2010-04-13 15:49:27

தாய்லாந்தில் அமைதிப்பேச்ச்சுவார்த்தைக்கு ஆயரும் புத்த மதத்துறவியும் அழைப்பு


ஏப்ரல்13,2010 21பேரின் உயிரிழப்புகளுக்கும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைதலுக்கும் காரணமான வன்முறைகளை இனிமேலாகிலும் கைவிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு முன் வர வேண்டும் என தாய்லாந்து அரசுக்கும் அரசு எதிர்ப்பு போராட்டவீரர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயரும் புத்தமத துறவி ஒருவரும்.
இன்றைய தாய்லாந்தில் நாடு முழுவதும் கோபமும் பகைமையும் வேகமாகப் பரவிவருவதாகக் கவலையை வெளியிட்ட அந்நாட்டு ஆயர் புன்லுவேன் மன்சாப், இன்றைய தாய்லாந்தை அச்சுறுத்துவது உள்நாட்டுப்போரல்ல, மாறாக, பரவிவரும் பகைமை உணர்வுகளே என்றார். மாற்றுக்கருத்துடையவர்களையும் மற்றும் பிற மத நம்பிக்கையுடையவர்களையும் ஏற்றுக்கொண்டு வாழ முன் வரவேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரையும் அன்பு செய்யும் சக்தி அனைவருக்கும் உள்ளது என்றார் ஆயர்.
அரசும், அரசு எதிர்ப்பாளர்களும் தங்கள் மோதல் நடவடிக்கைகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகளைத் துவக்க முன் வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஆயர் மன்சாப். இத்திங்களன்று இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகள் குறித்து கவலையை வெளியிட்ட தாய்லாந்து புத்த மதத் துறவி பைசன் விசாலோ, தற்காலிகத் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் வன்முறைகள், பிரச்னையை மேலும் சீர்கேடடையச் செய்யவே உதவும் என்றார். இன்றைய தாய்லாந்தில் ஒருவரைப் பிரிக்கும் கூறுகளைவிட ஒன்றிணைக்கும் கூறுகளே அதிகம் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு குடிமகனும் செயல்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் புத்தமதத் துறவி.







All the contents on this site are copyrighted ©.