2010-04-14 14:58:14

சீனாவில் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடனான ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார் திருத்தந்தை


ஏப்ரல்14,2010 சீனாவில் இப்புதன் காலை இடம் பெற்ற கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடனான தமது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

சீனாவில் வடமேற்கு பகுதியில் இருக்கும் கிங்காய் (Qinghai) மாநிலத்தில் இப்புதன் காலையில் உள்ளூர் நேரப்படி 7.49 மணிக்கு, 7.1 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 300 பேர் இறந்துள்ளனர் மற்றும் எட்டாயிரத்துக்கு அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர், இன்னும் பலர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தான் செபிப்பதாக, இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் கூறிய திருத்தந்தை, அவர்களுக்குத் தேவையான உதவிகள் தவறாமல் கிடைக்கும் என்ற தமது நம்பிக்கையையும் வெளியிட்டார்.

நிவாரணப் பணிகளில் திறமையுடைய ஏறத்தாழ 5000 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கம் தாக்கிய Yushu பகுதியில் ஏறத்தாழ 2,50,000 பேர் வாழ்ந்து வந்ததாகவும், இங்கு வாழ்ந்த பெரும்பாலான திபெத்தியர்களின் வீடுகள் மரத்தாலானது என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.