2010-04-03 14:21:03

வாழ்க்கை விளக்கில் இரக்கத்தின் எண்ணெய் ஒருபோதும் தீர்ந்துவிடக்கூடாது - திருத்தந்தை


ஏப்ரல்03,2010 கிறிஸ்துவிடமிருந்து வருகின்ற மகிழ்ச்சி, பொழுதுபோக்குகளிலிருந்து நாம் பெறுகின்ற மகிழ்ச்சியைவிட வித்தியாசமானது, கிறிஸ்துவிடமிருந்து வருகின்ற மகிழ்ச்சி உண்மையானது மற்றும் துன்பங்களோடு அது இணைந்து செல்லக்கூடியது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் புனித வியாழனன்று புனித எண்ணெய் மந்திரிக்கும் திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை தனது மறையுரையில், கிறிஸ்துவின் மகிழ்ச்சி குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்.

திருவருட்சாதனங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்யின் கிறிஸ்தவ அடையாளம் குறித்த விளக்கங்களையும் திருத்தந்தை வழங்கினார்.

உண்மையில், பல்வேறு திருவருட்சாதனங்களில், மந்திரிக்கப்பட்ட எண்ணெய் கடவுளின் இரக்கத்தின் அடையாளமாக எப்போதும் இருக்கின்றது என்றும், நம் வாழ்க்கையின் விளக்கில் இரக்கத்தின் எண்ணெய் ஒருபோதும் தீர்ந்துவிடக்கூடாது என்றும், வெள்ளப்பெருக்கு முடிந்து விட்டதன் அடையாளமாக ஒலிவக்கிளைப் பயன்படுத்தப்பட்டது, இந்த ஒலிவக்கிளையும் ஒலிவ எண்ணெய்யும் அமைதியின் அடையாளங்களாக மாறின என்றும் திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்துவே ஒலிவக்கிளையைக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். அவர் உலகில் அமைதியைக் கொண்டு வந்தார். அவர் கடவுளின் மீட்பளிக்கும் நன்மைத்தனத்தை அறிவித்தார். அவரே நம் அமைதி என்றும் அவர் கூறினார்.

எனவே சிலுவைப் பேருண்மை ஒப்புரவின் பேருண்மையாக ஏற்று வாழும் கிறிஸ்தவர்கள் அமைதியின் மக்களாக இருக்க வேண்டும், கிறிஸ்து வாளின் வழியாக அல்ல, மாறாக சிலுவையின் வழியாக வெற்றி கண்டார், அதன் வழியாகக் காழ்ப்புணர்வை வென்றார். அவரின் மாபெரும் அன்பு மூலமாக அதனை வென்றார் என்றும் அவர் தெரிவித்தார்.

அருட்பணியாளர்களும் கிறிஸ்துவோடு ஒன்றித்து அமைதியின் மனிதர்களாகவும், வன்முறையை எதிர்ப்பவர்களாகவும் அன்பின் மாபெரும் வல்லமையில் நம்பிக்கை வைப்பவர்களாகவும் வாழவும் அழைக்கப்படுகிறார்கள் என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

தூயஆவியே மகிழ்ச்சியின் எண்ணெய், கிறிஸ்துவிடமிருந்து பெறும் கொடையாக அவர் அதனை நமக்குத் தருகிறார், இந்த மகிழ்ச்சியானது இந்த நவீன சமுதாயம் முன்வைக்கும் பொழுதுபோக்குகள் மற்றும் மகிழ்ச்சியிலிருந்து வேறுபட்டது என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.