2010-05-07 16:21:07

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததன் 65ம் ஆண்டு, ஐ.நா.வில் நினைவுகூரப்பட்டது


மே07,2010 ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததன் 65ம் ஆண்டை, ஐ.நா.வில் நடைபெறும் அணுஆயுதக் களைவு குறித்த மாநாட்டில் இவ்வியாழனன்று நினைவுகூர்ந்த அதேவேளை, சுதந்திரம் மற்றும் விடுதலைக்காக அசாதாரண தைரியத்துடன் இந்தப் போரில் ஈடுபட்டு இறந்த அனைவருக்கும் மரியாதை செலுத்தினார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

எண்ணிக்கையில் அடங்காத, கணக்கிட முடியாத அளவுக்கு ஆட்சேதம் மற்றும் பொருட்சேதத்தை இந்தப் போர் ஏற்படுத்தியது என்றும் நான்கு கோடி அப்பாவி பொது மக்களும் இரண்டு கோடி படைவீரர்களும் இறந்தனர், இவர்களில் ஏறத்தாழ பாதிப்பேர் முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்தவர்கள் என்றும் பான் கி மூன் அறிவித்தார்.

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் 1945ம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தாலும் ஆசியாவில் அவ்வாண்டு ஆகஸ்ட் வரை அது நீடித்தது என்றும் அவர் தெரிவித்தார்.

உலகில் அனைவரும் அமைதியும் பாதுகாப்பும் வளமையும் நிறைந்து வாழும் பாதையை நோக்கி நாம் தொடர்ந்து உழைக்க இந்த நினைவுநாள் அழைப்பு விடுக்கின்றது என்றும் ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.