2010-04-18 15:07:57

திருத்தந்தையின் மால்ட்டா திருப்பயண விளக்கம்


ஏப்ரல்18,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் மால்ட்டா நாட்டுக்கான முதல் திருப்பயணம் இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 3.25 மணிக்குத் தொடங்கியது. திருத்தந்தையின் இந்த 14வது வெளிநாட்டுத் திருப்பயணம், 1950 ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல் சேதத்தால் புனித பவுல், மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள இத்தீவு நாட்டில் கரை ஒதுங்கி அங்கு மூன்று மாதங்கள் தங்கி நற்செய்தி அறிவித்ததைக் கொண்டாடுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. “எனினும் நாம் ஒரு தீவில் தள்ளப்படுவது உறுதி” (திருத்தூதர் பணிகள் 27,26) என்ற புனித பவுலின் வார்த்தைகள் இத்திருப்பயணத்தின் கருப்பொருளாகும். இத்திருப்பயணத்தைத் தொடங்கு முன்னர் இத்தாலிய மக்களுக்கு வாழ்த்துச் சொல்லி அந்நாட்டு அரசுத்தலைவர் Giorgio Napolitano தந்தியும் அனுப்பினார் திருத்தந்தை. 1950 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தூதர் பவுல் இத்தாலிக்கு வரும் வழியில், அவர் பயணம் செய்த கப்பல் சேதமடைந்ததால் அவர் கரைசேர்ந்தது, மால்ட்டீஸ் மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்தது ஆகிய வரலாற்று நிகழ்ச்சிகள் இடம் பெற்ற மால்ட்டாவுக்குச் செல்வது இறைவனின் பராமரிப்புச் செயல் என்று அத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார். குருக்கள் செய்த பாலியல்ரீதி பிரச்சனைகளால் திருத்தந்தையும் திருச்சபையும் ஊடகத்துறையினரால் அதிகமாகத் தாக்கப்பட்டு வரும் இந்நாட்களில், திருத்தந்தை மால்ட்டாவுக்குச் சென்ற விமானப் பயணத்தில் நிருபர்களின் காரசாரமான கேள்விகளுக்கும் பதில் சொல்லவும் தயங்கவில்லை. மால்ட்டாத் திருச்சபை பற்றிக் கூறிய போது, திருச்சபை அதன் அங்கத்தினர்களின் பாவங்களால் காயப்படுத்தப்பட்டிருந்த போதிலும், கிறிஸ்து மால்ட்டாவை அன்பு செய்கின்றார் என்றார். மேலும், மூன்று முக்கிய காரணங்களுக்காக மால்ட்டாவுக்கான இத்திருப்பயணத்தைத் தான் மேற்கொள்வதாகவும் விளக்கினார் திருத்தந்தை.

புறவினத்தாரின் திருத்தூதராகிய பவுல் என்ற மாமனிதர் மற்றும் இன்றைய உலகுக்கு அவரின் செய்தியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வது இப்பயணத்தின் முதல் நோக்கமாகும். இக்காலத்திலும் இறையழைத்தல்களின் நல்ல பலனைக் கண்டு வரும் மால்ட்டாத் திருச்சபையின் நீரோட்டத்தில் கலப்பது இரண்டாவது நோக்கமாகும். மால்ட்டா வழியாக ஐரோப்பாவில் நுழையும் பெருமளவான ஆப்ரிக்க அகதிகளின் குடியேற்றத்தில் மால்ட்டாவின் பங்கை சுட்டிக் காட்டுவது மூன்றாவது நோக்கமாகும். ஏனெனில் இந்தப் பிரச்சனை தற்சமயம் மிகப்பெரிதாக இருக்கிறது, இதனை மால்ட்டா தீவு நாட்டினால் மட்டும் தீர்க்க முடியாது என்று தெரிவித்தார் திருத்தந்தை. ஒரு மணி 35 நிமிடங்கள் இடம் பெற்ற இந்த விமானப் பயணத்தில் நிருபர் சந்திப்பையும் நடத்திய திருத்தந்தைக்கு மால்ட்டாவில் அமோக வரவேற்பு கிடைத்தது. மால்ட்டா தலைநகர் வலேத்தா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த திருத்தந்தையை, அந்நாட்டு குடியரசுத்தலைவர் ஜார்ஜ் அபேலாவும் அவரது மனைவியும் விமானம் வரை சென்று வரவேற்று அழைத்து வந்தனர். விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு இடம் பெற்றது. முதலில் அரசுத்தலைவர் பேசினார். ஏறத்தாழ 95 விழுக்காட்டு கத்தோலிக்கரைக் கொண்ட மால்ட்டாவில் அரசுத்தலைவரின் உரையில் கிறிஸ்தவச் சிந்தனைகள் நிறைந்திருந்தன என்று குறிப்பிடத் தேவையில்லை.

திருத்தந்தையும் மால்ட்டாவுக்கான தமது முதல் உரையைத் தொடங்கினார்.

RealAudioMP3 விமான நிலைய வரவேற்பை முடித்து திருத்தந்தை திறந்த காரில் மக்களை ஆசீர்வதித்துக் கொண்டே அரசுத்தலைவர் மாளிகை சென்றார். சென்ற வழியெல்லாம் ஏறத்தாழ ஒரு இலட்சம் மக்கள் சாலையின் இருபக்கங்களிலும் நின்று அவரை வாழ்த்தியிருக்கின்றனர். இந்த மக்களின் நட்பும் ஆர்வமும் தனது உள்ளத்தை நெகிழச்செய்வதாகத் திருத்தந்தை தன்னிடம் கூறியதாகத், திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை Federico Lombardi தெரிவித்தார். மரியாதை நிமித்தம் குடியரசுத்தலைவர் மாளிகையில் அவரைச் சந்தித்த பின்னர், பிரதமர் Lawrence Gonzi, அவரது குடும்பத்தினர், இன்னும் நாடுகளின் தூதர்களையும் சந்தித்தார். இவ்விடத்தைவிட்டு வெளியே வந்த போது தீராத நோய்களால் துன்புறும் ஒன்பது சிறாரை ஆசீர்வதித்தார் திருத்தந்தை.

அரசுத்தலைவர் மாளிகையிலிருந்து 13 கிலோ மீட்டரிலிருக்கின்ற ராபாட் புனித பவுல் ஆலயத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை. 1463ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் சுமார் 250 மறைப்பணியாளரைச் சந்தித்த பின்னர் அங்கிருந்து படிகள் வழியாக புனித பவுல் கெபிக்குச் சென்றார். இங்குதான் புனித பவுல் மூன்று மாதங்கள் தங்கி நற்செய்தி அறிவித்தார். அங்கு சிறிது நேரம் செபம் செய்த பின்னர், வெளியில் வளாகத்தில் காத்திருந்த விசுவாசிகளுக்கு உரையும் ஆற்றினார் திருத்தந்தை.

RealAudioMP3 அந்த ஆலயத்திற்குச் சிறிய விளக்கையும் பரிசாகக் கொடுத்த பாப்பிறை, தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். இந்நிகழ்ச்சியை முடித்து திறந்த காரில் 1.5 கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் சென்று ராபட் திருப்பீட தூதரகம் அடைந்தார். அங்கு இரவு உணவருந்தினார். இத்துடன் இச்சனிக்கிழமை தின நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

ராபாட் திருப்பீட தூதரகத்திலிருந்து 12 கிலோ மீட்டரிலிருக்கின்ற, ப்ளோரியானா கிரனாய் வளாகத்திற்கு இஞ்ஞாயிறு காலை 9.15 மணிக்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை. அதற்கு அருகிலுள்ள San Publio ஆலயம் சென்று திருப்பலிக்குத் தயாரானார். San Publio புனித பவுலால் மனந்திருப்பப்பட்ட முதல் தீவாகும். அரைவட்டவடிவில் மஞ்சள் நிறத்தில் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் கூட்டுத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. குறைந்தது நாற்பதாயிரம் விசுவாசிகள் இதில் பங்கு பெற்றனர்.

பாஸ்கா கால மூன்றாம் ஞாயிறு வாசகங்களை மையமாக வைத்து திருப்பலி நிகழ்த்தப்பட்டது. அழகிய திருப்பலி பாத்திரம் ஒன்றும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது. இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரைக்குச் செவிமடுப்போம். RealAudioMP3

இத்திருப்பலியி்ன் தொடக்கத்தில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய மால்ட்டா பேராயர் Paul, 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டை இத்திங்களன்று திருத்தந்தை சிறப்பிப்பதைக் குறிப்பிட்டு அவர் இப்பணியை ஏற்றதற்கு நன்றி தெரிவித்து, அவர் இன்னும் பல்லாண்டுகள் வாழ வேண்டுமென வாழ்த்தினார். மேலும், மால்ட்டாவில் புதிய நற்செய்திபணிக்கானத் தேவையையும் சுட்டிக்காட்டினார். திருத்தந்தை இத்திருப்பலியின் இறுதியில் அல்லேலூயா வாழ்த்தொலி உரையும் வழங்கினார். RealAudioMP3

அன்னைமரி திருத்தலத்திற்குத் தங்க ரோஜாவை பரிசளித்தார். பின்னர் ராபட் திருப்பீட தூதரகம் சென்று மால்ட்டா ஆயர்களுடன் மதிய உணவு அருந்தினார். மதியம், மால்ட்டாவில் குருக்களின் பாலியல்ரீதிச் செயல்களால் பாதிக்கப்பட்ட 12 சிறாரையும் திருத்தந்தை சந்தித்தார்.

மாலையில் வலேத்தா துறைமுகம் சென்று 20 நிமிடங்கள் படகுப் பயணம் செய்த பின்னர் இளையோரைச் சந்திப்பது, பின்னர் உரோமைக்குப் புறப்படுவது பயணத் திட்டத்தில் இடம் பெற்றிருந்தன.

ஐஸ்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள எரிமலைப் புகையால் தற்போது வடக்கு ஐரோப்பா பாதிக்கப்பட்டு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். இந்தப்புகை பிரச்சனை, திருத்தந்தையை இன்னும் ஒருநாள் தங்கள் நாட்டில் தங்கவைக்கும் என்று குடியரசுத் தலைவர் சொன்னவுடன் மக்கள் ஒருசேர கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வட இத்தாலிக்குச் செல்லும் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உரோம் லெயோனார்தோ த வின்சி (Leonardo da Vinci) சர்வதேச விமானத்தளத்திலிருந்து இச்சனிக்கிழமை புறப்பட்ட சில விமானங்களில் திருத்தந்தை பயணித்த ஆல்இத்தாலியா Airbus 320 விமானமும் ஒன்று. மால்ட்டா விமான ஓட்டிகளும் தாங்கள் திருத்தந்தையாக பாதுகாப்பாக உரோமைக்கு அழைத்துச் செல்வோம் என்று கூறியிருக்கின்றனர். திருத்தந்தை 16ம் பெனடிக்டும் மால்ட்டா A320 விமானத்தில் இஞ்ஞாயிறு இரவு உரோமைக்குப் புறப்பட்டார். இத்துடன் 26 மணி நேரங்களுக்கு சற்று அதிகமான நேரத்திற்கு இடம் பெற்ற திருத்தந்தையின் இந்த 14வது வெளிநாட்டுத் திருப்பயணமும் நிறைவடைந்தது. புனித பவுலின் நற்செய்தி அறிவிப்பால் கிறிஸ்துவைப் பெற்ற மால்ட்டா மக்களின் ஆழமான கத்தோலிக்க விசுவாசம் அனைவருக்கும் வியப்பூட்டுவதாகவே இருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.