2010-04-16 16:19:54

கிறிஸ்தவர்கள் தபத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் - திருத்தந்தை


ஏப்ரல்16,2010 சிறாரைப் பாலியல் ரீதியாகத் துர்ப்பிரயோகம் செய்த குருக்களின் பாவங்களை நினைவுகூர்ந்த அதேவேளை, கிறிஸ்தவர்களாகிய நாம் தபம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வேண்டுமென்று வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

வத்திக்கானில் இவ்வியாழனன்று பாப்பிறை விலிலியக் குழுவினருடன் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, நமது பாவங்கள் பற்றி உலகம் நம்மைத் தாக்கி வரும் இந்நாட்களில் தபம் செய்ய முயற்சிப்பதே திருவருள் கொடை என்பதை நாம் உணர வேண்டும் என்று கூறினார்.

மன்னிப்புக்கு நம்மைத் திறந்த மனதுள்ளவர்களாக மாற்றுவது, மன்னிக்க நம்மைத் தயார்படுத்துவது, நம்மில் மாற்றம் ஏற்பட நம்மையே கையளிப்பது, தபத்தின் வேதனையை உணருவது, அதாவது தூய்மை அடையவும், மாற்றம் காணவும் நம்மை அனுமதிப்பது ஆகிய இவையனைத்தும் புதுப்பித்தல் என்பதால் இது அருள் நிறைந்தது, இது, இறைவனின் இரக்கத்தின் பணி என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நம் வாழ்க்கையில் நாம் செய்த தவறுகளை ஏற்பது தபத்திற்கான தேவையை உணர்த்துகிறது என்றும் உரைத்த அவர், கடவுளுக்குப் பணிவதால் கிடைக்கும் விடுதலை குறித்தும் குறிப்பிட்டார்.

நித்திய வாழ்வை அனுபவிக்க வேண்டுமானால் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்றும் மனிதருக்குப் பணிவதைவிட நாம் கடவுளுக்குப் பணிந்து நடக்க வேண்டுமென்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.