2010-05-05 17:56:35

அணுஆயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்ற தனது வேண்டுகோளை ஐ.நாவில் சமர்ப்பித்தார் நாகசாகி கத்தோலிக்க பேராயர்


மே05,2010 உலகில் அணுஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்ற தனது வேண்டுகோளை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் முன்வைத்துள்ளார் ஜப்பானின் நாகசாகி கத்தோலிக்க பேராயர் Joseph Mitsuaki Takami.

உலகில் அணுஆயுதப்பரவல் தடை குறித்து பரிசீலனை செய்யும் 8வது கருத்தரங்கு நியுயார்க்கில், இத்திங்களன்று தொடங்கியுள்ளவேளை, அந்நாளில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனைச் சந்தித்து, ஹிரோஷிமா ஆயர் Atsumi Misue ம் தானும் இணைந்து முன்வைத்துள்ள இந்த விண்ணப்ப அறிக்கையைச் சமர்ப்பித்தார் நாகசாகி பேராயர் தகாமி.

இதனைப் பெற்றுக் கொண்டு பேசிய ஐ.நா.பொதுச் செயலர், ஒரு சமயத் தலைவரிடமிருந்து, ஒரு கத்தோலிக்க ஆயரிடமிருந்து வந்துள்ள அழைப்பு மிகவும் முக்கியம் வாயந்தது என்று கூறினார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாசி நகரில் அணுகுண்டு போடப்பட்ட பின்னரும் அதற்கு முன்னரும் ஆலயங்கள் காணப்பட்ட தோற்றங்கள் குறித்தப் புகைப்படங்களையும் அதற்கானக் கொரிய மொழியிலான வழிகாட்டி கையேட்டையும் பான் கி மூனிடம் கொடுத்தார் நாகசாகி பேராயர் தகாமி.

ஹிரோஷிமாவில் அணுகுண்டு போடப்பட்டதன் 65ம் ஆண்டை முன்னிட்டு இவ்வாண்டு ஆகஸ்ட் 6ம் தேதி அந்நகருக்குத் தான் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் மூன் பேராயரிடம் தெரிவித்தார்.

உலகில் அணுஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படவும் போர்களற்ற உலகை நிஜமாக்கவுமான பாதையை நோக்கி உலகத்தலைவர்கள் தைரியமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆயர்களின் அறிக்கை பரிந்துரைக்கின்றது.

நியுயார்க்கில் இம்மாதம் 3ம் தேதி தொடங்கிய இக்கருத்தரங்கு 28ம் தேதி நிறைவடையும்








All the contents on this site are copyrighted ©.