2010-05-01 15:33:41

தமிழகத்தில் மருத்துவ சேவைக்கு உலக வங்கி ரூ.12 கோடி உதவி


மே 01,2010 : தமிழகத்தில் மருத்துவச் சேவைகளை மேம்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் உலக வங்கி 12 கோடி ரூபாய் வழங்கத் தீர்மானித்துள்ளது என்று உலக வங்கியின் மூத்த அதிகாரி பிரீத்தி குடீசியா அறிவித்தார்.

இது தொடர்பாகப் பேசிய உலக வங்கி அதிகாரி குடீசியா, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்தை மேம்படுத்துவதில், தமிழக அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், அதனால், உடல்நல பராமரிப்பிற்கான ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்தவும், குழந்தைப் பேறு மற்றும் சிசுக்கள் பராமரிப்பிற்குத் தேவையான விரிவான வசதிகளை உருவாக்கவும் தமிழக அரசுக்கு 12 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது என்றும் கூறினார்.

இதன்மூலம், சுகாதார வசதிகளின் தரம் மேம்படுத்தப்படுவதோடு, ஏழைகள், தொலை தூரத்தில் வசிப்பவர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் சுகாதார சேவைகளை பெருமளவு விரிவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தமிழக சுகாதார முறைகள் திட்டத்திற்கு, 2004ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது. அப்போது 11 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கூடுதல் நிதியாக இப்போது 12 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் பிரீத்தி குடீசியா கூறினார்.

தமிழக சுகாதார முறைகள் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் 80 அவசரகால மகப் பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன், கிராமப்புறங்களில், அவசரகால போக்குவரத்து சேவைகளை பலப்படுத்துவதற்காக 385 அவசர மருத்துவ வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன







All the contents on this site are copyrighted ©.