2010-04-05 15:37:35

இக்காலத்தில் எழுந்துள்ள தேவையற்ற வதந்திகளால் இறைமக்கள் அஞ்சவில்லை - கர்தினால் அஞ்சேலோ சொதானோ


ஏப்ரல்05,2010 கிறிஸ்துவின் நற்செய்தியை எடுத்துரைப்பதில் நீங்கள் காட்டும் உறுதிக்கும் துணிவுக்கும் நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம் என்று திருத்தந்தைக்குத் தன் நன்றியை எடுத்துரைத்தார் கர்தினால் அஞ்சேலோ சொதானோ (Angelo Sodano).
இஞ்ஞாயிறன்று காலை புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலிக்கென கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு முன்னிலையில், திருப்பலி ஆரம்பமாவதற்கு முன், கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் சொதானோ இவ்வாறு கூறினார்.
அண்மைக் காலங்களில் திருத்தந்தை சந்தித்து வரும் பல்வேறு சவால்களின் நடுவில் அவருக்கு இறைமக்கள் அனைவரின் முழு ஆதரவும் உண்டு என்று கூறிய கர்தினால் சொதானோ, இக்காலத்தில் எழுந்துள்ள தேவையற்ற வதந்திகளால் இறைமக்கள் அஞ்சவில்லை என்றும், வரலாற்றில் விசுவாசிகள் சந்தித்துவரும் போராட்டங்களில் இதுவும் ஒன்று எனவும் கூறினார்.திருத்தந்தையுடன் திருச்சபையில் உழைக்கும் கர்தினால்கள், உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் உள்ள 3000க்கும் மேற்பட்ட மறைமாவட்டங்களை நிர்வகிக்கும் ஆயர்கள், பல்வேறு பங்குதளங்களில், மருத்துவ மனைகளில், கல்வி நிலையங்களில் இன்னும் பல மறைபணித் தளங்களில், உலகத்தில் யாரும் செல்லமுடியாத இடங்களில் கிறிஸ்துவுக்கு சாட்சியாக பணி புரியும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட அருட்பணியாளர்கள் அனைவரும் திருத்தந்தையுடன் இணைந்து உள்ளனர் என்று கர்தினால் வலியுறுத்தினார். இந்த உயிர்ப்புப் பெருவிழாவன்று நல்லாயன் கிறிஸ்து உமது பணியில் உம்மைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டுகிறோம் என்று கர்தினால் சொதானோ எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.