2010-04-30 15:53:29

பொருளாதாரத் துறையில் எடுக்கப்படும் அனைத்துத் தீர்மானங்களும் கொள்கைகளும் உண்மையில் பிறரன்பை அடித்தளமாகக் கொண்டதாக அமைய வேண்டும்- திருத்தந்தை


ஏப்ரல்30,2010 பொருளாதாரத் துறையில் எடுக்கப்படும் அனைத்துத் தீர்மானங்களும் கொள்கைகளும் உண்மையில் பிறரன்பை அடித்தளமாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட கூறினார்.

சமுதாயத்தின் பொது நலனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் வருங்காலத் தலைமுறைகளைக் கண்முன் கொண்டதாய் இருக்க வேண்டும் என்பதால் எந்தவொரு சமூக அமைப்பையும் தீர்மானிப்பதற்கான அறநெறிக் கூறுக்கு அடிப்படையானதாகத் தலைமுறைகளுக்கு இடையேயான ஒருமைப்பாடு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை.

இவ்வெள்ளிக்கிழமையன்று, வத்திக்கானில் 16வது ஆண்டுக் கூட்டத்தைத் தொடங்கியுள்ள திருப்பீட சமூக அறிவியல் துறையின் ஐம்பது பிரதிநிதிகளை அதேநாளில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

திருப்பீட சமூக அறிவியல் துறை நடத்தும் இந்தக் கருத்தரங்கு, திருச்சபையின் சமூகக் கோட்பாடுகளை அழகுபடுத்தும் நன்னெறிக் கொள்கைகளின் ஒளியில் தற்போதைய உலகப் பொருளாதாரப் பிரச்சனைகளை அலசவிருப்பதையும் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை.

பொருளாதார வாழ்வுக்கான ஒருங்கிணைந்த நன்னெறி அணுகுமுறையானது பொதுநலனை மேம்படுத்துவதாய் அமைய வேண்டும், இது, மனித மாண்பை மதிப்பதில் அடித்தளத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் உற்பத்தி, வணிக அமைப்புகள், அரசியல் நிறுவனங்கள், சமூக நலன் ஆகியவற்றை தலையாய இலக்கு என்பதை ஏற்பதாகவும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

உலகப் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த இந்த ஐந்து நாள் கருத்தரங்கு வருகிற செவ்வாயன்று நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.