2010-04-20 15:48:53

திருத்தந்தையின் மால்ட்டா திருப்பயணம் குறித்து திருப்பீடப் பேச்சாளர்


ஏப்ரல் 20. திருத்தந்தையின் மால்ட்டா நாட்டிற்கான அண்மை திருப்பயணம், எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாகவும், அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையுள் பாதிபேர் அவரைக்காண வந்திருந்ததாகவும் தெரிவித்தார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு. ஃபெதெரிக்கோ லொம்பார்தி.

திருப்பீடப் பேச்சாளர் குரு. லொம்பார்தி வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய பேட்டியில், திருத்தந்தையின் 26 மணி நேர மால்ட்டா பயணத்தில் எறத்தாழ 2 இலட்சம் பேர் அவரைக் காண வந்திருந்தனர் என்றார். மால்ட்டா நாட்டின் மக்கள் தொகை 4 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவ மூலத்தையும், கத்தோலிக்கப் பாரம்பரியத்தையும் கொண்ட மால்ட்டா மக்கள் இயல்பாகவே திருத்தந்தையின் திருப்பயண நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர் என்றார் திருப்பீடப் பேச்சாளர்.

சில குருக்களால் பாலின முறையில் தவறாக நடத்தப்பட்ட சிலரை மால்ட்டாவில் திருத்தந்தை சந்தித்தது குறித்தும் கருத்துக்களை வெளியிட்ட இயேசு சபை குரு. லொம்பார்தி, அவர்களின் துன்பங்களைப் பகிர்வதாகவும், அவர்களுடன் செபிப்பதாகவும், அவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தருவதாகவும் அச்சந்திப்பு இருந்தது என்றார்.








All the contents on this site are copyrighted ©.