2010-04-14 15:01:34

ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் அதிர்ச்சியை அளிக்கின்றன - ஜெர்மனியின் பாராளு மன்ற அங்கத்தினர்கள்


ஏப்ரல்14,2010 ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் அதிர்ச்சியை அளிக்கின்றன என்று ஜெர்மனியின் பாராளு மன்ற அங்கத்தினர்கள் கூறியுள்ளனர்.

ஒரிசாவில் 2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ள ஜெர்மனியிலிருந்து வந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏப்ரல் 8 முதல் கந்தமால் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாய் மேற்கொண்ட பயணத்தை இந்த செவ்வாயன்று நிறைவு செய்தபின், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, தங்கள் அதிர்ச்சியைத் தெரிவித்தனர்.

இந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் முகாம்களில் அவர்களது நிலை பரிதாபமாக உள்ளதெனவும், வன்முறைகள் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிவுற்றபோதும், இன்னும் காவல் துறையினர் வழக்குகளைச் சரிவரப் பதிவு செய்யவில்லை என்றும் இந்தக் குழுவில் பங்கு பெற்ற பாஸ்கல் கோபர் (Pascal Kober) என்பவர் கூறினார்.

தாங்கள் நேரடியாகப் பார்த்ததையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு முயற்சிகள் குறித்த தங்கள் ஆலோசனைகளையும் ஜெர்மனியின் பாராளுமன்றத்திற்கும், அங்குள்ள பல திருச்சபை நிறுவனங்களுக்கும், மனித உரிமை குழுக்களுக்கும் தங்கள் அறிக்கை மூலம் தெரிவிக்க இருப்பதாக பாஸ்கல் கோபர் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.