2010-04-27 15:29:54

திருச்சிலுவையின் உந்துதல் சக்தி மீண்டும் கண்டுணரப்பட்டுள்ளது - திருப்பீட பொதுநிலையினர் அவைச் செயலர்


ஏப்ரல்27,2010 திருச்சிலுவையின் உந்துதல் சக்தி மீண்டும் கண்டுணரப்பட்டுள்ளது என்று திருப்பீட பொதுநிலையினர் அவைச் செயலர் ஆயர் Josef Clemens, உலக இளையோர் தினச் சிலுவையின் 26வது ஆண்டு குறித்தச் சிந்தனைகளை வழங்கிய போது கூறினார்.

வத்திக்கான் பேதுரு வளாகத்துக்கு அருகிலுள்ள சான் லொரென்சோ சர்வதேச இளையோர் மையத்தில் திருப்பலி நிகழ்த்திய ஆயர் கிளமென்ஸ், பள்ளிகளிலும் பொதுக் கட்டிடங்களிலும் மருத்துவமனைகளிலும் சிலுவைகள் மாட்டப்பட்டிருப்பது குறித்து அண்மையில் எழுந்துள்ள எதிர்மறையான கருத்துக்கள் திருச்சிலுவையின் உந்துதல் சக்தியை மீண்டும் கண்டுணர வைத்துள்ளன என்றுரைத்தார்.

திருச்சிலுவை முரண்பாட்டின் அடையாளமாக இருப்பது அதிகரித்து வருகிறது என்ற ஆயர், சிலுவையானது கிறிஸ்தவ வாழ்வின் புளிக்காரமாக இருப்பதை இன்னும் உறுதியாக அறிவிப்பதற்கு இக்காலத்திய நிகழ்வுகள் நம்மை அழைக்கின்றன என்று கூறினார்.

1983ம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலால் உருவாக்கப்பட்ட இந்த லொரென்சோ மையத்தில் அவர் 1984ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி இளையோருக்கு பரிசாக வழங்கிய சிலுவை வைக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.