2010-05-06 16:38:36

திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களின் ஆழமான விசுவாசம், பாப்பிறைக்கும் கர்தினால் பெர்த்தோனே


மே06,2010 திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களின் சேவை திறமையும் மதிப்பும் கொண்ட பணி என்பதால் இதற்கு அர்ப்பணமும் வினைத்திட்பமும் தேவைப்படுகின்றன என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.

வத்திக்கானில் பணியாற்றும் திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகிய சுவிஸ் கார்ட்ஸ்க்கு வத்திக்கான் பசிலிக்காவில் இவ்வியாழன் காலை திருப்பலி நிகழ்த்திய கர்தினால் பெர்த்தோனே, இவர்களின் ஆழமான விசுவாசம், பாப்பிறைக்கும் திருச்சபைக்குமான இவர்களின் அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு உதவுகின்றது என்றும் பாராட்டினார்.

1527ம் ஆண்டு உரோம் சூறையாடப்பட்ட போது, திருத்தந்தை ஏழாம் கிளமென்ட்டைப் பாதுகாப்பதற்காகப் போரிட்ட சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர், அவ்வாண்டு மே 6ம் தேதி கொல்லப்பட்டனர். இந்தப் படைவீரர்களின் நினைவாக, சுவிஸ் படைவீரர்கள் திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாக வத்திக்கானில் சேவைபுரிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் மே 6ம் தேதி சுவிஸ் கார்ட்ஸ் புதிதாகப் பணியில் சேரும் நிகழ்வும் வத்திக்கானில் நடைபெறுகின்றது. இவ்வியாழன் மாலை 30 பேர் புதிதாகப் பணிப்பிரமாணம் எடுத்தனர்.

இந்த நிகழ்வையொட்டி இப்படைவீரர்களுக்குத் திருப்பலி நிகழ்த்திய கர்தினால் பெர்த்தோனே, தியாகம் நிறைந்த இந்த வரலாற்று நிகழ்வைக் குறிப்பிட்டு அவர்கள் எப்பொழுதும் திருப்பீடத்துக்குப் பிரமாணிக்கமாக இருப்பதைப் புகழ்ந்து பேசினார்.

சுவிஸ் கார்ட்ஸ் வத்திக்கானில் சேவையாற்றுவதற்கு அவர்கள் விசுவாசம் நிறைந்த உரோமன் கத்தோலிக்கராகவும் சுவிஸ் குடிமகன்களாகவும் 19க்கும் 30 வயதுக்கும் உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்கள் குறைந்தது 25 மாதங்கள் பணி செய்ய வேண்டும். அதற்கு மேல் அவர்கள் இப்பணியை விட்டுவிடலாம் அல்லது அதில் தொடர்ந்து இருக்கலாம்.








All the contents on this site are copyrighted ©.