2010-05-03 16:28:01

மே03 உலக பத்திரிகை சுதந்திரம்


மே03,2010 ஒரு சமயம் இலண்டன் மாநகரில் மாலைப் பொழுதில் சுவாமி விவேகானந்தர் அவரது நண்பர், நண்பருடைய மனைவி ஆகியோருடன் நடந்து கொண்டிருந்தார். திடீரென்று அவரது நண்பரின் மாட்டுப்பண்ணைக்குள் மாடுகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. முரட்டு மாடுகளுள் ஒன்று கயிற்றை அறுத்துக் கொண்டு முரட்டுத்தனமான வேகத்தில் அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அந்த மாட்டைக் கண்டவுடன் விவேகானந்தரது நண்பரும், நண்பருடைய மனைவியும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர். ஆனால் விவேகானந்தர் ஓடவில்லை. அங்கேயே நிதானமாக மாடு வருவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். அவரை நெருங்கி வந்த அந்த மாடு வந்த வேகத்தில் அவர் நிற்பதையே கண்டுகொள்ளாமல் கடந்து சென்று ஓடிக் கொண்டிருந்தவர்களை விரட்ட ஆரம்பித்தது. தப்பி வந்த அவர்கள் இருவரும் அவரிடம், காளை வந்ததும் தப்பி ஓடாமால் அங்கேயே நின்று என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டனர். அதற்கு விவேகானந்தர், காளை வரும் வேகம் என்ன? அதன் கொம்புகளின் தன்மை என்ன? அதன் எடை உயரம் எவ்வளவு இருக்கும்? அருகில் வந்தவுடன் எப்படி சமாளிப்பது? இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன், மொத்தத்தில் காளையைச் சமாளிக்கத் தயாராய் நின்றேன் என்றார். ஆம். பிரச்சனை கண்டவுடன் ஓடினால் அது ஓடஓட விரட்டும். மாறாக அச்சமயத்தில் துணிந்து நின்றால் அது தானாக விலகி விடும்.

அன்பு நேயர்களே, பிரச்சனை கண்டவுடன் ஓடிஒளியாமல் துணிந்து நிற்கிறார்கள் உண்மையை உரக்க எதிரொலிக்கும் பத்திரிகையாளர்கள். சாவுக்கான அச்சுறுத்தல் எத்தனைமுறை வந்தாலும் அவர்களின் எழுதும் விரல்கள் மட்டும் இன்னும் வீரம் கொண்டு எழுதுகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி கொழும்புவில் கொல்லப்பட்ட இலங்கை சண்டேலீடர் பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க பற்றி ஊடகவியலார் இப்படித்தான RealAudioMP3 ் சொல்கின்றனர்.

லசந்த, தான் கொலை செய்யப்படக்கூடும் என்பதை முன்னரே அறிந்திருந்தார். அவ்வாறு கொலை செய்யப்பட்டால் அரசால்தான் கொல்லப்படுவேன் என்று அவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தன் வாக்குமூலத்தை மரண சாசனமாக எழுதிவைத்திருந்தார். அவர் இறந்த மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரது மனைவி சொனாலி அதனை வெளியிட்டார். சொனாலியும் பத்திரிகை நிருபர்தான். சொனாலி சொல்கிறார்- லசந்த இலங்கையில் இடம் பெற்ற போருக்கு எதிராகக் குரல் எழுப்பினார். இருதரப்புகளினாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தார் என்று.

RealAudioMP3 இலங்கையில் கடந்த மூன்றாண்டுகளில் 9 பத்திரிகையாளர்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை மட்டுமல்ல, உலகின் பலநாடுகளில் நீதிக்கும் உண்மைக்கும் மனித உரிமைகளுக்கும் குரல் எழுப்பும் பத்திரிகையாளர் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களில் பத்தரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறைந்தது 11 பதிவாகியுள்ளன. இந்த ஏப்ரல் 26ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் Gowhar Bhat என்ற காஷ்மீர் பத்திரிகையாளர் ஸ்ரீநகர் பாதுகாப்புப் படையினரால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டார். இந்த ஏப்ரல் 5ம் தேதி ஒரிசாவின் கலிங்கநகரில் காவல்துறை கிராமத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை அமுல்யா பானி என்ற பத்திரிகையாளர் செய்தி கொடுத்ததால் அவர் தாக்கப்பட்டார். இவ்வாறு ஜனநாயக இந்தியா உட்பட உலகில் பல நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் பறந்து போகும் நிலையையும் காண முடிகின்றது.

உலகில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதில் ஏறத்தாழ 90 விழுக்காட்டு வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலே விடப்படுகின்றனர் என்று உலக பத்திரிகையாளர் அமைப்பின் இயக்குனர் ஜோயெல் சிமோன் குறை கூறியுள்ளார். பிலிப்பைன்ஸ், இலங்கை, பாகிஸ்தான், ரஷ்யா, இராக் போன்ற நாடுகளில் பத்திரிகையாளர்க்கெதிராகக் கடும் வன்முறைகள் நடப்பதாகத் தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் ஜஹாங்கீர் ஆகாஷ் என்ற பத்திரிகையாளர் புரட்சிப் படைகளால் நள்ளிரவில் அவரது வீட்டில் வைத்து அவரது மனைவி மற்றும் அவரது சிறுகுழந்தையின் முன்னிலையில் சித்ரவதைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் பங்களாதேஷ் பத்திரிகையாளர் அமைப்பின் தலைவர். இவர் தைரியமான பத்தரிகையாளர். 15 மணிநேரம் தொங்கவிடப்ப்டடு சித்ரவதைப்படுத்தப்பட்டதாக அந்நாட்டினர் கறினர்.

எனவே பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆண்டு தோறும் மே மாதம் மூன்றாம் தேதியை உலக பத்திரிகை சுதந்திர நாளாகக் (World Press Freedom Day) கடைபிடித்து வருகிறது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி இது அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டு இதேநாளில் ஆப்ரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக, "பத்திரிகை சுதந்திர சாசனம்" (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு வருடாவருடம் யுனெஸ்கோ நிறுவனத்தினர் விருது (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது 1986 டிசம்பர் 17 இல் கொல்லப்பட்ட கொலம்பிய பத்திரிகையாளர் "கில்லெர்மோ இசாசா" (Guillermo Cano Isaza) என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உலக நாளையொட்டி இந்தியாவில் இந்தச் சுதந்திரம் எப்படி இருக்கின்றது என்று அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான திருவாளர் பழ கருப்பையாவிடம் தொலை பேசியில் கேட்டோம். RealAudioMP3

டாக்டர் மு.வரதராசனார் சொன்னார் – “நம் கடமையைச் செய்வோம். நடப்பது நடக்கட்டும் என்று இருப்போம். கடமையைச் செய்வதற்கே நமக்கு உரிமை உண்டு” என்று. பத்திரிகையாளரின் செயல்பாடும் இவ்வாறு இருக்கிறது. ஆயினும் இக்காலத்தில் இடம் பெறும் சில நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஊடகவியலார் உண்மையை உரைப்பவராக, பணத்திற்கு அடிமையாகாதவராக, நேர்மையின் நெறியில் நடப்பவராக இருந்தால் அப்பாவிகளின் மாண்பும் மதிப்பும் காக்கப்படும். ஊடகவியலாரும் மக்கள் எண்ணங்களில் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுவார்கள். உண்மை பேசி நன்மை செய்தால் உலகம் உன்னை வணங்கும்.








All the contents on this site are copyrighted ©.