2010-04-28 15:45:39

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


ஏப்ரல்28,2010 அன்பு நேயர்களே, கத்தோலிக்கத் திருச்சபையில் 2009ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி முதல் 2010ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி வரை சர்வதேச குருக்கள் ஆண்டு அல்லது சர்வதேச அருடபணியாளர்கள் ஆண்டு கடைபிடிக்கப்பட்டு வருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமே. எனவே இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சிலகாலமே இருக்கும் இவ்வேளையில், அசாதாரண வாழ்வு வாழ்ந்த இரண்டு குருக்கள் பற்றி இப்புதன் பொது மறைபோதகத்தில் விளக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பல நாடுகளின் பயணிகளிடம், அன்புச் சகோதர சகோதரிகளே, சர்வதேச குருக்கள் ஆண்டு முடிவுக்கு வரவிருக்கின்ற இக்காலக்கட்டத்தில், இத்தாலியின் தூரின் நகரோடு தொடர்புடைய, 19ம் நூற்றாண்டின் இரண்டு குறிப்பிடத்தக்க குருக்கள் பற்றி எடுத்துரைக்க விரும்புகிறேன் என்று ஆங்கில மொழியிலான மறைக்கல்வியைத் தொடங்கினார் திருத்தந்தை.

RealAudioMP3 புனித வளனார் துறவு சபையைத் தோற்றுவித்த புனித லெயோனார்டு முரியால்தோ (Leonard Murialdo) என்பவர், வாய்ப்புக்கள் குறைந்த இளையோருக்குக் கல்வி மற்றும் மேய்ப்புப்பணி வழங்குவதில் தன் வாழ்நாளை அர்ப்பணித்திருந்தார். அவர் தனது குருத்துவ அழைப்பை, கடவுளன்பின் விலைமதிப்பில்லா கொடையாகப் பார்த்தார். அதனை நன்றியோடும் மகிழ்வோடும் அன்போடும் பெற வேண்டுமென்று விரும்பினார். நம் ஆண்டவரின் அளவற்ற இரக்கத்தின் சக்தியால் ஊக்குவிக்கப்பட்டு அவர் தன்னுடன்வாழ்ந்த சகோதரர்களை தியான யோகத்திலும் அப்போஸ்தல ஆர்வத்திலும் ஒன்றிணைப்பதற்கு ஊக்கப்படுத்தினார், அவர்கள் தங்களது முன்மாதிரிகையான வாழ்வு மூலமாக போதிக்குமாறும் வலியுறுத்தினார். புனித லெயோனார்டுக்கும் ஒரு தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்த புனித ஜோசப் கொத்தலெங்கோ (Joseph Cottolengo), பிறரன்பின் மிகச் சிறப்பான மற்றுமொரு திருத்தூதராக இருக்கிறார். இவர், தனது குருத்துவ வாழ்வின் துவக்க காலத்தில், கடும் மனிதத் துன்பத்தை எதிர்நோக்கிய பின்னர், இறைபராமரிப்பின் சிறிய இல்லத்தை ஆரம்பித்தார். இந்தப் பிறரன்புப் பணியில் அவரோடு ஒத்த எண்ணம் கொண்ட எண்ணற்ற குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினரைப் பெருமளவில் ஈடுபடுத்தினார். அது இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தங்களின் கடவுளன்புக்கும் கிறிஸ்து மற்றும் திருச்சபையின் மீதான அன்புக்கும் மிகச் சிறந்தவர்களாக விளங்கிய இந்த இரண்டு மாபெரும் குருக்களின் எடுத்துக்காட்டுகள், இக்காலத்தில் தங்களின் வாழ்வை இறைவனுக்கும் தேவையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளின் பணிக்கும் தங்களைத் தாராளமாக அர்ப்பணிப்பதற்கு முன்வரும் பல குருக்களுக்குத் தொடர்ந்து தூண்டுதலும் உறுதியும் தருவதாக.

RealAudioMP3 இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை. மேலும் இவ்வுரையில், வருகிற ஞாயிறன்று தான் தூரின் நகருக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் போது, புனித கொத்தலெங்கோவின் புனிதப் பொருட்கள் மற்றும் அச்சபையினரின் பிறரன்பு இல்லத்தையும் பார்வையிடுவதாக அறிவித்தார். இன்னும், இப்பொது மறைபோதகத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும், குறிப்பாக, நார்வே லூத்தரன் கிறிஸ்தவ சபை மற்றும் இங்கிலாந்து திருச்சபை பிரதிநிதிகள் குழுக்களுக்கும், Pave the Way Foundation அமைப்புடன் வத்திக்கானைப் பார்வையிட்டுவரும் யூதமதத் தலைவர்களுக்கும் தமது இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர் எல்லாருக்கும் தமது அப்போஸ்தல ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.