2010-04-07 15:42:51

இந்தியாவின் மக்கள் கணக்கெடுப்பு முயற்சி குறித்து இந்தியத் திருச்சபை தலைவர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்


ஏப்ரல்07,2010 இந்தியாவில் ஏப்ரல் முதல் தேதி ஆரம்பமான மக்கள் கணக்கெடுப்பு முயற்சியில் மதத்தை எவ்வாறு அரசு நோக்குகிறது என்று இந்தியத் திருச்சபை பொறுப்பாளர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் கணக்கெடுப்பு என்பது சமுதாய மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஒரு அடித்தளம் என்பதால், இந்த முயற்சியைத் தாங்கள் பெரிதும் வரவேற்பதாக கூறும் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், இந்த கணக்கெடுப்பில் மதம் எப்படி கணக்கேடுக்கப்படுகிறது என்பது குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
இந்திய அரசியல் அமைப்பின் படி, கத்தோலிக்க மதத்திற்கு அல்லது கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களுக்கு அரசு சலுகைகள் இல்லை என்பதால், பல கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க தலித் மக்கள் தங்கள் மதங்கள் குறித்த தகவல்களைச் சொல்லாமல் விட்டு விடுகின்றனர் என்றும், இதனால், அரசு எடுக்கும் கணக்கெடுப்பிற்கும், திருச்சபை அல்லது பிற சபைகள் எடுக்கும் கணக்கெடுப்பிற்கும் வேறுபாடுகள் நிலவுகின்றன என்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருட் தந்தை Babu Joseph கூறியுள்ளார்.
தலித் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் குறித்த அரசியல் சட்ட தீர்திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படவேண்டுமேன்று கத்தோலிக்கத் திருச்சபையும், பிற கிறிஸ்தவ சபைகளும் இஸ்லாமிய தலைவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்றும் அருட் தந்தை Babu Joseph மேலும் கூறினார்.பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு உலகிலேயே மிகப் பெரும் கணக்கெடுப்பு என்பதும், 120 கோடி மக்கள் நிறைந்த இந்தியாவில் இந்தப் பணியில் 25 லட்சம் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.