2010-04-13 15:49:39

அணுகுண்டு பாதுகாப்பு மாநாடு: பாகிஸ்தான் குறித்து கணிசமான கவலைகள்


ஏப்ரல்13,2010 அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று அணுப் பாதுகாப்பு மாநாட்டுக்காக நாற்பதுக்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் வாஷிங்டனில் கூடியுள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு வடகொரியாவும், இரானும் அழைக்கப்படவில்லை; ஆனால், இஸ்ரேல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன என்றும், இஸ்ரேல் பிரதமர் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.
இந்த மூன்று நாடுகளும் அணுபரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை என்பதுடன், அவை அணு ஆயுதங்களை தாயாரித்து வைத்திருப்பதாகவும் கருதப்படுகின்றது.
பாகிஸ்தானின் அணு ஆலைகள் மற்றும் அதனிடம் இருக்கும் அணுப்பொருட்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பற்றியும் கணிசமான கவலைகள் இருக்கின்றன. இந்த நாடுகளை இம்மாநாட்டுக்கு அழைப்பதன் மூலம், அணு ஆயுத கட்டுப்பாட்டு வளையத்தை விரிவுபடுத்த அதிபர் ஒபாமா விளைகின்றார் என செய்திகள் கூறுகின்றன.
அணு ஆயுதங்களில் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு சுத்தீகரிக்கப்பட்ட யுரேனியம் உலகில் மொத்தமாக 1600 டன்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இந்த அளவு முழுவதுமே அணு ஆயுத வல்லமை பெற்ற நாடுகளின் பொறுப்பில்தான் உள்ளதாகத் தெரிகிறது. அதிலே பெரும்பங்கு இரஷ்யாவிடம்தான் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த யுரேனியத்துக்கும் மேலாய் அணு ஆயுத தயாரிப்பில் முக்கியமாகத் தேவைப்படும் இன்னொரு மூலப்பொருள் புளூடோனியம், உலகில் மொத்தத்தில் 500 டன்கள் அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் வைத்து ஒரு லட்சத்து இருபதாயிரம் குண்டுகளை உருவாக்க முடியுமென்று கணிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.