2010-04-20 16:37:38

ஏப்ரல், 21 நாளுமொரு நல்லெண்ணம்


வாழ்வை ஒளிமயமாய், நம்பிக்கையுடன் பார்க்க வேண்டுமென வலியுறுத்தும் பல கதைகள் உண்டு. அவைகளில் ஒன்று நாம் அடிக்கடி கேட்டது. மற்றொன்று நான் அண்மையில் கேட்டது. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இருண்ட ஒரு சிறையிலிருந்து இருவர் வெளி உலகத்தைப் பார்த்தனர். ஒருவர் புழுதியும் இருளும் மண்டிக் கிடந்த மண்ணைப் பார்த்தார். மற்றொருவர் விண்மீன்கள் கண் சிமிட்டும் விண்ணைப் பார்த்தார். இது நாம் பல முறை கேட்ட கதை.
குழந்தைக் கொசு ஒன்று முதல் முறை பறக்க ஆரம்பித்தது. அது தன் முதல் பயணத்தை முடித்து விட்டு வந்ததும், அதன் தந்தை கொசு கேட்டது: "முதல் பயணம் எப்படி இருந்தது?" என்று. அதற்கு அந்தச் சின்னக் கொசு, "ஓ பிரமாதம். நான் பறக்கும் போது, எல்லா மக்களும் கை தட்டினார்கள்." என்றது.பறக்கும் கொசுவைப் பார்த்து மக்கள் கை தட்டுகிறார்கள். உண்மைதான். ஆனால், அது கொசுவின் பறக்கும் திறமையைப் பாராட்டுவதற்கா? இல்லை. அந்தக் கொசுவைக் கொல்வதற்கு. ஆனால், இந்தச் சின்னக் கொசு அந்தக் கைதட்டுதலைத் தனக்குச் சாதகமான ஒன்றாக எண்ணி, பறந்து வந்ததே... அதைத்தான் Positive Attitude என்று சொல்கிறோம். பார்க்கும் பார்வை மாறினால், வாழ்வும் மாறும் வாய்ப்பு உண்டு. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் நல்லது.







All the contents on this site are copyrighted ©.