடைத்து அதை வைத்துக் கொண்டிருந்தாலும், அதனை அனுபவிக்க முடிவதில்லை. அப்படி நாம் அனுபவித்தாலும்கூட அது நிரந்தரமான திருப்தியைத் தருவதில்லை. இந்த ஒரு நிலையில் மனிதன் தேடுவது மனநிம்மதி. அந்த மனநிம்மதி கிடைக்குமிடம் இறைவனில், இறைநம்பிக்கையில் மட்டுமே.

இந்தக் கடவுள் நம்பிக்கை, இறைபக்தி, ஈசனிடம் இறைஞ்சுவது இவையெல்லாம் ஆசியர்களிடம் அதிகமாகவே இருக்கின்றது என்று சொல்லலாம். ஏன் நாம் நமது தினசரி வாழ்க்கையையே பார்க்கலாமே. காலையில் எழுந்தவுடன் நீராடி சூரிய நமஸ்காரம் செய்து நனைந்த ஆடையுடன் கோவில்களுக்குச் செல்கிறோம். நம் பகுதிகளில் காலையில் பல மதங்களின் பக்திப்பாடல்களின் ஒலியில்தான் கண்விழிக்கிறோம். மாணவ மாணவியர் பள்ளிக்குச் செல்லுமுன்னும், வயது வந்தவர்கள் வேலைக்குச் செல்லு முன்னும் வழியில் இருக்கும் கோவில்களில் சாமி கும்பிடுவது, கோவில் மணிகளை இலேசாக தட்டுவது போன்ற பக்திகள் நம்மிடையே இருக்கின்றன. காலையில் கடைகளைத் திறந்தவுடன் சாமி படங்களுக்குச் சாம்பிராணி ஏற்றி வைத்து பொருட்களுக்குத் தூபம் காட்டி சாமி கும்பிட்டுவிட்டுத்தான் வியாபாரத்தைத் தொடங்குகிறார்கள். இவ்வாறு காலையில் முதல் வேலையாக ஆண்டவனை வழிபட்டு அன்றைய நாளைத் தொடங்குவது நம்மவரின் இரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது.

இந்திய யோகிகளும், தியானம் செய்வதற்கு நான்கு முக்கிய நேரங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவற்றில் முதலும் முக்கியமுமானது அதிகாலைப் பொழுது. சூரிய ஒளியைப் பார்ப்பதற்காகப் பறவைகள் குரல் எழுப்பும் நேரம். கதிரவன் உதிப்பதற்குக் குறைந்தது ஒருமணி நேரத்திற்கு முன்னர், அதாவது இருள் விலகாத நேரம். ஏனெனில் நீண்ட இரவு ஓய்வுக்குப் பிறகு நாம் எழும்புவதால் அந்தக் காலைப் பொழுதில் மனது அமைதியாக இருக்கும். எப்படியெனில், முந்தைய நாள் வகுப்பு முடிந்து அழிக்கப்பட்ட கரும்பலகை போன்று மனது எவ்வித சலனமின்றி காலியாக இருக்கும். அந்தக் காலை நேரத்தில் இயற்கையும் நிசப்தமாக இருக்கும். ஊரும் நகரமும் இரைச்சலின்றி இருக்கும். இந்தக் காலை நேரத்தில் தியானம செய்யும் பொழுது, செபிக்கும் பொழுது அந்த நாள் முழுவதற்கும் தேவையான ஆன்மீக உந்து சக்தியும் கிடைக்கிறது. இதனால் அந்த நாளே நிம்மதியுடன் கழியும்.

இவ்வாறு காலையில் செபிக்கும் பழக்கத்தை, அக்காலத்தில் இஸ்ராயேல் அரசர்களும் மக்களும் கொண்டிருந்தனர். வைகறை செபத்தை இறைவன் கேட்கிறார் என்ற நம்பிக்கையும் அவர்களில் இருந்ததாக திருப்பாடல் 46,5ல் வாசிக்கிறோம். (ஆமோ.4,4.2அரச.3,20). இஸ்ரயேலில் புகழ்பெற்ற அரசர்களில் ஒருவரான (கி.மு.1010-970 சுமார் 40 ஆண்டுகள் ஆட்சி) தாவீதும், காலையில் இறைவனின் பாதுகாப்பை வேண்டித்தான் அன்றைய நாளைத் தொடங்கியிருக்கிறார். இவருக்குப் பகைவர்கள் அதிகம் இருந்ததாக இவரே செபத்தில் குறிப்பிட்டு அவர்களை எதிர்கொள்வதற்கான சக்தியை, ஆயுதங்களிலும் படைபலத்திலும் நம்பாமல், அதேவேளை கடவுளிடம்தான் மன்றாடியிருக்கிறார். இவர் ஆண்டவரின் பண்புகளைப் புகழ்ந்தேத்தி, தனது உள்ளத்து ஏக்கங்களையும் பயங்களையும் கவலைகளையும் ஒப்படைத்து செபித்திருக்கிறார். இத்தகைய அவரது செபங்களில் ஒன்றுதான் திருப்பாடல் ஐந்து. இந்தத் திருப்பாடல் இப்படித் தொடங்குகிறது.......

“ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும். என் பெருமூச்சைக் கவனித்தருளும். விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும். வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன். ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை. ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால், உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும். உமது செம்மையான வழியை எனக்குக் காட்டியருளும். உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர். ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்............”

மன்னன் தாவீது இறைவன்மேல் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து செபிக்கிறார். 12 திருவசனங்கள் கொண்ட இந்தப் பாடலில் ஏழுமுறை, ஆண்டவரே, கடவுளே, அரசரே என்று அழைக்கிறார். அவர் இறைவனோடு எவ்வளவு நெருக்கமானவராக இருக்கிறார் என்பதையே இந்தத் திருச்சொற்கள் வெளிப்படுத்துகின்றன. ஆண்டவரே, நீர் தீமையை வெறுப்பவர், நல்லோரை வழிநடத்துபவர், தீயோரைத் தண்டிப்பவர், நல்லோருக்கு மகிழ்ச்சி அளிப்பவர் என்று ஆண்டவரது பண்புகளை சொல்லித் தனக்கு அருள் வேண்டுகிறார். ஆம். இறைவன் பாவத்தை வெறுக்கிறார். அதேசமயம் மனம்வருந்தும் பாவிகளை அன்புசெய்கிறார். அவர் பாவிகளைத் தண்டிப்பது தமது அன்பை வெளிப்படுத்தவே என்பதைத்தான் இந்தத் திருப்பாடல் ஐந்து நமக்கு உணர்த்துகிறது. கடவுளின் இப்பண்புகள் இயேசு வழியாக நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இயேசு வைகறையில் செபித்தார். இரவெல்லாம் செபித்தார். அவர் சிலுவையில் தொங்கிய போதும் செபித்தார். தம்மை சிலுவைச் சாவுக்குக் கையளித்தவர்களுக்காக, அதில் தொங்கிக்கொண்டே தந்தையிடம் மன்னிப்பை இறைஞ்சினார்.

அன்பர்களே, நம் ஒவ்வொருவரது வாழ்க்கைக்கும் இறைநம்பிக்கையை ஊட்டக்கூடிய செபங்கள், தியானங்கள் மிகவும் முக்கியம். கடவுளை நம்மில் எவ்வாறு ஆழமாகப் பதிப்பது என்பது குறித்து ஒருமுறை ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஒரு கல்லூரி மாணவனிடம், விளக்கினாராம். “செங்கல்சூளையில் வேலை செய்பவர், செங்கல் பதமாக இருக்கும்போதே அதில் அந்தக் கம்பெனியின் பெயரை பதித்துவிடுவார். அதன்பிறகு அந்தச் செங்கலை வெயிலில் காய வைத்து பின்னர் சூளையில் வேக வைப்பார்கள். அப்போது அதில் பதிக்கப்பட்ட கம்பெனி பெயர் அழியாது நிரந்தரமாக இருக்கும். இப்படித்தான் நீயும் இறைவனை உனது மனதில் பதிக்க வேண்டுமானால் உனது மனது மிருதுவானதாக இருக்கும் போதே பதித்துவிட வேண்டும். அது ஒருபோதும் அழியாது”

சுவாமி ஆதிஸ்வரானந்தர் சொல்கிறார் – தினந்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் செபம் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தோமானால் நம் மனதிலும் அந்த நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும். எப்படியெனில் நாம் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே உணவு உட்கொள்ளுகிறோமென்றால் அந்த நேரம் வந்தவுடன் பசி தானாக தோன்றுவது போலத்தான் செபமும். எனவே குறிப்பிட்ட நேரங்களில் தவறாமல் செபம் செய்யப் பழகுவதால் உள்மனதின் ஆற்றல்கள் வலுப்பெற்று நல்ல ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படும் என்று. சுவாமி விவேகானந்தர் சொன்னார் : “அரைமணிநேரத் தியானம் ஆறுமணி நேர உறக்கத்திற்குச் சமம்” என்று.

நாம் தியானம் செய்யும் பொழுது வாழ்க்கையில் முன்னோக்கிப் பயனிக்கிறோம். அத்துடன் நமது ஆன்மீகத் தேவைகளும் பூர்த்திச் செய்யப்படுகின்றன. மனித வாழ்க்கையின் தேவைகள் ஆழ்கடலில் மிதக்கின்ற பனிப்பாறைகள் போன்றவை. ஆழ்கடலில் மேல்பகுதியிலுள்ள தண்ணீர் நமக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால் தண்ணீருக்குள்ளே உள்ள மற்றொரு பகுதி நம் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் இந்தப் பனிப்பாறைகள் போன்ற ஆழ்கடல் பகுதிதான் பெரிய கப்பல்களையும் மூழ்கடிக்கும் அளவுக்கு ஆபத்தானவை. 1912ம் ஆண்டு கடலில் சிதறிய டைட்டானிக் கப்பல் விபத்து நமக்குத் தெரிந்ததே. கடவுளால்கூட மூழ்கடிக்க முடியாது என்று சொல்லி ஆங்கிலேயர்கள் இந்த டைட்டானிக் கப்பலைக் கடலில் விட்டனர். ஆனால் அது தனது முதல் பயணத்திலேயே அதே ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பனிப்பாறையில் மோதி உடைந்து சிதறி 1600 பேரின் உயிரைக் காவு கண்டது.

அன்பர்களே, நமது உடல் தேவைகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் போன்று அதைவிட இன்னும் மேலாக ஆன்மீகத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் இந்த ஆன்மீகத் தேவைகள் கடலுக்குக் கீழே கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பனிப்பாறைகள் போன்றவை. அதை நாம் நிறைவு செய்யாவிட்டால் வாழ்வில் வெறுமையும் விரக்தியும் அர்த்தமற்றதன்மையும் நிறைவின்மையும் நுழைந்து வாழ்க்கையை ஒன்றுமில்லாம்ல ஆக்கிவிடும். நடமாடும் பிணமாக்கிவிடும். ஆபிரகாம் மாஸ்லோ என்ற உளவியல் அறிஞரும் இதைத்தான் சொல்கிறார். எனவே செபத்தின், தியானத்தின் முக்கியத்துவத்தை உணருவோம். ஒவ்வொருநாளும் இனிதே நிறைவடைய, தாவீது அரசர் போல, காலையில் கடவுளின் பாதுகாப்பிற்காக இறைஞ்சுவோம்.

ஒருநிமிடம் நம் கண்களை மூடி செபிப்போமா! எங்கள் நல்ல தந்தையாம் கடவுளே, உம்மில் நம்பிக்கை வைப்போரை, நேரிய இதயத்தோடு உம்மிடம் வருவோரை நீர் ஒருநாளும் கைவிடமாட்டீர். அவர்களுக்கு உம் ஆசிகளை வழங்குகிறீர். இதனால் இவர்கள் எந்நாளும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று இன்று உணர்த்தியிருக்கிறீர். அதற்காக உமக்கு நன்றி. இந்த நாள் முழுவதும் நான் பேசும் சொற்களில், நான் செய்யும் செயல்களில், நான் சந்திக்கும் ஆட்களில் நீர் உமது பிரசன்னத்தால் என்னோடிருந்து, வழிநடத்தும். இந்த நாள் முழுவதும், இறைவா, உமது ஆசி பெற்ற நாளாக அமையட்டும். எனக்கு மட்டுமல்ல, நான் இன்று எதிர்கொள்ளும் எல்லாருக்கும் நிம்மதியும் மன அமைதியும் நிரம்பிய நாளாக அமையட்டும். பொய் பேசுவோரை, ஆணவமிக்கோரை, பொல்லாங்கு செய்வோரை நீர் வெறுக்கிறார் என்பதை அறிந்தே இருக்கிறேன். ஆயினும் ஆண்டவரே நீர் நேர்மையாளருக்கு ஆசி வழங்குகின்றீர். அவர்களை உமது கருணை என்னும் ஆடையால் போர்த்துகிறீர். என்னையும் உமது பெருங் கருணை மழையில் நனைத்தருளும். ஆமென்

ஆண்டவரே நாள் முழுவதும் நீதியின பாதையில் என்னை வழிநடத்தும்.








All the contents on this site are copyrighted ©.