2010-05-03 16:34:51

விதவைகள் மறுவாழ்வுக்கு இந்தியாவிடமிருந்து 25 கோடி - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா


மே 03,2010 இலங்கையில் வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு இந்திய அரசு 25 கோடி ரூபாய் வழங்க இசைவு தெரிவித்துள்ளதாக உதவி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி உதவி அமைச்சராகப் பதவியேற்ற பின் உதவி அமைச்சர் ஹிஸ்புல்லா இந்தியத் தூதுவர் அசோக்காந்தை அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தையின்போதே இந்த இசைவு காணப்பட்டுள்ளதாக அவ்வமைச்சர் தெரிவித்தார். தனது பொறுப்பை ஏற்ற பின் முதல் நடவடிக்கையாக வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை மேம்பாடு சம்பந்தமாக இந்தியத் தூதுவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறிய உதவியமைச்சர், இப்பேச்சுவார்த்தையின் பயனாக உடனடியாக 25 கோடி ரூபாய் நிதியை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதெனவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள் சுமார் 50,000 பேர் உள்ளனர். இவர்களில் ஆயிரம் பேருக்கு சுய தொழில்களை மேற்கொள்வதற்கு இந்த 25 கோடி ரூபாய் நிதியும் செலவிடப்படவுள்ளது எனக் கூறப்படுகின்றது.

இதேபோன்று ஏனைய நாடுகள் சர்வதேச அமைப்புகளுடனும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வடக்கு, கிழக்கில் வாழும் பெண்கள், சிறுவர்கள் அதிலும் குறிப்பாக போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே தமது நோக்கமாகுமெனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.