2010-05-07 16:14:53

ஜார்ஜிய அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


மே07,2010 ஜார்ஜியக் குடியரசுத் தலைவர் Mikheil Saakashviliஐ இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஏறக்குறைய 35 நிமிடங்கள் திருத்தந்தையைத் தனியே சந்தித்துப் பேசிய ஜார்ஜியத் தலைவர் Saakashvili, திருத்தந்தையைத் தான் சந்திப்பது தனக்குக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகக் கருதுவதாகக் கூறினார்.

பின்னர், தனது மனைவி Sandra Roelofsயையும் திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்திய அவர், மிகப்புகழ் வாய்ந்த ஜார்ஜிய துறவு மட வண்ண ஓவியம், ஒரு சிறிய புனித ஜார்ஜ் திருவுருவம் ஆகியவற்றைத் திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கினார்

மேலும், திருத்தந்தையும், ஜார்ஜியத் தலைவருக்குப், பெர்னினித் தூண்களை எடுத்துக்காட்டும் பேனாவைப் பரிசளித்தார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஜார்ஜிய அரசுத் தலைவர்.

ஜார்ஜியப் பகுதியின் பிரச்சனைகளை, அதில் சம்பந்தப்பட்ட குழுக்களுக்கிடையே உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்குமாறு திருத்தந்தை அந்நாட்டுத் தலைவரிடம் அழைப்பு விடுத்தார். மேலும், அப்பகுதியின் பல்வேறு மதங்கள் மத்தியில் அமைதியான நல்லிணக்க வாழ்வுக்கும் திருத்தந்தை ஊக்கப்படுத்தினார்.

கிழக்கு ஐரோப்பாவும் மேற்கு ஆசியாவும் சந்திக்கும் இடத்தில், மேற்கில் கருங்கடலையும் வடக்கில் இரஷ்யாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது ஜார்ஜியா. இது 1991ம் ஆண்டில் சுதந்திர நாடானது.










All the contents on this site are copyrighted ©.