2010-05-10 16:32:20

வலிமைக்கான வலிகள்


மே10,2010 இம்மாதப் பத்திரிகை ஒன்றில் வாசித்ததை அன்பு நேயர்களே, உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். "வாழ்க்கை நமக்கு வலிமையைக் கொடுக்கிறதுக்காகவே சில வலிகளைக் கொடுக்கும். ஆனால் என் வாழ்க்கையில நான் அனுபவிச்சிட்டிருக்கற வலிதான், வெற்றிகளை நோக்கி என்னை நடக்க வெச்சுக்கிட்டே இருக்குது" – இப்படிச் சொல்லி தனது வாழ்க்கையை விவரிக்கிறார் சிதம்பரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்தப் பெண் தொழிலதிபர். அந்தப் பெண் மிகுந்த செல்லமாக வளர்ந்தவர். இளங்கலை பட்டதாரி. படிப்பு முடிந்த கையோடு திருமணமும் முடிந்து விட்டது. ஓர் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அளவற்ற மகிழ்ச்சியில் சாமிக்கு மனதுருகி நன்றி சொன்ன அவரது மகிழ்ச்சியில் ஓர் இடி விழுந்தது. குழந்தை பிறந்து இருபத்தி எட்டாவது நாள் அது மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் வைத்து சிகிச்சையும் கொடுத்தார்கள். பிள்ளை தெளிவாய் இருக்கிறான் என்று நினைத்து வீட்டிற்கு கொண்டு சென்றார்கள். ஆனால் வீட்டிற்கு வந்த பின் குழந்தை சிரிக்கல, அழல. படுத்த படுக்கையாத்தான் கிடந்தான். இதற்கு காரணம் என்னவென்று மீண்டும் மருத்துவரிடம் சென்ற போது மஞ்சள்காமாலைக்கு கொடுத்த மருந்து ஒவர் டோஸ் ஆகி, குழந்தையோட மூளையை சுத்தமாகப் பாதித்துவிட்டது என்று சொன்னார்கள். பிறந்ததிலிருந்து கஷ்டம் என்ன என்று தெரியாமல் வளர்ந்த அந்தத் தாயைக் கடவுள் ஒட்டுமொத்தமாகத் துவைத்து எடுத்தாற்போன்ற உணர்வு அவருக்கு. கடந்த 13 ஆண்டுகளாக பையன் படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறான். அதேசமயம் அந்தத் தாய் இன்று ஒரு தொழில் அதிபராக மாறுவதற்கும் அவனே திரியாகியிருக்கிறான்! காரணம் அவனின் மருத்துவச் செலவுகளுக்குக் கணவனின் ஊதியம் பற்றாமல் போக, அந்தத் தாயும் வேலைக்கு போகவேண்டிய கட்டாயம் வந்தது. பையனைக் கவனித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் அப்பாவும் திடீர் என்று இறந்துபோக, அந்த நெருக்கடிதான் இன்னிக்கு என்னை ஒரு தொழில் முனைவோராகச் ஜெயிக்க வச்சுருக்கு" என்று சொல்லியிருக்கிறார், கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்தபடி ... இன்று மாதத்துக்கு இலட்சங்களில் வருமானம் ஈட்டவல்ல வாழைநார் வியாபாரம் செய்து வருகிறார்.

“யாருடைய இதயம் மற்றவர்களுக்காகப் பாடுபடுகிறதோ, அவர்களை மகாத்மா என்பேன்” என்று சொன்னவர் இரபீந்திரநாத்தாகூர். நமது மனப்பாங்கு சரியாக இருந்தால் வைரங்களின் மேல் நாம் எல்லாரும் நடந்து செல்வதை உணர்வோம். வாய்ப்பு என்பது எப்போதுமே நமது காலடிகளுக்குக் கீழேயே உள்ளது. நாம் இதனைத் தேடி வேரெங்கும் போக வேண்டியதில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த வாய்ப்பைக் கண்டுணர்வதாகும் என்று ஓர் எழுத்தாளர் சொல்லியிருக்கிறார். இந்த வாழைநார் தொழிலதிபர், துன்பம் துவட்டி எடுத்த போது மூலையிலே முடங்கிவிடாமல் விழித்துக் கொண்டார். வாய்ப்புகள் தன்னைத் தேடிவரும் என்று காத்திருக்கவில்லை. மாறாக அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். பத்திரிகைகளை வாசித்தார். தொலைக் காட்சி செய்திகளைக் கேட்டார். பலரது ஆலோசனைகளைக் கேட்டார். அவர் சொல்கிறார் -

சுற்றுச்சூழல் மாசு பிரச்னைகளால் பிளாஸ்டிக் விடயத்தில் உலகம் முழுவதுமே ஓர் எதிர்ப்பு இருக்கிறது. அதனால், அதற்குப் பதிலாக வாழைநார் பொருட்களுக்கு நல்ல தேவையும் இருக்கிறது. ஜப்பான் நாட்டு கரன்சியே வாழைநாரிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் வாழைநாரிலிருந்து தயாரித்த டிஷ்யூ பேப்பரைத்தான் பயன்படுத்துகிறார்கள்.. பேப்பர், சட்டை, அலுவலக ஃபைல், காலணிகள், அழகுப் பொருட்கள் என்று பல்வேறு பொருட்களை வாழைநாரிலிருந்து உருவாக்கலாம். காதி கிராஃப்ட், பூம்புகார், மேப் இண்டியா போன்ற பல நிறுவனங்களிலேயும் வாழைநார் அலங்காரப் பொருட்களுக்குத்தான் இப்போது மவுசு. இந்திய அரசுகூட வாழைநாரில் பொருட்கள் தயாரிக்கிறதை ஊக்குவிப்பதற்காக நிறைய மானியங்களை வழங்கிறது! இவ்வளவு தகவல்களையும் தெரிஞ்சுக்கிட்டப்போ, 'நாம ஏன் வாழை நார் பொருட்கள் தயாரிக்கக் கூடாது?'னு மனதிற்குள் ஒரு நம்பிக்கை வந்துச்சு" என்று.

அந்தப் பெண் தொழிலதிபருக்கு அந்தப் புள்ளியில்தான் அவர் வாழ்வுக்கான வெளிச்சம் புரிந்திருக்கிறது. அதன்பின் அதற்கான தன் தேடலை, முயற்சியை, உழைப்பை, தன்னம்பிக்கையை தீவிரப்படுத்தியிருக்கிறார். முதலில் எந்த ஒரு தொழிலிலும் இக்கரைக்கு அக்கரைப் பச்சையாகத்தான் தெரியும். அக்கரையிலுள்ள பசுமை நன்றாக இருக்கிறதே என்று அதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வேறு சிலர் நாமிருக்கும் கரையைப் பசுமையெனப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு நம்மிடம் இடம் மாற்றிக் கொள்ள விரும்புவார்கள். வாய்ப்பினை எப்படி கணடுணர்வது என்று தெரியாதவர்கள் அந்த வாய்ப்பு அவர்களது கதவைத் தட்டும் போது அந்தச் சத்தத்தைப் பற்றிக் குறைகூறிக் கொண்டிருப்பார்கள். ஒரே வாய்ப்பு இருமுறை வருவதில்லை. அடுத்த வாய்ப்பு நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாமே தவிர ஒருபொழுதும் அதே வாய்ப்பு இருக்காது என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அன்பர்களே, ஆப்ரிக்காவில் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அக்கண்டத்தில் மனதிருப்தியுள்ள ஒரு விவசாயி இருந்தார். அவர் மனநிறைவுடன் இருந்தார். அதனால் மகிழ்ச்சியாக இருந்தார். மகிழ்ச்சியாக இருந்ததால் மனநிறைவுடன் இருந்தார். ஒரு நாள் ஒரு ஞானி அவரிடம் வந்தார். அவரிடம் வைரங்களின் மகத்துவத்தைப் பற்றியும் அந்த வைரங்களுக்குள்ள சக்தியைப் பற்றியும் எடுத்துக் கூறினார். அந்த ஞானி, “உன்னிடம் உன் கட்டைவிரல் அளவு வைரம் இருந்தால் நீ உனக்கென்று ஒரு சொந்த நகரத்தையே வாங்கிவிட முடியும். உன் கையளவு வைரம் இருந்தால் நீ உனக்கென்று ஒரு சொந்த நாட்டையே வாங்கி விடலாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அன்றிரவு அந்த விவசாயியால் தூங்கவே முடியவில்லை. அவர் மகிழ்ச்சியாக இல்லை. மனநிறைவோடும் இல்லை. மறுநாள் காலை அவரது நிலங்களை விற்க ஏற்பாடு செய்துவிட்டு அவரது குடும்பத்தினருக்கு வேண்டியவற்றைச் செய்துவிட்டு வைரங்களைத் தேடி புறப்பட்டார். அவர் ஆப்ரிக்கா முழுவதும் தேடினார். பின்னர் ஐரோப்பா முழுவதும் தேடினார். வைரம் மட்டும் கிடைக்கவேயில்லை. மனரீதியாகவும் பணரீதியாகவும் நிலைகுலைந்தார். இறுதியில் அவர் மிகவும் மனச்சோர்வடைந்து ஸ்பெயினில் பார்சலோனா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் அந்த விவசாயியின் நாட்டில் என்ன நடந்தது என்றால் அவரது நிலத்தை வாங்கியவர் அந்த நிலத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒரு நீரோடையில் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது சூரியனின் கதிர்கள் அந்த நீரோடையைக் கடந்து எதிர்ப்புறம் இருந்த கல்லின்மேல் விழுந்தன. அந்தக் கல் ஒரு வானவில்லைப் போல் ஜொலித்தது. அதைப் பார்த்த அவர் அந்தக் கல்லை தனது வீட்டின் வரவேற்பறையில வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அதை எடுத்துக் கொண்டு போய் வைத்தார். அன்று மாலை அந்த ஞானி திரும்ப வந்தார். அந்தக் கல்லைப் பார்த்துவிட்டு, “ஹபீஸ் திரும்ப வந்துவிட்டாரா?” என்று அந்தப் புதிய முதலாளியிடம் கேட்டார். இன்னும் இல்லை, ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டார். ஏனென்றால் அது ஒரு வைரம் ஆகும். நான் ஏதாவது ஒன்றைப் பார்த்தால் அது என்னவாக இருக்கும் என்பதைக் கண்டுபிடித்துவிடுவேன் என்றார். அதற்கு அந்த ஆள், இல்லை, இது நீரோடையிலிருந்து நான் பொறுக்கி எடுத்து வந்த சாதாரண கல்லே என்றார். வாருங்கள். இது போன்று பலகற்கள் உள்ளன என்று ஞானியை அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரும் சென்று சிலமாதிரி கற்களைப் பொறுக்கி எடுத்து அவற்றை ஆராய்ச்சி செய்ய அனுப்பினர். உண்மையிலேயே அந்தக் கற்கள் அனைத்தும் வைரங்களே.

அன்பர்களே, நமது மனப்பாங்கு சரியாக இருந்தால் ஏக்கர் ஏக்கராகப் படிந்துள்ள வைரங்களின் மேல் நடந்து செல்வோம். ஒரு பின்னடைவினை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைத் தீர்மானிப்பது நம் மனப்பாங்கே. நேர்நிலைச் சிந்தனையாளருக்கு இது வெற்றிக்கானப் படிக்கல்லாக இருக்கும். எதிர்நிலைச் சிந்தனையாளருக்கோ இதுவே முட்டுக்கட்டையாக இருக்கும். விவிலியத்தில் தாவீது கோலியாத் கதை தெரிந்திருக்கும். கோலியாத் மாபெரும் வீரன். உயரமானவன். உடலுறுதி கொண்டவன். எனவே இந்தப் பொடியன் மாவீரனாகிய என்னை என்ன செய்துவிட முடியும் என்று எதிர்நிலையாகச் சிந்தித்தான். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் தாவீதின் வில்வாரிலிருந்து சென்ற சிறிய கல் கோலியாத்தை நிலைகுலையச் செய்தது. அந்த இடத்திலே மாவீரன் மாண்டான். தாவீதின் நேர்நிலை மனப்பாங்கு அவனுக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

கலீல் கிப்ரான் சொன்னார் – வாழ்க்கை ஓர் ஊர்வலம். மெதுவாக நடக்கிறவனுக்கு அதன் வேகம் அதிகம். அதனால் தள்ளி நின்று விடுகிறான். வேகமாக நடக்கிறவனுக்கு அதன் வேகம் குறைவு. அவனும் தள்ளி நின்று விடுகிறான். எல்லாச் சக்திகளையும்விட மனதுக்குத்தான் சக்தி அதிகம். சிலசமயம் எதிர்ப்புக்களை அது தூள்தூளாக்கி விடும். ஆனாலும் நம்பிக்கை இல்லாதவர்களைக் கண்டு இரங்குங்கள். காரணம் அவர்கள் பலவீனத்தையும் அறியாமையையும் அடையாளம் இழந்து நிற்கிறார்கள் என்று.

எனவே நமது மனப்பாங்கு சரியாக இருந்தால் சிறு புள்ளியிலிருந்து உலகையே உருவாக்கலாம். பூஜ்யத்திலிருந்து ராஜ்யத்திற்குள் நுழையலாம். மனமது செம்மையானால் வாழ்க்கையில் எல்லாமே வெற்றிப்படிகளாகத்தான் இருக்கும். "வாழ்க்கை நமக்கு வலிமையைக் கொடுக்கிறதுக்காகவே சில வலிகளைக் கொடுக்கும். ஆனால் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கிற வலிதான், சிலருக்கு வெற்றிகளை நோக்கி நடக்க வைக்கின்றன. எனவே மனப்பாங்கைச் சீர்படுத்தி வாய்ப்புக்களைத் தேடி முன்னேற முயற்சிப்போம். அப்போது அது மனதிற்கு உற்சாகத்தைத் தரும். ஆராய்ந்துதேடி முயல்பவர்கள்தாம் புதியனவற்றைக் காண்பர்.








All the contents on this site are copyrighted ©.