2010-04-19 15:13:44

இயற்கையில் மட்டுமா எரிமலைகள்?


ஏப்ரல்19,2010 கடந்த ஐந்து நாட்களாக வட ஐரோப்பாவின் பெரும்பாலான விமான நிலையங்களும் இரயில் நிலையங்களும் பயணிகளுக்கு உறங்கும் இடங்களாக மாறியிருந்தன. சுற்றுலாப் பயணிகளும் மற்ற பயணிகளும் என்னசெய்வதென்று தெரியாமல் இரயில் பயணம் செய்ய நினைத்து இரயில் நிலையங்களை நிறைத்திருந்தனர். அங்கும் பயணச்சீட்டு கிடைக்காமல் பயணப்பைகளை நாற்காலிகளாகப் பயன்படுத்தி அமர்ந்திருந்தனர். மனக்கஷ்டத்தோடும் பசியோடும் காத்துக்கிடக்கும் இந்த மக்களுக்குத் இத்தாலிய அரசின் குடிமக்கள் பாதுகாப்பு சேவை அடிப்படை உதவிகளைச் செய்து வருகிறது. இவ்வாரத்தில் பிரான்சில் பொறியியல் கல்வி சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சென்னை இலொயோலா கல்லூரியிலிருந்து உரோமைக்கு வந்திருக்கும் பேராசிரியர்களுக்கு இரயில் பயணச்சீட்டு பதிவு செய்யச் சென்ற நாங்கள் நெருசலைப் பார்த்து திரும்பி வந்து விட்டோம். அந்த அளவுக்குப் பயணிகள் சிறுபிள்ளைகளுடன் காத்துக் கிடக்கின்றனர். கடந்த புதன் தொடங்கி நான்கு நாட்களில் மட்டும் 63 ஆயிரம் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இஞ்ஞாயிறன்று மட்டும் இருபதாயிரம் விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் உலக அளவில் விமான நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ஏறத்தாழ 13 கோடியே 60 இலட்சம் யூரோக்களும் வாரத்திற்கு 50 கோடி யூரோக்களும் இழப்பு ஏற்பட்டுள்ளன. அதேசமயம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாடகைக் கார்கள் பணம் சம்பாதித்துள்ளன. உரோமையிலிருந்து போலந்து நாடு செல்வதற்கு மட்டும் நான்காயிரம் யூரோக்களைக் கேட்டுள்ளனர் வாடகைக் கார் ஓட்டுனர்கள்.

அன்பர்களே, இந்த நெருக்கடி நிலைக்கானக் காரணம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஐஸ்லாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உறைபனி ஏரியிலிருந்து கிளம்பியுள்ள எய்யப்யாலயேகோட்ல (Eyjafjallajökull) எரிமலை வெடிப்பு குறித்துப் பேசாத ஊடகங்களே இல்லை. தரையில் எரிமலை, கடலுக்குள் எரிமலை என்றெல்லாம் கேள்விப்பட்ட எமக்கு உறைபனி ஏரியிலிருந்து இவ்வளவு வெப்பமா? என்று மூளையைக் கிளறியது. இத்தாலியில் சிசிலித் தீவிலுள்ள எட்னா எரிமலை அவ்வப்போது நெருப்பு குழம்புகளைக் கக்கும். தகதகவென கருஞ்சிவப்பு கரித்தூள்கள் வெடித்துச் சிதறும். நெருப்பு ஆறு போல நெருப்பு சகதி ஓடிவரும். ஆனால் அப்போதெல்லாம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்படுவதே இல்லை. எனினும் இந்த ஐஸ்லாந்து எய்யப்யாலயேகோட்ல (Eyjafjallajökull) எரிமலை சீற்றத்தில் வெளியேறும் துகள்கள் விமான எஞ்சின்களுக்கும் விமானத்தின் கண்ணாடிகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆதலால் ஆஸ்டரியா, பெல்ஜியம், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, அயர்லாந்து, லாட்வியா, லக்சம்பர்க், ஹாலந்து, போலந்து, சுலோவாக்கியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் என ஏறத்தாழ 20 ஐரோப்பிய நாடுகள் விமானங்கள் பறக்கக்கூடிய தங்களது வான்வெளியை மூடியிருந்தன. இத்திங்களன்று சில நாடுகளில் விமானப் போக்குவரத்துகள் தொடங்க ஆரம்பித்துள்ளன. ஏனெனில் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இஞ்ஞாயிறன்று சோதனை முறையில் விமானங்களைப் பறக்கவிட்டு, ஆபத்து இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளன.

இந்த ஐஸ்லாந்து நாட்டு எரிமலை, கடந்த மார்ச் 20ம் தேதி முதல் முறையாக வெடித்தது. அதற்குள் இந்த ஏப்ரல் 14ம்தேதி இரண்டாவது முறையாக மீண்டும் வெடிக்கத் தொடங்கியது. இது வெடிக்கத் தொடங்கியவுடனே காற்று மண்டலத்தில் உடனடியாக 11 கிலோ மீட்டர் உயரம் வரைச் சாம்பலை வெளியேற்றியது. 15 ஆயிரம் அடிவரை, சிலசமயங்களில் 33 ஆயிரம் அடி உயரம்வரைகூட புகை சென்றதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தப் புகை வெளியேறிய உடனேயே சுற்றுப்புற பனி உருகி உறைபனி பெரிய பெரிய பனிக்கட்டிகள் தண்ணீரோடு அடித்துவரப்பட்டதைச் சிலர் பார்த்திருக்கின்றனர். அந்தப் பகுதியிலிருந்து 800 மேற்பட்ட மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

RealAudioMP3 இந்த எரிமலை, உறைந்த பனி ஏரியொன்றின் அடியில் வெடித்துள்ளதால் நெருப்புப் பிழம்பின் சக்தியும், பனிக்கட்டியும் சேர்ந்து வெளியேறியுள்ளன. இந்தச் சாம்பல் துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சுகாதார மையம், இந்தச் சாம்பல் கலந்த புகையில் 25 விழுக்காடு, 10 மைக்ரோனுக்கும் குறைவான எடையில் இருப்பதாகவும், இது வெளிமண்டலத்தின் தாழ்வான பகுதிக்கு இறங்கினால் சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்கும் எனவும், தற்போது அவை வெளிமண்டலத்தின் உயர்வான பகுதியிலே இருப்பதாகவும், ஆஸ்துமா மற்றும் ஏனைய மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறியுள்ளது. எனினும், இந்த எரிமலை தற்போது தணிய ஆரம்பித்திருப்பதாக பிரிட்டன் எரிமலை நிபுணர் டாக்டர் டேவ் ரோதரி கூறியுள்ளார். இருந்தபோதிலும், அதற்கு அருகிலுள்ள வேறொரு எரிமலையும் வெடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

RealAudioMP3 இந்த ஐஸ்லாந்து நாடு, அட்லாண்டிக் பெருங்கடல் பரப்பின் மையத்திலுள்ள மலைத்தொடரில் அமைந்துள்ளது. இங்கு எரிமலைகள் வெடிப்பதென்பது புதிய விடயமல்ல. ஏனெனில் அட்லாண்டிக் கடலடியில் இருக்கின்ற இந்த மலைத்தொடர், டெக்டானிக் பிளேட்ஸ் எனப்படும் உலகின் மேற்பரப்புத் தட்டுகள் இரண்டு ஒன்றோடொன்று அகன்று செல்கின்ற இடமாகும். அப்படி அகலும் போது உருவாகும் இடைவெளியை நிரப்ப பூமிக்குக் கீழேயிருந்து பாறைப் பிழம்பு மேலே வரும் என்பதுதான் இந்த எரிமலை வெடிப்புக்கான அறிவியல் விளக்கமாகச் சொல்கிறார்கள்.

RealAudioMP3 பொதுவாக ஐஸ்லாந்து பகுதியிலுள்ள எரிமலை வெடிப்புகள், அலாஸ்காவிலும் பசிபிக் நெருப்பு வளையங்களைச் சுற்றிலும் அடிக்கடி இடம் பெறும் எரிமலை வெடிப்புகள் போன்று அவ்வளவு வீரியமானவை அல்ல. எனினும் காற்றடிப்பதால் தற்போதைய வெடிப்பின் சாம்பல் வேகமாகப் பரவியது என்று அலாஸ்கா எரிமலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் கிறிஸ் வேதாமஸ் கூறினார். ஐஸ்லாந்திலும் அதைச் சுற்றிலும் 35 எரிமலைகள் உள்ளன. இவை 100 மைல்கள் நீளமும் 60 மைல்கள் அகலமும் கொண்டவை. இங்கு இதற்கு முன்னர் 1821ம் ஆண்டு எரிமலை வெடிப்பு ஏற்பட்டு அது 13 மாதங்கள் வரை நீடித்தது. இந்த எரிமலை வெடிப்புகள் உலகின் தட்பவெப்ப நிலையை பாதிக்கும் என்றும் அறிவியலாளர் சொல்கின்றனர். 1991ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசோன் (Luzon) தீவில் ஏற்பட்ட Pinatubo எரிமலை வெடிப்பு 20ம் நூற்றாண்டில் இடம் பெற்ற இரண்டாவது பெரிய வெடிப்பாகும். இம்மலை வெடித்ததில் உலக வெப்பநிலை 0.4 லிருந்து 0.5 செல்சியுசாக மாறியது. இதற்கு முன்னர் 1883ம் ஆண்டு இந்தோனேசியாவின் Krakatoa வில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மறக்க முடியாதது, ஏனெனில் டெலகிராப் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இது நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அந்தத் தீவின் மூன்றில் இரண்டு பகுதியையும் அது அழித்துவிட்டது. இதற்கும் 68 ஆண்டுகளுக்கு முன்னர் அதே நாட்டில் Tambora எரிமலை வெடித்ததில் வெப்ப சாம்பல் ஆறு ஓடி 10,000 பேர் வரை இறந்தனர். இந்தப் புகைமேகம் வெளிமண்டலத்தில் பெருமளவான சல்பர் டை ஆக்ஸைடை பரப்பியது. உலக வெப்ப நிலையும் 0.4 லிருந்து 0.7 செல்சியுசானது. 1816ம் ஆண்டில் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வட அமெரிக்காவிலும் கோடை காலமே இல்லாமல் ஆனது. 1783-84ம் ஆண்டில் ஐஸ்லாந்தின் Laki எரிமலை வெடித்த போது 12 கோடி டன் சல்பர்டை ஆக்ஸைடை வான்வெளியில் நிரப்பி ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கானோர் இறப்பதற்கும் காரணமாக இருந்துள்ளது. 71,000 ஆண்டுகளுக்கு முன்னர் சுமத்ரா தீவின் Toba வில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே மிகக் கடுமையானது எனவும், அது ஏறத்தாழ 2,800 கனஅளவு கிலோமீட்டர் சாம்பலை வெளியேற்றியது எனவும், அது உலக மக்கள் தொகையை வெறும் பத்தாயிரமாக மாற்றியது என்றும் நம்பப்படுகிறது.

RealAudioMP3 அன்பர்களே, இயற்கையில் அவ்வப்போது எரிமலைகள் வெடித்து மனித சமுதாயத்திற்கு சேதங்களை ஏற்படுத்துகின்றன. ஐஸ்லாந்தின் தற்போதைய எய்யப்யாலயேகோட்ல எரிமலை வெடிப்பு, எத்தனையோ மக்களின் அன்றாட வாழ்வைப் பாதித்துள்ளது. சகஜ வாழ்வு பாதிக்கப்பட்டதால் மனக்கஷ்டங்கள் வேறு. இயற்கையின் சீற்றத்தைக் கண்டு ஒன்றும் செய்ய இயலாமல் மனிதன் திகைத்து நிற்கிறான். ஆனால் ஒவ்வொரு மனிதனுள்ளும் எத்தனையோ கொடுமையான எரிமலைகள் பொங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அவ்வப்போது வன்முறையாக, கோபமாக, கொலை வெறியாக, பழிவாங்குதலாக, வெடித்து சக மனிதனுக்கு எவ்வளவோ சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. மனிதனின் மனத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் இந்த நெருப்புக் துகள்கள், உடலில் உயிர்க்கொல்லி அமிலங்களைச் சுரந்து அவனுக்கே கேடாகி புதிய புதிய நோய்களாகத் தலை காட்டுகின்றன. அவனது மனஅமைதியையும் குலைக்கின்றன.

அந்த உலகப் புகழ் பெற்ற சிற்பி செதுக்கியிருந்த கடவுள் சிலையைப் பார்த்த அனைவரும் வியந்து போயினர். இவ்வளவு அழகான சிலையா, அதுவும் இந்தக் கருங்கல்லிருந்தா? என்று அசந்து போயினர். அந்தச் சிலையை படம் எடுத்த ஒரு நிருபர் அந்தச் சிற்பியிடம், எப்படி உங்களால் இவ்வளவு அழகான சிலையை செதுக்க முடிந்தது?. உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன?, நாங்களும் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு அந்தச் சிற்பி, இந்த அழகானச் சிலையை செதுக்கியது நான் அல்ல. அது ஏற்கனவே இந்தக் கருங்கல்லுக்குள் இருந்தது. என் கண்கள் அதைக் கண்டு கொண்டன. அதன் வேண்டாத பகுதிகளை நீக்கினேன். அவ்வளவுதான். சிலை தானாகவே உருவாகி விட்டது. இதுதான் வெற்றியின் இரகசியம். சிற்பி மேலும் தொடர்ந்தார்- “நீ வெற்றி பெற வேண்டுமா?, வேண்டாத பகுதிகளை நீக்கிவிடு. நீ அழகான சிற்பமாவாய்” என்று.

ஆம். வானொலி அன்பனே, உன்னையே நீ செதுக்கிக் கொள். அந்தச் சிற்பி நீயேதான். அப்பொழுது உன்னில் எரிமலைகள் வெடிக்காது. மாறாக பசுமையான மலைகள் கவினுற காட்சிதரும். அந்தப் பசுமை உன்னையும் நீ செல்லும் இடங்களையும் இதமாக்கும்.








All the contents on this site are copyrighted ©.