2010-04-26 15:56:56

பணம் நல்ல பணியாள், ஆனால் மோசமான எசமான்


ஏப்ரல்26,2010 கடந்த சில நாட்களாக இத்தாலியில் ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்குள் பெரும் புயல் உருவாகியுள்ளது. வத்திக்கான் வானொலி தலைமையகக் கட்டிடத்திற்குக் கீழுள்ள பெரிய அரங்கத்தில் கடந்த வியாழனன்றுகூட நாள் முழுவதும் ஆளும் கூட்டணிக் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமருக்கும் சபாநாயகருக்கும் கடும் விவாதம் இடம் பெற்றது. சுடும் சொற்கள் பரிமாறப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரதமர் கட்சியோடு சங்கமமாகிய மற்றொரு கட்சித் தலைவரான சபாநாயகர், பிரதமரின் அரசியல் ஊழலைச் சுட்டிக் காட்டியதே இந்த அரசியல் நெருக்கடி உருவாகுவதற்கான முக்கிய காரணமாகும்.

இந்தியச் செய்தித்தாள்களைப் புரட்டினால் மதுரையில்.2500 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரியப் பொறியாளர் கைது. நெல்லையில் நேற்றும் ஒரு போலி டாக்டர் கைதுசெய்யப்பட்டார். பஞ்சாபில் இலஞ்சப் புகாரில் சிக்கி உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய் வீட்டில் மத்திய புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தி ரூ.212 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றியுள்ளனர். இவர் பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ., அதிகாரிகள் இவரைக் கைது செய்துள்ளனர் இப்படி ஊழல் குற்றம் இலஞ்சம் தொடர்புடைய செய்திகள் இல்லாமல் இருப்பதே இல்லை. விளையாட்டில்கூட பணம் கைமாறுவதை வைத்துத்தான் பல சமயங்களில் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்கள் பணத்திற்கு விலைபேசப்படுகிறார்கள். தென்னாப்ரிக்காவில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் சிறார் விற்கப்படுகின்றனர். உலக கால்பந்து போட்டிகள் நடைபெறும் சமயத்தில் இவ்வெண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று ஒரு செய்தி. இவ்வாறு கிராம பஞ்சாயத்து அலுவலகம் தொடங்கி கணனி, இணையதளம் தொடர்பான சைபர் குற்றங்கள் வரை எல்லா மட்டங்களிலும் இலஞ்ச ஊழல்களும் குற்றங்களும் விளையாடுகின்றன.

கடலூர் மாவட்ட நம் நேயர் பி.சத்தியநாரயணனோடு தொலைபேசியில் பேசியபோது அவரும், நீங்கள் நிகழ்ச்சியில் மன்னிப்பு பற்றிப் பேசினீர்கள், ஆனால் இங்கு நியாயமாக கிடைக்க வேண்டியதற்குக்கூட பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது, அப்படி இருக்கும் போது எப்படி மன்னிப்பது குறித்து சிந்திக்க முடியும் என்று கேட்டார். நல்ல கேள்விதான். மே 2ம் தேதி நமது திருச்சி நேயர் சந்திப்பில் கேளுங்கள் என்றோம். இந்த ஊழலுக்கு, ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் விதிவிலக்கல்ல. இந்த நாட்களில் இது நன்றாகவே தெரிகிறது.

கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்தூறையினர் கடந்த வாரத்தில் பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தனர். 'நூதன வழிமுறைகளைக் கையாண்டும், இணையதளங்கள் வழியாகவும், பணமோசடிக் குற்றங்கள் கோவையில் அதிகரித்துள்ளன; 10 ஆண்டுகளுக்கு முன்புவரை திருட்டு, வழிப்பறி, கொள்ளை ஆகிய குற்றங்கள் மட்டுமே 'குற்ற வழிமுறை பட்டியலில்' அதிகம் இடம் பெற்றிருந்தன. அண்மை ஆண்டுகளாக, அதிகாரம், பதவி, படிப்பு மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி படிப்பறிவுள்ள நபர்களால் நிகழ்த்தப்படும் 'ஒயிட் காலர் குற்றங்கள்' பெருகியுள்ளன; 'ஒயிட் காலர் குற்றங்களில்' திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் களவாடப்படும் சொத்து மதிப்புகளைக் காட்டிலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன.

அடுத்து 'பேப்பர் பிசினஸ்' குற்றம் - ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தால், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகளை தருவதாகக் கூறும் 'டபுளிங்' மோசடிக் குற்றங்களில் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தக் கும்பல்களின் ஏஜன்ட்கள், சிறிய அளவில் தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனம் நடத்துவோருக்கு ஆசைகாட்டி வலையில் வீழ்த்துகின்றன. பின்னர், அவர்களிடம் ஒரிஜனல் நோட்டுகளை பெற்றுக்கொண்டு, 'மாற்று கரன்சி' நோட்டுகளை தருவதாகக் கூறி, இரகசிய இடத்துக்கு அழைக்கின்றனர். அங்கு, பணத்தைக் கைமாற்றும் போது, காவல்துறைச் சீருடையில் தங்களது 'செட்டப்' ஆட்களை வரவழைத்து சுற்றிவளைப்பது போல நடிக்கச் செய்து எளிதாகத் தப்பி விடுகின்றனர். பணம் கொடுத்தவரின் நிலை பரிதாபம் தான். இந்த வகை மோசடியை 'பேப்பர் பிசினஸ்' என்றழைக்கின்றனர். மோசடிக் கும்பலிடம் பணத்தை பறிகொடுக்கும் நபர்களால் காவல்துறையில் புகார் அளிக்க முடியாது; காரணம், இவரது ஆசை, குற்றம் சார்ந்தது; புகார் அளித்தால் இவரும் குற்றவாளியாகச் சேர்க்கப்படுவார்.

அடுத்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பி சுருட்டல்: 'உங்களுக்கு, லாட்டரியில் 100 கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது; பரிசை பெற்றுக்கொள்ள 'இ-மெயில்' முகவரியைத் தொடர்பு கொள்ளவும்' என்ற எஸ்.எம்.எஸ்., அண்மைக் காலமாக பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. பேராசை கொண்ட நபர்கள், எஸ்.எம்.எஸில் குறிப்பிடப்பட்டுள்ள 'இ-மெயில்' முகவரிக்கு தகவல் அனுப்புகின்றனர். அதைப் பெற்றதும் உஷாரடையும் மோசடி நபர்கள், 'குலுக்கல் முறையில் உங்களது மொபைல் போன் எண் தேர்வு செய்யப்பட்டு 100 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. அந்தத் தொகையை உங்களுக்கு அனுப்ப நீங்கள், முன் பணமாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்' எனக்கூறி, தமது வங்கி கணக்கு எண்களையும் தெரிவிக்கின்றனர். பேராசை நபர் பணம் செலுத்தியதும் மீண்டும் இரு முறை அதே பாணியில் வெவ்வேறு தொகைகளைக் கூறி, செலுத்துமாறு கேட்பர். செலுத்தியதும், அந்தத் தொகையை நாட்டின் எங்காவது ஒரு மூலையிலுள்ள வங்கிக் கிளையில் எடுத்துக்கொண்டு, தகவல் தொடர்பை துண்டித்துவிடுவர். இது போன்ற மோசடிகளில், நைஜீரியர்கள் அதிகளவில் ஈடுபடுவதால் இதனை 'நைஜீரியன்ஸ் ஸ்கேம்' என்றே காவல்துறையினர் அழைக்கின்றனர்

அன்பர்களே, இத்தகைய மின்னஞ்சல்கள் எங்களுக்கும் சில ஆண்டுகளாக வந்த வண்ணம் இருக்கின்றன. நாங்கள் ஏற்கனவே உஷாராகத்தான் இருக்கிறோம். நீங்களும் உஷாராக இருப்பீர்கள் என நம்புகிறோம். ''பேராசைக்கு உடன்பட்டு பணத்தை இழந்துவிடக்கூடாது, ''மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே, 'ஒயிட் காலர் குற்றங்களை' தடுக்க முடியும் என்று கோவை மாநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு உதவிக் கமிஷனர் செல்வராஜ் கூறியிருக்கிறார்.

ஆப்ரிக்காவின் பல நாடுகளில் இடம் பெறும் மௌன ஊழல் அக்கண்டத்தின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கின்றது என்று உலக வங்கியின் ஆப்ரிக்கப் பிரிவின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஷாந்தா தேவராஜன் (Shantha Devarajan) கூறியிருக்கிறார். அரசியல் பணியாளர்கள் பெருமளவான பணத்தைப் பதுக்குவதையும் சுரண்டுவதையும் பொதுவாக ஊழல் என்கிறோம். ஆனால் ஆப்ரிக்காவில் இடம் பெறுவது மௌன ஊழல். அதாவது ஆசிரியர்கள், மருத்துவர்கள் பணிக்குச் செல்லாமல் இருப்பதை ஷாந்தா தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக, உகாண்டா நாட்டில் ஆரம்ப அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஏறத்தாழ 27 விழுக்காட்டு நேரம் பள்ளிக்குச் செல்வதில்லை. Chad நாட்டில் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தில் 99 விழுக்காடு எங்கோ சென்று விடுகிறது. மேற்கு ஆப்ரிக்காவில் வேளாண்மைக்குக் கொடுக்கப்படும் உதவியில் சுமார் 50 விழுக்காடு விழுங்கப்படுகிறது. இவ்வாறு சத்தமின்றி இடம் பெறும் ஊழல்களைப் பட்டியலிட்டுள்ளார் உலக வங்கி அதிகாரி ஷாந்தா. Insert - Shantah

ஐக்கிய நாடுகள் நிறுவனம் கடந்த வாரத்தில் பிரேசில் நாட்டு பாஹியாவில் குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி குறித்த 12வது உலக மாநாட்டை நடத்தியது. அந்த மாநாடு குறித்துப் பேசிய அதன் திட்ட செயலர் ஜான் சான்டேஜ் (John Sandage), இணையதளத்தைப் பயன்படுத்தி நடைபெறும் ஒட்டுமொத்த Cyber குற்றங்களைச் சட்டங்கள் மூலம் தடுப்பதற்கு அரசுகள் முயற்சிகள் எடுக்க வேண்டும். சைபர் குற்றம், சுற்றுச்சூழல் தொடர்பான குற்றம், மற்றவர் போல் நடித்து பணத்தையோ மற்றும் பிற சலுகைகளையோ திருடும் identity theft போன்ற புதிய முறைக் குற்றங்களைத் தடுப்பதற்கு புதிய தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். Insert John Sandage

அரசியல் ஊழல் என்பது, பொதுவாக, அரசு அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான தனிப்பட்ட இலாபங்களுக்காக அரச அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அரச அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், காவல்துறை அட்டூழியம் முதலியவை அரசியல் ஊழல்களாகக் கருதப்படுவதில்லை. அரச பதவி வகிக்கும் ஒருவர் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான ஒரு செயல், அவருடைய பதவியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தால் மட்டுமே அது அரசியல் ஊழல் ஆகிறது. கையூட்டு, கப்பம், நிதி கையாடல், மோசடி போன்ற பல செயல்பாடுகள் அரசியல் ஊழல்களில் அடங்கும். உலகம் முழுவதிலும் இடம்பெறும் கையூட்டு அல்லது இலஞ்சம் பெறுதல், சுமார் 1 டிரில்லியன் அதாவது நூறாயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஊழல்களினால் ஏற்படும் சுமை, மிகவும் வறிய நாடுகளில் வாழும் அடிமட்ட மக்களையே அதிகம் பாதிப்பதாகவும் தெரிய வருகிறது. இந்த ஊழல் நல்லதோர் அரச நிர்வாகத்தையும் உறுதியான வளர்ச்சியையும் ஜனநாயக வழிமுறையையும் நியாயமான தொழில் செயல்களையும் அச்சுறுத்துகின்றது.

இந்த ஊழல்கள் அனைத்துக்கும் முக்கிய காரணம் என்னவென்று சிந்தித்தால் அது பேராசையாக இருக்கின்றது. அதுவும், பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றின் மீதான பேராசையாகவேத் தெரிகின்றது. ஆன்ட்ரூ கார்னிகி என்பவர் ஒரு மிகப் பெரும் கோடீஸ்வரர். இவருக்குக் கோடிக்கணக்கில் பணம் இருந்தது. அவரது வயதான காலத்திலும் பணம் வந்து கொண்டிருந்தது. அவருக்குப் பணம் அதிகமாகச் சேர்ந்த போது ஒரு கட்டத்தில் பணத்தைக் கண்டாலே அதன்மீது வெறுப்பு வந்துவிட்டது. அதைத் தொட்டாலே அலர்ஜி வந்துவிடுமாம். அதனால் ஒரு கட்டத்தில் அவர் அதைத் தொடுவதே இல்லையாம். ஒருநாள் பணமே இல்லாமல் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்த காரணத்துக்காக இலண்டனில் ஒரு டிராம் வண்டியிலிருந்து இறக்கி விடப்பட்டாராம்.

அன்பர்களே, நாம் ஒன்றின்மீது அளவற்ற ஆசை வைக்கிறோம். அந்த ஆசை மனதிற்கு இதமான பலன்களைத் தராதபோது அதன்மீது வெறுப்பு கொள்கிறோம். அமுதமேயானாலும் அளவுக்கு அதிகமாகும் பொழுது அது திகட்டத்தான் செய்கிறது. ஆனால் பலனை எதிர்பாராமல் மற்றவர்க்கு நல்லது செய்து வாழும் போது அது ஒருபோதும் திகட்டாது. பெரியவர்கள் சொல்கிறார்கள் – பணத்தினால் அத்தனையையும் அனுபவிக்கலாம் என நினைக்கிறோம். அது போலி வாழ்க்கை. மாறாக பணத்தினால் பெற முடியாத அமைதியான ஆனந்தத்தை, நிம்மதியைத் தருவது பிறர்நலத்தைப் பேணும் தெய்வநம்பிக்கை, ஆன்ம நேய ஒருமைப்பாட்டு வாழ்க்கை. இவைதான் உண்மையான செல்வங்கள் என்று.








All the contents on this site are copyrighted ©.