2010-04-20 15:50:12

பேராயருடன் போபால் கிறிஸ்தவர்கள் உரிமை வேண்டி ஊர்வலம்.


ஏப்ரல் 20. குடிமக்களுக்குரிய தங்கள் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் எறத்தாழ 5000 கிறிஸ்தவர்கள் பேராயர் லியோ கொர்னேலியோ தலைமையில் போபால் நகர் தெருவில் அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.

2003ம் ஆண்டு டிசம்பர் முதல் மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் இந்து ஆதரவு பாரதிய ஜனதா கட்சி, கிறிஸ்தவர்களின் குடிமக்களுக்குரிய உரிமைகளையும் மதிக்கத்தவறி வருவதாக குற்றஞ்சட்டும் கிறிஸ்தவக் குழுக்கள், கிறிஸ்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், சமூகத்தின் ஏழைகள் அனைவருக்கும் மதச்சார்பின்றி சலுகைகளை வழங்குதல், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மததீவிரவாதிகளின் தாக்குதல்களை தடுத்தல் போன்ற விண்ணப்பங்களுடன் இவ்வூர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இவ்வூர்வலத்தை வழி நடத்திய பேராயர் கொர்னேலியோ உரைக்கையில், மத்திய பிரதேச அரசு, அம்மாநில கிறிஸ்தவர்களின் சுதந்திரமான அமைதி வாழ்வை உறுதி செய்யும் குடிமகனுக்குரிய உரிமையை பாதுகாக்கத் தவறி வருகின்றது எனக் குற்றஞ்சாட்டினார்.

சில மதத்தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களைத் தாக்குவதுடன், காவல்துறையிடம் பொய் புகார் செய்து அதே கிறிஸ்தவர்களைக் கைது செய்ய வைப்பதாகவும், காவல்துறையும் அதற்கு துணை போவதாகவும் கவலையை வெளியிட்டார் பேராயர்.








All the contents on this site are copyrighted ©.