2010-04-18 15:02:44

திருத்தந்தை மால்ட்டாவில் நிகழ்த்திய திருப்பலி மறையுரை


ஏப்ரல்18,2010 RealAudioMP3 கி.பி.60ம் ஆண்டில் புனித பவுல் மால்ட்டா கடற்கரையில் கரை ஒதுங்கிய போது மக்கள் வழங்கிய அதே வரவேற்பை தற்போது தனக்கும் வழங்கியது குறித்து நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறேன். உயிர்த்த கிறிஸ்து சீடர்களின் வலைகளில் அற்புதவிதமாக மீன்கள் கிடைக்கச் செய்தததை இஞ்ஞாயிறு நற்செய்தியில் வாசிக்கிறோம். இன்றைய உலகம் இறைவனையும் அவர் திருச்சபையையும் கைவிட்டு நம் வாழ்விற்கான மதிப்பீடுகளை நாமே தேர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியோ, இரவு முழுவதும் வலைபோட்டும் மீனொன்றும் கிடைக்காமல் சோர்ந்திருந்த சீடர்களிடம் இயேசு மீண்டும் வலைகளைப் போடுமாறு கேட்க, அவர்களும் வலைகளைப் போட்டு பெருமளவில் மீன்பிடித்ததைக் கூறுகின்றது. இதிலிருந்து, நாம் தனியே செயல்படுவதற்கும் இறைவனோடு நம்பிக்கையில் இணைந்திருப்பதற்குமான வேறுபாடு காட்டப்படுகின்றது.

கப்பல் விபத்துக்குள்ளான போது இறைவனில் விசுவாசம் கொண்டு செயல்பட புனித பவுல் விடுத்த அழைப்பை இன்றைய திருவழிபாட்டு வாசகத்தில் கேட்டோம். ஆம். இன்றைய தொழிற்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் விடை தருவது போல் தோன்றலாம். ஆனால் இறைவன் ஒருவரே நம் துன்ப துயரங்களின் போது நம்மைக் காப்பாற்ற முடியும். இறைவனே நம் மகிழ்வுக்கும் மனநிறைவுக்குமான காரணமாகத் திகழ்கிறார். இறையன்பே பிறருக்கான அன்பில் பிரதிபலிக்கிறது. இவ்வாறு உரைத்த திருத்தந்தை மால்ட்டா மக்களின் பக்தி வாழ்வைப் பாராட்டினார். அந்நாட்டில் முதன்முறையாகப் புனிதராக அறிவிக்கப்பட்ட டுன் கோர்க் பிரேக்கா பற்றியும் எடுத்துச் சொன்னார். அவரின் எளிமை, பணிவு, நன்மைத்தனம், தாராளமனது, பக்தி ஆகியவை குருக்களுக்கான இவ்வாண்டில் எடுத்துக்காட்டாக அமையும் என வாழ்த்தி தனது மறையுரையை முடித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.