2010-05-01 15:28:05

தூரின் நகருக்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை


மே01,2010 இறந்த இயேசுவின் திருஉடலை போர்த்தியிருத்த சவப்போர்வையாக நம்பப்படும் திருத்துணியைப் பார்வையிடுவதற்காக தூரின் நகருக்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

தூரின் விமான நிலையத்தை ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.15 மணிக்கு அடையும் திருத்தந்தை, அந்நகர் San Carlo வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தி அல்லேலூயா வாழ்த்தொலி உரையும் வழங்குவார்.

ஆயர்களுடன் மதிய உணவு அருந்தும் அவர், மாலை 4.30 மணிக்கு San Carlo வளாகத்தில் இளையோரைச் சந்திப்பார். பின்னர், 5.30 மணிக்கு புனித ஜான் பேராலயத்தில் இயேசுவின் சவப்போர்வையைத் தரிசிப்பார்.

பின்னர் புனித கொத்தோலெங்கோ இறைபராமரிப்பு சிறிய இல்ல ஆலயத்தைத் தரிசித்து அங்கு நோயாளிகளையும் சந்திப்பார். இரவு 7.30 மணிக்கு தூரினிலிருந்து வத்திக்கானுக்குப் புறப்படுவார் திருத்தந்தை.

வட இத்தாலியிலிருக்கின்ற தூரின் நகர் பேராலயத்தில் வைத்துக் பாதுகாக்கப்பட்டு வரும் இப்புனிதத் துணியானது பொது மக்களின் பார்வைக்கென இந்த ஏப்ரல் 10ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இது மே மாதம் 23ம் வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்தத் திருத்துணி, 1532ம் ஆண்டில் தீயினால் சேதமடைந்த பின்னர் அதில் போடப்பட்ட தையல்கள், ஒட்டுத்துணிகள் ஆகியவை 2002ம் ஆண்டில் அகற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட பின்னர் தற்சமயம் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டில் இதன் வலது பக்கத்தில் ஒரு சிறிய பகுதி வெட்டப்பட்டு ரேடியோ கார்பன் பரிசோதனைக்காக நான்கு பல்வேறு பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு முன்னர் 2000மாம் ஜூபிலி ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.