2010-04-21 15:30:38

இந்தியாவில் காவல்துறைக்கு மனித உரிமைகள் குறித்த கல்வி தேவை - தலத்திருச்சபை அதிகாரி


ஏப்ரல்21,2010 இந்தியாவில் காவல்துறையின் தடுப்புக்காவலின் போது சித்ரவதைகளும் இறப்புகளும் அதிகரித்து வருவது, காவல்துறைக்கு மனித உரிமைகள் குறித்த கல்வி தேவை என்பதைக் காட்டுகின்றது என்று தலத்திருச்சபை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் காவல்துறையின் தடுப்புக்காவலின் போதான இறப்புகள் 41.66 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று டெல்லியை மையமாகக் கொண்ட ACHR என்ற ஆசிய மனித உரிமைகள் மையம் குறிப்பிட்டது

காவல்துறையின் தடுப்புக்காவலின் போது இடம் பெறும் சித்ரவதைகள் மற்றும் இறப்புகள் குறித்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுமாறு கடந்த வார்ததில் இந்திய உச்சநீதிமன்றம் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து பேசிய இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையச் செயலர் அருட்திரு நித்திய சகாயம், இந்தத் தடுப்புக் காவல் இறப்புகளும் மனித உரிமை மீறல்களே என்று தெரிவித்தார்.

தடுப்புக்காவலில் இருக்கும் போது கைதியை கேள்விகளால் நச்சரிக்கவோ, சித்ரவதை செய்யவோ காவல்துறைக்கு உரிமை கிடையாது என்றுரைத்த அருட்திரு நித்தியா, ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டாலொழிய மற்றபடி தடுப்புக்காவலில் இருப்பவர் குற்றமற்றவர் என்றே நோக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில், 7468 தடுப்புக்காவல் இறப்புகள் அதாவது, ஒரு நாளைக்கு ஏறக்குறைய நான்கு என்ற விகிதத்தில் அவை பதிவு செய்யப்பட்டிருந்தன என்று ஆசிய மனித உரிமைகள் மையம் கூறியுள்ளது








All the contents on this site are copyrighted ©.