2010-04-12 15:30:28

வாரம் ஓர் அலசல் – நேர்மை, உண்மை, நன்மை


ஏப்ரல்12,2010 செய்தித் தாள்களில் வந்த ஒரு சில செய்திகளை அலசுவோமா....
அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாதவர்கள்.... இப்படியொரு தலைப்பில் ஒரு செய்தி. திருச்செந்தூரைச் சேர்ந்த 47 வயதாகும் சோமசுந்தரம் என்பவர் பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்களை தவணை முறையில் ஊர், ஊராகச் சென்று விற்பனை செய்து வருகிறவர். அன்று காலை இவர், உடன்குடியில் ஒரு வங்கியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, அதை பையில் போட்டு வாகனத்தில் திருச்செந்தூர் புறப்பட்டவர் வழியில் பணப்பையை தவறவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்த அவர், பணம் கிடைக்காததால் உடன்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில், உடன்குடி - குலசேகரன்பட்டணம் இடையே மெயின்ரோட்டில் ஆட்டோவில் வந்த சாத்தான்குளம், வாலசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த 21 வயதாகும் சவுந்தரராஜ்,, மகாராஜன் ஆகிய இரு இளைஞர்கள் அங்கு கிடந்த பணப்பையை எடுத்து குலசேகரன்பட்டணம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இவர்களின் நேர்மையை நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும். தான் தான், பணம் பணம் என்று காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பரபரக்கும் இன்றைய உலகில் இந்த இளைஞர்களைப் போன்று வித்தியாசமானவர்களும் இருக்கிறார்கள்.

அடுத்து ஒரு செய்தி......'விதி' மாறும் 'வீதி' முகவரிகள் : கரங்களை பலப்படுத்தும் 'உதவும் கரங்கள்' ..... எல்.கே.ஜி., சிறுமி ஒன்று வழி நெடுக 'ரைம்ஸ்' சொல்லிக் கொண்டே, அம்மாவுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது. திடீரென நின்று, மம்மீ... இந்த 'அங்கிள்' மட்டும் ஏன் இப்படி இருக்காரு? என்று வழியில் பார்த்தவரைச் சுட்டிக் காட்டி ஆச்சரியத்துடன் கேட்டது. சற்றும் யோசிக்காத சிறுமியின் அம்மா, தன்னுடைய செல்லிட பேசியில் யாரையோ தொடர்பு கொண்டு, தாங்கள் கண்டதை தெரிவித்தார். அடுத்த ஐந்து நிமிடங்களில், சிறுமி சுட்டிக் காட்டியவருக்கு உதவுவதற்கு அங்கு ஐந்து பேர் வந்து சேர்ந்தனர். இவர்கள் வந்திருந்தது, இவர்களின் செயலிலும் தெரிந்தது. அங்கு வந்தவர்கள், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில், ஆதரவற்று சாலையோரத்தில் படுத்திருந்த அந்த இளைஞனுக்கு 'உதவும்' நோக்கோடு ஊட்டியில் செயல்படும் 'உதவும் கரங்கள்' அமைப்பினர்தான்.
இந்த “உதவும் கரங்கள்” அமைப்பினர், பிறரிடம் எதையும் எதிர்பார்க்காமல், “வானமே கூரையாக” வசித்து வரும் ஆதரவற்றோரை, அரவணைத்து வருகின்றனர். ஒவ்வொரு சிறப்பு தினத்துக்கும், ஆதரவற்றோர் இல்லம், குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகம் சென்று உணவு வழங்குவது, அவர்களை மகிழ்விப்பது போன்ற மனதுக்கு அமைதி தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டு வருவதை இவ்வமைப்பினர் 'பொழுது போக்காக' கொண்டுள்ளனர். 'ஈரம்' உள்ள இதயங்கள் அனைத்தும் இவர்கள் செய்யும் நன்மைகளைப் பாராட்டிக் கொண்டு இருக்கின்றன.

தமிழ்ச் சமூகத்தில் நேர்மை உண்மை நன்மை ஆகியவை இன்னும் அழிந்து போகவில்லை, மாறாக உயிர்த்துடிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. அதேசமயம் மோசடிகளும் ஏமாற்றுவேலைகளும் மறைந்து போகவில்லை என்பதையும் செய்தித்தாள்களில் தினம் தினம் வாசிக்கிறோம். எடுத்துக்காட்டுக்கு,
விருதுநகரில் மேலும் ஒரு நிதி நிறுவனம் மோசடி செய்ததாகவும், இந்நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் காவல்துறையில் புகார் செய்ததன் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் ஒரு செய்தி. அடுத்து, போலி மற்றும் காலவதியான மருந்து விற்பனை செய்த கும்பலில் முக்கியப்புள்ளி சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது மருந்து சேமிப்புக் கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று மற்றொரு செய்தி.
உண்மை, நேர்மை, நன்மை. தமிழில் அருமையான சொற்கள். இவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் வாழப்பட வேண்டிய வார்த்தைகள். கவியரசர் கண்ணதாசன் சொன்னார்:நியாயங்களைக் காயப்படுத்தினால்கூட பரவாயில்லை. ஆனால் காயங்களை நியாயப்படுத்தக் கூடாது என்று.

ஒருநாள் அந்தக் கல்லறைத் தோட்டத்தில் இரண்டு இளைஞர்கள் தங்களின் அப்பாக்கள் இறந்த ஓராண்டை நினைத்து அவரவர் அப்பாக்கள் கல்லறைக்குமுன் உட்கார்ந்திருந்தார்கள். அந்த இளைஞர்களில் ஒருவன் பணக்காரன். மற்றவன் பரம ஏழை. பணக்கார இளைஞன் அந்த ஏழையிடம், “என் தந்தையின் கல்லறைப் பளிங்கு கல்லால் கட்டப்பட்டு பளிச்சென்று விளங்குகிறது” என்று பூரிப்போடு சொன்னான். அதற்கு ஏழை இளைஞன், “நீ சும்மா இரு. அந்தக் கனமான கல்பாரத்திலிருந்து உன் அப்பா எழுந்திருப்பதற்கு முன் என் அப்பா வானுலகமே போய்ச் சேர்ந்து விடுவார்” என்று பவ்யமாகப் பதில் சொன்னான்.
அன்பர்களே, இந்தச் சம்பவத்தை வாசித்த போது, “நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி, அதில் வாழ்வதில்லை நீதி” என்ற அந்தத் தத்துவப் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வந்தன. ஆடி அடங்கும் நிலையில்லாத இந்த மனித வாழ்க்கைக்கு இறுதியில் தேவை ஆறடி நிலம்தானே. பளிங்குக் கல்லாலோ அல்லது வெறும் மண்ணாலோ எதனால் மூடினாலும், அவன் உலகை ஆண்ட மாமன்னனோ அல்லது தெருவோரம் ஆதரவற்றுக் கிடந்த அனாதையோ யாரானாலும் எந்த ஒரு மனிதனுக்கும் கடைசியில் தேவையானது ஆறடி நிலம்தான்.

பட்டினத்தார் பாடினார் – பாடையில் கொண்டுபோய் பிணத்தை எரித்துவிட்டு வீடு வந்து சேர்ந்ததும் அவரவர் வேலையை பார்க்கத் துவங்கி விடுகின்றனர். இத்தகைய வாழ்விலா இத்தனை மோசடிகள் என்று. மற்றுமொரு யோகி சொன்னார் – மனிதன் வாழும் போது தனது தொப்பையையும் தொந்தியையும் நினைத்து நினைத்து வாழ்கிறான். ஆனால் கழுகுகளும் காகங்களும் பிணந்தின்னிகளும் அந்தத் தொந்தி எப்பொழுது தங்களுக்குக் கிடைக்கும் என்ற ஆவலோடு காத்திருக்கின்றன என்று.
ஆனால் அவன் இறந்தும் வாழ்வதற்தகுத் தேவையானது நேர்மை. உண்மை, நன்மை. இயேசுவும், “ஒருவர் இவ்வுலகமனைத்தையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தனது ஆன்மாவை இழந்தால் அதனால் வரும் பயன் என்ன”? என்ற கேள்வியை எழுப்பினார்.

ஒருசமயம் டிஃப்யு என்ற பேச்சாளரும் மார்க்ட்வெயினும் பேசுவதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் மார்க்ட்வெயின் பேசினார். அவரது பேச்சை மிகவும் இரசித்த மக்கள் பலமாகக் கைதட்டி வாழ்த்தினார்கள். அதன்பிறகு பேச எழுந்த டிஃப்யு, அன்பார்ந்தவர்களே, நானும் மார்க்ட்வெயினும் பேச வருவதற்கு முன்பு ஓர் உடன்பாடு செய்து கொண்டோம். நான் தயாரித்து வந்துள்ள உரையை அவர் பேசுவது என்றும், அவர் தயாரித்ததை நான் பேசுவது என்றும் முடிவு செய்திருந்தோம். எனவே அவர் பேச்சினைக் கேட்டீர்கள். நன்றி. ஆனால் அவர் தயாரித்த பேச்சின் பிரதியை நான் தவற விட்டுவிட்டேன். அதில் ஒன்றுகூட எனக்கு நினைவில்லை என்று சொல்லி அமர்ந்து விட்டார். மக்கள் இப்போதும் பலமாகக் கைதட்டி டிஃப்யுவை வாழ்த்தினார்கள். இந்தச் சம்பவம் நமக்கு எதை உணர்த்துகிறது? சாமார்த்தியமான பேச்சு எப்போதுமே மதிக்கப்படும் என்று நினைப்பது சரியல்ல. ஆனால் உண்மையோடு வெளிவரும் சமார்த்தியம் மட்டுமே நிலைக்கும் என்பதயே. இங்கர்லால் என்பவர் சொன்னார்- நேர்மையான செயல்கள் அனைத்துமே நமக்கு இன்பமளிப்பவை. மற்ற யாவும் துன்பம் தருபவை என்று.

சில மனிதரைப் பார்க்கும் போதெல்லாம் இவ்வளவு நல்ல மனிதர்களாக எப்படி இவர்களால் வாழ முடிகின்றது என்று எனக்கு நானே வியந்ததுண்டு. நான் பார்த்தவரை அவர்கள் வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடு, கண்ணியம், நேர்மை, நன்மை, உண்மை இருக்கின்றன. தான் செய்யும் வேலையில் பிரமாணிக்கம், முணுமுணுக்காமல் பிறருக்கு உதவும் பண்பு, வேலையின் பளுவை வெளியே சொல்லாமை, தேவையில் இருப்போருக்கு உதவி இப்படி பல. இவையெல்லாம் சிலருக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது? அன்பு வானொலி நேயர்களே, வாருங்கள் சேர்ந்து சிந்திப்போம். உங்கள் சிந்தனைகளின் வெளிப்பாடுகளை அஞ்சல்வழி பகிர்ந்து கொள்ள வாருங்கள்.

என்னைப் பொருத்தவரை எனக்குள்ளே என்ன இருக்கின்றதோ அவையே வெளிவரும் என்பது. ஒருவர் சந்தையில் பலூன்களை விற்று பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தார். அவரிடம் பல வண்ணங்களில் பலூன்கள் இருக்கும். வியாபாரம் மந்தமடையும் நேரங்களில் ஹீலியம் நிரப்பிய பலூன் ஒன்றை வானில் பறக்கவிடுவார். அது மேலே பறந்து செல்வதைப் பார்க்கும் சிறார் பலூன் வாங்க ஓடி வருவார்கள். அதனால் அவரது விற்பனை உயரும். அவர் நாள் முழுவதும் இதுமாதிரியே செய்து வருவார். ஒருநாள் அவரது சட்டையை யாரோ பின்னால் பிடித்து இழுப்பது போல் உணர்ந்து திரும்பிப் பார்த்தார். அங்கே ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் அந்த வியாபாரியிடம், நீங்கள் ஒரு கறுப்புப் பலூனை மேலே விட்டால் அதுகூடப் பறக்குமா? என்று கேட்டான். அந்தக் கேள்வியின் உள்அர்த்தத்தை உணர்ந்த வியாபாரி அவனிடம், குழந்தாய், இந்தப் பலூன் மேலே எழும்பிச் செல்வதற்கு இதன் நிறம் காரணமல்ல, மாறாக அதற்கு உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே காரணமாகும் என்றார்.
 நமக்குள்ளே என்ன இருக்கிறதோ அதுவே, நாம் யார்? நமது மனப்பாங்கு என்ன? என்பதைக் காட்டும். மனிதன் தனது மனநிலையை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது வாழ்க்கையையே மாற்றிக் கொள்ளலாம். மனிதா நீ சிகரத்தைத் தொட விரும்புகிறாயா, ஹீலியம் நிரப்பிய பலூன் போன்று மேலெழும்ப ஆசைப்படுகிறாயா, உன் சொந்த வாழ்க்கையில் நேர்மை உண்மை நன்மை என்ற தாரக மந்திரத்தை ஏற்றுக் கொள். நீ உயர்வாய். பிறர் உயர வழிகாட்டியாக அமைவாய்.







All the contents on this site are copyrighted ©.