2010-04-17 14:58:21

செக் குடியரசு கர்தினால் Tomáš Špidlík இறைவனடி எய்தினார், திருத்தந்தை இரங்கல்


ஏப்ரல்17,2010 செக் குடியரசைச் சேர்ந்த இயேசு சபைக் கர்தினால் Tomáš Špidlík இறைபதம் அடைந்ததையொட்டி, இயேசு சபை அதிபர் அருட்திரு Adolfo Nicolas Pachon க்குத் தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை.

இவ்வெள்ளிக்கிழமை இரவு, உரோமையில் இறந்த 91 வயதாகும் கர்தினால் Tomáš Špidlík, செக் குடியரசின் Boskovice ல் பிறந்தவர். 1949ம் ஆண்டு குருவாகத் திருநிலைபடுத்தப்பட்ட இவர், 1951ம் ஆண்டு முதல் வத்திக்கான் வானொலியில் செக் மொழியில் ஞாயிறு மறையுரைகள் வழங்கியுள்ளார். உரோம் கிரகோரியன் மற்றும் கீழைரீதி பல்கலைகழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். ஆன்மீகத் தியானங்கள் கொடுப்பதில் தேர்ந்தவரான இவர், 1995ம் ஆண்டில் திருத்தந்தைக்கும் திருப்பீட அதிகாரிகளுக்கும் தியானம் கொடுத்திருக்கின்றார். 2003ம் ஆண்டு திருத்தந்தை 2ம் ஜான் பாலால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், இறந்த கர்தினால் Špidlík, நற்செய்திக்கு அயராது உழைத்தவர். கீழைரீதி கிறிஸ்தவ ஆன்மீகத்தில் தேர்ந்தவர் என்றெல்லாம் பாராட்டியிருப்பதோடு அவரின் ஆன்மா நிறைசாந்தியடையச் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 








All the contents on this site are copyrighted ©.