2010-04-17 10:02:46

ஞாயிறு சிந்தனை


கிராமத்தில் வாழும் குடும்பம் ஒன்று. குடும்பத்தின் தாயும், தந்தையும் அந்த ஊரில் எழுந்த ஊர் பகை, பழிக்குப் பழி என்று ஏதோ ஒரு காரணத்தால் கொல்லப்படுகின்றனர். அவர்களுக்கு இரு குழந்தைகள். தாக்க வந்த கும்பலின் அழிவிலிருந்து தப்பி, அண்ணனும், தம்பியுமான அந்த இரு குழந்தைகள் பிரிந்து வெவ்வேறு திசையில் ஓடுகின்றனர்.
20 ஆண்டுகள் கழித்து, இருவரும் சந்திக்கும் ஒரு சூழல். ஆனால், ஒருவர் ஒருவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. அப்போது சிறு வயதில் அவர்களது அன்னை பாடிய ஒரு பாடலை அண்ணன் பாடுகிறான். தம்பி அதைக் கேட்டதும், தானும் அந்தப் பாடலில் சேர்ந்து பாடுகிறான். அந்தப் பாடல் அவர்கள் இருவரின் அடையாளங்களை உறுதி படுத்தி அவர்களைச் சேர்த்து வைக்கிறது.
நாம் பல முறை, பல வடிவங்களில் பார்த்துள்ள திரைக் கதைகளில் இதுவும் ஒன்று. திரைக் கதைகளில் மட்டுமல்ல, உண்மை வாழ்விலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சிறு வயதில் பிரிந்து, பல வருடங்கள் கழித்து சந்திக்கும் குடும்பங்களில் ஒருவர் ஒருவரைப் பார்த்து அடையாளம் தெரியாத போது, ஏதோ ஒரு வார்த்தை, அல்லது ஒரு செயல்பாடு, பழைய வாழ்வை நினைவுபடுத்தி, பல குடும்பங்களை மீண்டும் சேர்த்து வைத்துள்ளது.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு அவருக்கும் சீடர்களுக்கும் இடையே இது போன்று ஒரு சூழல் உருவானது. இவ்வளவுக்கும் அவர்கள் பிரிந்தது மூன்றே நாட்கள்தான். ஆனால், அந்த மூன்று நாட்களில் நடந்தவைகள் இயேசுவை முற்றிலும் அவர்கள் நினைவிலிருந்து அழித்து விட்டது போல் இருந்தது. அதனால், அவர் உயிர்த்தபின் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் சீடர்கள் தடுமாறினர்.
வாழ்க்கையில் ஏற்படும் மிக ஆழமான காயங்களை, அதிர்ச்சியான வேதனைகளை நமது நினைவுகள் அழித்துவிடும் வல்லமை பெற்றவை என்பது உளவியல் அறிஞர்கள் சொல்லும் ஒரு உண்மை. இந்த நிலைக்கு Amnesia என்று பெயர். ஒரு வேளை சீடர்களின் நினைவிலிருந்து அந்தக் கடைசி மூன்று நாட்கள் அழிக்கப்பட்டுவிட்டதைப் போல் தெரிந்தது.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நிகழ்ந்த பல சந்திப்புகளில் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தவிக்கும் சீடர்கள், இயேசுவுக்கு நெருங்கியவர்கள் இயேசுவின் ஒரு சொல் அல்லது செயலால் அவரை அடையாளம் கண்டு கொள்கின்றனர்.
அவர் உயிர்த்த அன்று காலை, கல்லறைக்கு அவரைத் தேடிச் சென்றார் மகதலாவின் மரியா. அவருக்கு முன் இயேசுவே நேரில் தோன்றியும் அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இயேசு அவரை "மரியா" என்று அழைத்ததும், அடையாளம் கண்டு கொள்கிறார். (யோவான் 20: 11-16)
எம்மாவு என்ற ஊருக்கு இரு சீடர்கள் நடந்து செல்கின்றனர். இயேசுவும் அவர்களோடு சேர்ந்து பேசிக் கொண்டே நடந்தார். அவர்களால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவர்களோடு உணவருந்துகையில், அப்பத்தை எடுத்து அவர் பிட்டுத் தந்த போது, அவர்கள் கண்கள் திறந்து அவரை அடையாளம் கண்டனர். (லூக்கா 24: 30-31)
சென்ற ஞாயிறு நாம் சிந்தித்த தோமாவின் நிகழ்விலும் இதே கதை தான். தன்னைத் தொடும்படி இயேசு அழைத்ததும், தோமா இயேசுவைத் தொட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை என்றாலும், அவரை இயேசு என்று, இன்னும் ஒரு படி மேலே சென்று அவரைக் கடவுள் என்று உணர்ந்தார் தோமா என்று போன வாரம் சிந்தித்தோம். இன்றும் இதே கதை தான்.
கண்ணால் இயேசுவைக் கண்டாலும், அவரைப் புரிந்து கொள்வதற்கு, அடையாளம் கண்டு கொள்வதற்கு இயேசுவின் ஒரு செயல் தேவைப் படுகிறது. இந்த நிகழ்வை இன்றைய நற்செய்தியிலிருந்து கேட்போம்.

யோவான் 21: 1-19 
யோவானின் இந்த நற்செய்தி பகுதி இறையியல் பாடங்களை வழங்கும் ஒரு பகுதி. பேதுரு மீன் பிடிக்கப் போவதாக அறிவித்தார். மற்ற நான்கு சீடர்கள் அவரைத் தொடர்ந்தனர். மீன் பிடிக்கும் தொழிலில் இருந்தவர்களை ‘மனிதர்களைப் பிடிப்பவர்களாய் ஆக்குவேன்’ என்று முன்பொருமுறை இயேசு கூறினார். அதை நம்பி, தங்கள் தொழிலை, படகுகளை, வலைகளை, தங்கள் குடும்பங்களை விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். இப்போது... இயேசுவே இல்லை என்றான பின், அவரது அந்த சொல்லை மட்டும் நம்பி எத்தனை நாட்கள் வாழ முடியும்? தங்கள் பழைய வாழ்வைத் தொடர அவர்கள் திரும்பிச் சென்றது போல் இருந்தது இந்தச் செயல்.
“இரவு முழுவதும் அவர்கள் முயன்றும் ஒன்றும் கிடைக்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. இரவில் தான் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். ஆனால், யோவான் கூறும் ‘இரவு’ அவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்வுக்குச் சென்ற அந்த நிலையையும் சேர்த்துக் குறிக்கிறது. அவர்கள் தங்கள் பழைய வாழ்வைத் தேடிச் சென்றும், ஒரு பலனும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதைத் தான் “இரவு முழுவதும் அவர்கள் முயன்றும் ஒன்றும் கிடைக்கவில்லை” என்று யோவான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

மன மாற்றங்கள், வாழ்வின் திசை மாற்றங்கள் இவற்றில் வெற்றி காண முடியாமல், மனம் தளர்ந்து மீண்டும் பழைய நிலைக்குச் செல்பவர்களை இப்போது நினைத்துப் பார்க்கலாம். இதில் சிறப்பாக, மது, போதைப் பொருள் பழக்கங்களை விட்டு விட்டு, மறு வாழ்வு முயற்சிகளில் இருப்பவர்களை நினைத்துப் பார்க்கலாம்.
இந்த முயற்சிகள் மிகவும் கடினமான ஒன்று. அந்த நேரத்தில் அவர்கள் தாண்ட வேண்டிய சிறு குன்றுகளும் பெரும் இமயமலைகளாகத் தெரியும். ஒரு நாள் மதுவின்றி, போதைப் பொருள் இன்றி கழிவது ஏதோ ஒரு யுகத்தைக் கடப்பதைப் போலத் தெரியும். இவ்வளவு முயன்றும் ஒன்றும் கிடைக்காதது போல் உணர்வார்கள். அவர்களது மறுவாழ்வு முயற்சிகளின் நேரத்தில் ஏற்படும் ஒரு சிறு ஏமாற்றமும் பெரிய அதிர்ச்சியாக மாறக் கூடும். அந்த அதிர்ச்சியைச் சமாளிக்க முடியாமல், அவர்கள் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பினால், அந்த வீழ்ச்சியிலிருந்து அவர்களை மீட்பது மிக, மிகக் கடினமாகி விடும். இப்படி வாழ்வோடு போராடி வரும் பல கோடி மக்களை, அவர்களது மறு வாழ்வுப் பயணத்தில் அவர்களோடு சேர்ந்து போராடும் குடும்பங்களை இறைவனின் கண்காணிப்பில், அணைப்பில் ஒப்படைப்போம்.

மனத் தளர்வுடன் பழைய நிலைக்குத் திரும்பிய சீடர்களை திபேரியக் கடலருகே இயேசு சந்தித்தார். ஆனால் அவர் இயேசு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. விடிந்தபின் அவர்களை இயேசு மீன் பிடிக்கச் சொன்னார். பகலில் மீன் பிடிப்பது பைத்தியக் காரத்தனம் என்று தெரிந்தும் அவர்கள் செயல்படுகின்றனர். இரவெல்லாம் அவர்கள் வலையில் விழாத மீன்கள் விடிந்ததும் வந்து விழுந்தன.
முன்பு இதேபோல் கெனசரேத் ஏரியில் நடந்த நிகழ்ச்சி சீடர்களின் நினைவில் பளிச்சிட்டது. அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டனர். இயேசு மீண்டும் அவர்களைத் தன் சீடர்களாய், மனிதரைப் பிடிப்பவராய் மாற்றினார்.

அதிலும் சிறப்பாக, பழைய நிலைக்குப் போகலாம் என்ற எண்ணத்தை ஆரம்பித்து வைத்த பேதுருவை இன்னும் ஆழமாய் உறுதி படுத்தினார் இயேசு. அது மட்டுமல்ல, தனக்கு பின் அந்த அன்புப் பணியை முன்னின்று நடத்த பேதுருவை அழுத்தந்திருத்தமாய் கேட்டுக் கொண்டார். அந்தப் பணியைச் செய்வதற்கு பேதுரு தன் உயிரையேத் தகனம் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறினார்.
ஏப்ரல் 18 புனித பேதுரு பசிலிக்காவின் அடிக்கல் நாட்டப்பட்டதென வரலாறு சொல்கிறது. அதே ஏப்ரல் 18 நாம் வாசிக்கும் நற்செய்தியில் இயேசுவும் ஒரு அடிக்கல்லை நாட்டினார். தன் அன்பு அரசுக்கு அவர் நாட்டிய அடிக்கல் பேதுரு.

இந்த சம்பவத்தில் கூடுதல் அழகு என்னவெனில், சீடர்களால் இயேசுவை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை எனினும், அவரைப் பொறுத்தவரை, இயேசு கொஞ்சமும் மாறாமல் இருந்தார். இறுதி இரவுணவின் போது அவர்கள் பாதங்களைக் கழுவிப் பணிவிடை செய்தது போல், தன் பணிவிடைகளைத் தொடர்ந்தார். இரவு முழுவதும் உழைத்து, களைத்து பலன் ஒன்றும் இல்லாமல் மனம் தளர்ந்து திரும்பும் சீடர்களுக்கு அவர்கள் பசி தீர்க்கும் பணியாளனாய், அன்புத் தாயாய் மாறி கரையில் நின்றார்.
பணியாற்றுவதில், பணிவுடன் நடந்து கொள்வதில் சிறுதும் மாறாத அந்த தெய்வ மகன் நமக்கும் பணிவோடு பணிகள் செய்யும் பக்குவத்தைச் சொல்லித் தர வேண்டுமென செபிப்போம்.







All the contents on this site are copyrighted ©.