2010-05-04 15:48:41

மே, 05 – நாளுமொரு நல்லெண்ணம்


Bankei என்ற சென் குரு இறைவனடி சேர்ந்தார். அவர் வாழ்ந்த மடத்துக்கு அருகே, பிறவியிலேயே பார்வை இழந்த ஒருவர் வாழ்ந்து வந்தார். குருவின் மறைவு பற்றி கேட்டதும் பார்வை இழந்தவர் தன் நண்பரிடம் கூறினார்: "எனக்குப் பார்க்கும் திறன் இல்லாததால், ஒருவர் பேசும்போது, அவரது குரலில் உள்ள தொனியை வைத்து அவரது மன நிலையைப் புரிந்து கொள்வேன். பொதுவாக ஒரு மனிதர் மற்றொருவரின் சாதனையைப் புகழும்போது, அந்தக் குரலில் கொஞ்சம் பொறாமை கலந்திருப்பதை என்னால் உணர முடியும்.

ஒருவர் மற்றொருவருடைய இழப்பு குறித்து அனுதாபங்களைக் கூறும் போது, அவர் குரலில் லேசான ஒரு மகிழ்ச்சியை உணர முடியும். தனக்கு அந்த இழப்பு இல்லை என்ற நிம்மதி தரும் மகிழ்ச்சி அது.

ஆனால், குரு Bankei பேசியபோதெல்லாம் அவர் சொல்லில் இருந்த உண்மை உணர்வுகள் அவரது குரலிலும் ஒலித்ததை நான் கேட்டேன். அவர் மகிழ்வாய் எதையாவது கூறினால், அவர் குரலில் மகிழ்வு மட்டுமே ஒலித்தது. அவர் தன் சோகத்தை வெளிப்படுத்தினால், அவர் குரலில் சோகம் மட்டுமே ஒலித்தது" என்று அந்த சென் குருவை பார்வையற்றவர் புகழ்ந்தார்.

எந்த வித கலப்படமும் இல்லாமல் உண்மைகளை, உணர்வுகளை வெளிப்படுத்துவது மிகவும் கடினம். ஞானிகளுக்கு முடிந்தது. நமக்கும் இது முடியும், முயன்றால்...








All the contents on this site are copyrighted ©.