2010-05-03 16:30:19

இறக்கும் நேரத்தில் ஏற்படும் கடும் தனிமையிலும்கூட நம்மை அழைக்கின்ற ஒரு குரல் இருக்கின்றது- திருத்தந்தை


மே03,2010 இறக்கும் நேரத்தில் ஏற்படும் கடும் தனிமையிலும்கூட நம்மை அழைக்கின்ற ஒரு குரல் இருக்கின்றது மற்றும் நம்மை நோக்கி விரிக்கின்ற கரம் இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வடஇத்தாலியின் தூரின் நகருக்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அந்நகர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள இயேசுவின் சவப்போர்வையை ஞாயிறு மாலை தரிசித்து ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

இந்த நேரத்திற்காகவே நான் சிலகாலமாகக் காத்திருந்தேன், இந்தப் புனிதத்துணியின் முன்பாக ஏற்கனவே ஒருதடவை இருந்துள்ளேன், ஆயினும் இந்தத் திருப்பயணத்தில் இந்த அனுபவம் ஒரு குறிப்பிட்ட ஆழமான அனுபவமாக இருக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.

இந்தப் புனிதத்துணி தற்போது பொது மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ள, “புனித சனிக்கிழமைப் பேருண்மை” என்ற கருப்பொருளை மையமாக வைத்துப் பேசிய திருத்தந்தை, புனித சனிக்கிழமை, மரணத்திற்கும் உயிர்ப்புக்கும் இடையேயான ஒரு காலமாக இருக்கின்றது, எனினும் மனிதனுக்காக தனது திருப்பாடுகளின் அடையாளத்தோடு ஒருவர், ஒரேயொருவர் இந்த இடைவெளியைக் கடந்து சென்றுள்ளார் என்றுரைத்தார்.

புனித சனிக்கிழமையன்று நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று அதாவது இறையன்பு நரகத்தை ஊடுருவியது நிகழ்ந்துள்ளது, எனவே மிகக் கொடூரமான மனிதத் தனிமையிலும் நம்மை அழைக்கும் குரலை நாம் கேட்க முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.

இயேசுவின் இறந்த உடலை மூடியிருந்த துணியாக நம்பப்படும் 4.3 மீட்டர் நீளமும் 1.1 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் புனித்துணி தூரின் பேராலயத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.








All the contents on this site are copyrighted ©.