2010-04-13 16:21:24

விவிலியத் தேடல்


RealAudioMP3
திருப்பாடல்கள் பற்றிய ஒரு புதிய விவிலியத் தேடல் தொடரை ஆரம்பித்திருக்கிறோம். ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வில், குழு செபங்களில், திருவழிப்பாடுகளில் பயன்படுத்தப்படும் திருப்பாடல்கள், விவிலியத்தின், நம் வாழ்வின், மையம் என்பதிலிருந்து நம் தேடலை ஆரம்பித்திருக்கிறோம்.
இந்த திருப்பாடல்கள் நூல் பெரும் அறிவியல் தத்துவங்களையோ, வரலாற்றையோ கூறும் நூல் அல்ல; மாறாக, நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு அனுபவங்களை உள்ளது உள்ளபடியே எடுத்துரைக்கும் ஒரு அற்புத நூல் என்று கூறினோம்.
இந்த நூலை ஒரு அமுத சுரபியாக, வைரமாக, மூச்சுக் காற்றாக உருவகித்து இந்த நூலின் சில பயன்பாடுகளைச் சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இந்த நூலின் பயன்பாடுகள் குறித்து இன்று தொடர்ந்து சிந்திப்போம். புதிய ஏற்பாட்டின் ஒரு சில பகுதிகளில் இந்நூலின் பயன்பாடுகள் குறித்து சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று பகுதிகளை மட்டும் இப்போது கேட்போம்:

புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம் 5: 19
உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். 
புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3: 16
முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். 
யாக்கோபு (யாகப்பர்) எழுதிய திருமுகம் 5: 13
உங்களுள் யாரேனும் துன்புற்றால், இறைவேண்டல் செய்யட்டும்: மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். 
நாம் கேட்ட இந்தப் பகுதிகளில் திருப்பாடல்களை எவ்வகைகளில் பயன்படுத்தலாம் என்பதை உணரலாம்.


இப்படி ஏறத்தாழ வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் திருப்பாடல்களைப் பயன்படுத்தச் சொல்லிச் சென்றுள்ளனர் பவுலும், யாக்கோபுவும். இவர்கள் சொல்வதை நான் இப்படி கற்பனை செய்து பார்க்கிறேன். நாம் வழக்கமாய் ஒருவரைச் சந்திக்கும் போது, "Good Morning", "வணக்கம்" என்று வாழ்த்துகிறோம். எனக்குத் தெரிந்து ஒரு சிலர் இந்த வாழ்த்துக்களுக்குப் பதில் "Praise the Lord" "இயேசுவுக்கேப் புகழ்" என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அதே போல், நம் வாழ்த்துக்களில் திருப்பாடல்களின் வரிகளை சொல்லலாம் இல்லையா? சொல்லலாம். ஆனால், அது இயல்பாக வரவேண்டும். அல்லது மிகச் செயற்கையாகத் தெரியும். இப்படி இயல்பாகச் சொல்லும் பக்குவம் பெற, திருப்பாடல்கள் நம் வாழ்வில் இன்னும் அதிகம் ஊறிப் போக வேண்டும். இந்த பக்குவம் பெற்றவர் இயேசு.
திருப்பாடல்களைப் பயன்படுத்துவதில் இயேசுவே நமக்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறார். பள்ளிக்குச் சென்று பல நூல்களை இயேசு படித்தாரா என்பதெல்லாம் நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால், திருப்பாடல்களை அவர் அடிக்கடி வாழ்வில் பயன்படுத்தியிருக்க வேண்டும்; ஏறக்குறைய அனைத்துத் திருப்பாடல்களும் அவரது நினைவில் பதிந்திருக்க வேண்டும். இப்படி நான் சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் கல்வாரி காட்சி.
நம் வாழ்வில் சில சமயங்களில் நாம் மனத்தால், உடலால் அடிபடும் போது, நம் வாய் சொல்லும் முதல் வார்த்தைகளைச் சிந்திக்கலாம். நம்மில் பலர் 'அம்மா' என்றோ, 'கடவுளே' என்றோ, 'இயேசுவே' என்றோ வாய்விட்டுச் சொல்கிறோம். தீர ஆராய்ந்து முடிவெடுத்துச் சொல்லப்படும் வார்த்தைகள் இவை அல்ல. எந்த வித சிந்தனையும் இல்லாமல், எதேச்சையாக வரும் சொற்கள் இவை. என் இதைச் சொன்னோம் என்று யாராவது கேட்டால், விளக்கங்களை நம்மால் சொல்ல முடியாது. அவ்வளவு தூரம் நமக்குள் ஊறிப் போய் விட்டச் சொற்கள் இவை.
இயேசு கல்வாரியில் அந்தத் துன்பத்தின் உச்சியில் அற்புதமான வார்த்தைகளை, வசனங்களைச் சொன்னார் என்று ஏற்கனவே சிந்தித்தோம். அவர் சிலுவையில் சொன்ன அந்த ஏழு வசனங்களில் மூன்று வசனங்கள் திருப்பாடல்கள் நூலில் காணக் கிடக்கும் வசனங்கள். இயேசுவின் உள்ளத்தை, வாழ்வை இந்தத் திருப்பாடல்கள் நூலின் வரிகள் நிறைத்திருந்ததால் அவரிடமிருந்து இயல்பாகவே அந்தச் சொற்கள் வெளிவந்தன. அவர் சொன்ன அந்த மூன்று வசனங்களையும், அவைகளுக்கு ஈடான அந்தத் திருப்பாடல்களின் வரிகளையும் இப்போது ஒரு சேரக் கேட்போம்:

மத்தேயு நற்செய்தி 27 46 மாற்கு நற்செய்தி 15: 34
மூன்று மணியளவில் இயேசு, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார்.
திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 22: 1
என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?
யோவான் (அருளப்பர்) நற்செய்தி 19: 28
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.
திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 69: 3, 21
கத்திக் கத்திக் களைத்துப்போனேன்: தொண்டையும் வறண்டுபோயிற்று... என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.

லூக்கா நற்செய்தி 23: 46
“தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.
திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 31: 1, 5
ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்... உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன். வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர்.

திருப்பாடல்கள் 22, 31, 69 இவற்றை இனி வரும் வாரங்களில் விரிவாகச் சிந்திக்கும் போது நாம் மீண்டும் ஒரு முறை இயேசுவின் கல்வாரி அனுபவத்தைச் சிந்திப்போம். இப்போதைக்கு, இயேசுவின் வாழ்வில் திருப்பாடல்கள் எவ்வளவு தூரம் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன என்பதைக் காட்டவே இவைகளைப் பகிர்ந்து கொண்டேன். தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு திருப்பாடல்களின் வரிகளைச் சொன்னார் என்பதும், தன் இறுதி மூச்சை விடும்போது திருப்பாடல்களின் வரிகளோடு தம் வாழ்வை இயேசு முடித்தார் என்பதும் நமக்கெல்லாம் நல்ல பாடம்.

இயேசுவின் வாழ்விலோ, பவுல், யாக்கோபு இவர்களின் வாழ்விலோ திருப்பாடல்களின் வரிகள் இவ்வளவு ஆழமாய்ப் பதிய ஒரு முக்கிய காரணம்... இந்த நூல் ஒரு கவிதைத் தொகுப்பு என்பதே.
கவிதைகளுக்கு தனி சக்தி உண்டு. நம் எண்ணங்களை, மனங்களை எளிதில் நிறைக்கும் சக்தி படைத்தவை கவிதைகள். தூங்கும் குழந்தை ஒன்றை எழுப்பி, Twinkle twinkle என்ற பாடலை நாம் ஆரம்பித்து வைத்தால், "Twinkle, twinkle little star, how I wonder what you are..." என்று முதல் இரு வரிகளையாவது அந்தக் குழந்தை சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிவிடும்.
Twinkle twinkle உலக மகாக் கவிதை அல்ல. ஆனால், பல கோடி மக்களின் மனங்களில் இன்னும் இந்த வரிகள் இடம் பிடித்திருக்க ஒரு காரணம் அது ஒரு குழந்தைக் கவிதை.
சிறிது சிந்தித்துப் பாருங்கள்... நாம் பாலர் பள்ளியிலிருந்து உயர் நிலைப் பள்ளி அல்லது கல்லூரி வரை படித்தவைகளில் இப்போதும் நம் மனதில், நினைவில் வரி வரியாய் இடம் பிடித்திருப்பவை கவிதைகள், செய்யுள்கள் தாம். நாம் படித்த, நாம் மனப்பாடம் செய்த பல கட்டுரைகள் இவ்வளவு தூரம் வரி வரியாய் நினைவிருக்குமா? சந்தேகம் தான்.
இந்தக் கூற்றை உங்களிடம் பகிர்வதற்கு முன், எனக்கு நானே ஒரு சின்ன பரீட்சை வைத்துக் கொண்டேன். நமது திருக்குறளில் வரும் முதல் பத்துக் குறள்களில் எத்தனை எனக்குத் தெரிகிறது என்பது தான் அந்தப் பரீட்சை. பத்தில் நான்கு எளிதில் எனக்கு நினைவுக்கு வந்தது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்த போது, ஏழு நினைவுக்கு வந்தது. நினைவுப் போட்டிகளில் நான் என்றைக்கும் கலந்து கொண்டவன் இல்லை. என்னைவிட நினைவுத் திறன் படைத்த பலரை எனக்குத் தெரியும்.
இப்போது நான் “அகர முதல எழுத்தெல்லாம்” என்று ஆரம்பித்துக் கொடுத்தால், உங்களில் கட்டாயம் பல பேர் அந்தப் பத்து குறள்களையும், அதற்கு மேலும் கூறும் திறமை கொண்டவர்கள் என்றும் எனக்குத் தெரியும்.

நினைவுத் திறன் போட்டி பற்றி பேசுவது என் எண்ணம் அல்ல. ஆனால், செய்யுள்கள், கவிதைகள், பாடல்கள் இவைகள் மனதில் சென்று பதியும் சக்தி படைத்தவை என்பதை கூறவே இந்த விளக்கங்கள். கவிதைகளுக்கு எப்படி இந்த சக்தி வருகிறது?
கவிதை வரி சந்தங்கள், அல்லது அவற்றில் சொல்லப்பட்டுள்ள கற்பனைகள் இவைகளாலேயே கவிதைகளுக்கு இந்த சக்தி உண்டாகிறது.இப்படி ஒரு கவிதைத் தொகுப்புதான் நமது திருப்பாடல்கள் நூலும். இந்த நூலில் உள்ள கவிதை நயத்தை, அதுவும் எபிரேயக் கவிதைகளின் தனிச் சிறப்பை நாம் அடுத்த விவிலியத் தேடலில் சிந்திப்போம்.







All the contents on this site are copyrighted ©.