2010-05-01 15:29:13

அமைப்புமுறைசாராத் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகள் மதிக்கப்படுவதற்கு இந்திய ஆயர் பேரவை அழைப்பு


மே01,2010 இந்தியாவில் இதுவரை அனுபவித்திராத அளவுக்கு, வேலைக்கான வாய்ப்புக்கள் பாதையில், துரிதமாகவும் உறுதியாகவும் முனனேற்றம் காணப்படும் வேளை, நாட்டில் ஒவ்வொருவரும் தனது திறமைக்கேற்ற தரமான வேலை பெறுவார்கள் என்ற தனது நம்பிக்கையை தெரிவித்தார் இந்திய ஆயர் பேரவையின் தொழில் ஆணையத் தலைவர் ஆயர் ஆஸ்வால்டு லெவிஸ்.

மே தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஜெய்ப்பூர் ஆயர் லேவிஸ், இந்தியா பொருளாதாரத்திலும் இராணுவத்திலும் வல்லரசாக வளர்ந்து வருகின்றது என்றும், தனது மாபெரும் மனித வளத்தினால் உறுதியாக இருக்கின்ற இந்நாட்டில், இன்னும் குறிப்பிட்ட அளவு மக்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர் என்றும் கூறினார்.

கட்டாய இலவசக் கல்வியும் பாலர் தொழில் முறை தடுப்பும் அமலில் இருந்த போதிலும் பள்ளிக்குச் செல்லாத சிறார் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் இன்னும் இருக்கின்றனர் என்றும் ஆயரின் செய்தி கூறுகிறது.

இந்த மே தினத்தில் அமைப்புமுறைசாரா தொழிலாளர் எதிர்நோக்கும் நெருக்கடிகளை நினைத்துப் பார்க்க வேண்டுமென அழைப்பு விடுக்கும் அச்செய்தி, இந்தியாவிலுள்ள 39 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 7 விழுக்காட்டினரே தொழிற்சங்கங்களில் உள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.

நாட்டின் தற்போதைய தொழில் கொள்கையை அமைப்பதில் புதிய அணுகுமுறை தேவைப்படுகின்றது என்றும், அமைப்புமுறைசாரா தொழிலாளர்களின் நியாயமான உரிமைகள் மதிக்கப்படுமாறும் ஆயர் லேவிசின் செய்தி வலியுறுத்துகிறது.








All the contents on this site are copyrighted ©.